Sunday , October 13 2024
Breaking News
Home / செய்திகள் / கொரோனா – வரமா, சாபமா

கொரோனா – வரமா, சாபமா

Nanda Third Eye

கொரோனா – வரமா, சாபமா

July 24, 2020

நம் மனித சமுதாயம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் நிகழ்வை தற்சமயம் சந்தித்துக் கொண்டுள்ளது. ஆம், கொரோனா என்ற ஒரு கொடிய நோய் உலக மக்கள் அனைவரையும் மிகவும் அச்சுறுத்திக்கொண்டுள்ளது. மாபெரும் பொருளாதார முன்னேற்றம் கண்டுள்ள முதற்கட்ட நாடுகள் முதல் உலகின் மூன்றாம் நிலை நாடுகள் வரை அனைத்தும் கண் பிதுங்கி நிலைகுலைந்து என்ன செய்வதென அறியாமல் திண்டாடிக்கொண்டுள்ளன.

இதுவரை நம் மனிதகுலம் கால வரையறையை BC, AD அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு, கிறிஸ்துக்கு பின்பு என வரையறுத்தது. ஆனால் தற்போது அதே BC, AC என்ற காலக்குறியீடு கொரானாவுக்கு முன், கொரானாவுக்கு பின் என்ற மாற்றி அமைக்கப்படவேண்டிய அளவுக்கு இவ்வுலகம் கொரோனாவின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
 
எவ்வளவு பலம் பொருந்திய மனிதராயினும் பலமற்ற மனிதராயினும், எவ்வளவு புகழ் பெற்ற மனிதராயினும் சாதாரண மனிதராயினும், எவ்வளவு பொருள் படைத்த மனிதாராயினும் பொருளற்ற மனிதராயினும், எச்சாதி   மனிதராயினும், எம்மதத்தை சார்த்தவராயினும், எந்நாட்டை சார்ந்தவராயினும்,  எம்மொழி பேசுபவராயினும் கொரோனாவின் முன் அனைவரும் சமமே. சாதரணமாக நாம் அனைவரும் கடவுள் முன் சமமே என்று பலர்கூறக்கேட்டுள்ளோம், ஆனால் தற்போது கொரோனாவின் முன் அனைவரும் சமமே என்று கண்கூட கண்டுகொண்டோம். என்ன சாதி, என்ன மதம், என்ன மொழி, என்ன இனம், என்ன நாடு என்று பார்த்து வரவில்லை இந்த கொரோனா. அதற்கு தெரிந்திருக்கிறது நாம் அனைவரும் மனிதர்கள் என்று.
 
பல்லாயிரம் ஆண்டுகளாக இறைவனாலும் ஒன்று படுத்தமுடியாத, பல்வேறு கூறுகளாக பிரிந்துகிடந்த மனித சமுதாயத்தை ஒரு சில நாட்களில் மாதங்களில் மனிதர்களிடையே எவ்வித வேறுபாடுகளும் வித்தியாசங்களும் இல்லை நாம் அனைவரும் ஒன்று தான் என்ற எண்ணத்தை மிக ஆழமாக பதித்திருக்கிறது இந்த கொரோனா.
 
பொருளாதார முன்னேற்றம் மட்டுமே வாழ்க்கையின் வெற்றி என்ற அற்ப நம்பிக்கையில் உறவுகளின் உன்னதத்தை மறந்து, பெரியோரின் பண்புகளை மறந்து, படிப்பின் அடிப்படை நோக்கத்தை மறந்து, உற்ற நண்பர்களின் நட்பை மறந்து, நம்மை ஆளாக்கிய குடும்பத்தின் தியாகத்தை மறந்து, நாட்டை மறந்து எதனையும் விட எவரையும் விட பணம் என்ற ஒன்றே மிகவும முக்கியம் எனக்கருதி ஓடிக்கொண்டிருந்த நம் அனைவருக்கும் கன்னத்தில் அறைந்தாற்போல் உண்மையை உணரவைத்திருக்கிறது இந்த கொரோனா.
 
