வீரப்பன் சொல்கிறார்…
எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த பொது ஒருநாள் நான் ராமாவரம் தோட்டத்திற்கு போயிருந்தேன். அப்போது ஒரு பழைய நாடக நடிகர் அங்க வந்திருந்தார். அவரிடம், என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள? என்று கேட்டேன். அவர் தயங்கித் தயங்கி குடும்பமே பட்டினி.. ஒன்றும் முடியவில்லை. நான் சின்னவரோட நாடகத்தில நடிச்சிருக்கேன