இதுவரை நாம் அனைவருமே அலுவலகங்களுக்கோ, தொழிற்சாலைகளுக்கோ, பாடசாலைகளுக்கோ தொடர்ந்தாற்  போல ஒரு பத்து நாட்கள் விடுமுறையெடுத்தால் கூட இவ்வுலகமே நின்று போய்விடுவது போல வாழ்ந்து வந்தோம். நாம் அனைவரும் இவ்வுலகையே நாம் தான் தாங்கிக்கொண்டுள்ளதாகவும் நாம் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது என்றும் எண்ணம் கொண்டிருந்தோம். ஆனால் தற்போது மூன்று நான்கு மாதங்களாக எதுவும் நம்மால் நடப்பதில்லை, நடக்கும் நிகழ்வுகளின் ஒரு சிறிய துகளின் அளவே நமது செயல்பாடு என்று உணரவைத்திருக்கிறது இந்த கொரோனா. 
 
பொருளாதார அளவில் பெரும்பான்மையான மக்களுக்கு இந்த கொரோனா மிகவும் கெடுதலையே செய்துள்ளது, ஆம் பணத்தின் மதிப்பீடு அளவில். ஆனால் பணத்தின் மீது மனிதன் கொண்டுள்ள அடிப்படை புரிதலை மிகவும் விளங்கிக்கொள்ள உறுதுணையாக விளங்கியுள்ளது இந்த கொரோனா என்றால் அது மிகையில்லை. இதுவரை எவ்வளவு இருந்தாலும் போதவில்லை என்று எண்ணிக்கொண்டிருந்த மனிதனின் மனதில் தற்போது நாம் நலமாக வாழ எவ்வளவு இருந்தால் போதுமானது என்ற எண்ணத்தை உருவாகியுள்ளது இந்த கொரோனா. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பது நம் முன்னோர் வாக்கு. அவ்வுன்னதமான வாழ்விற்கு அடிப்படை வித்தாய் அமைந்துள்ளது இக்கொரோனா.
 
எப்போதுமே எப்படி பணத்தை ஈட்டுவது ஈட்டிய பணத்தை எப்படி பெருக்குவது அப்பணத்தை கொண்டு எந்த வாகனம் வாங்கலாம் எவ்வளவு தங்கம் வாங்கலாம் எவ்வளவு நிலம் வாங்கலாம் எங்கே வீடு வாங்கலாம் இன்னும் என்னென்னவெல்லாம் வாங்கலாம் என்று சர்வகாலமும் எண்ணிக்கொண்டிருந்த நாம், கடந்த மூன்று நான்கு மாதங்களாக பொருளின் மீது கொண்டிருந்த அளவில்லா அவாவினை மறந்து நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற நம் முன்னோரின் மந்திர வார்த்தையை உணர்ந்து நம் உடலையும் உயிரையும் காக்கும் நற்செயல்களில் நமது முழு கவனத்தையும் செலுத்த தொடங்கிவிட்டோம். நம்மிடம் எவ்வளவு குறைவற்ற செல்வம் இருப்பினும் அது நம் உயிரை காக்க உதவாது என்ற மாபெரும் உண்மையை நமக்கு உணரச்செய்திருக்கிறது இக்கொரோனா.
 
அதுமட்டுமல்லாமல் நாம் நலமாக இருந்தால் மட்டும் போதாது நமது அண்டை வீட்டாரும் எதிர் வீட்டாரும் அனைவரும் நலமாக இருந்தால் தான் நாமும் நலமாக இருக்க முடியும் என்ற மாபெரும் உண்மையை  உணர்த்தியிருக்கிறது இக்கொரோனா. ஏனெனில் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவுவது இக்கொரோனா. எனவே நம்மை சுற்றியுள்ளோர் நலமாக இருந்தால் மட்டும் தான் நாம் நலமாக இருக்க முடியும். எனவே இதுவரை தனக்காகவே சுயநலமாக இறைவனை வேண்டிக்கொண்டிருந்த மனிதனை தன்னை சுற்றியுள்ள அனைத்து மனிதர்களுக்காகவும் பொதுநலத்துடன் இறைவனை வழிபடசெய்துள்ளது இக்கொரோனா.
 
மக்களிடையே இத்தகைய பல உன்னதமான மாற்றங்களை கொண்டு வந்துள்ள இக்கொரோனா உண்மையில் வரமா சாபமா, நீங்களே நீதிபதி.
 
வாழ்க தமிழகம்!!!     வளர்க பாரதம்!!!
 
க.நந்தகுமார்
24/07/2020

Bala Trust

About Admin

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES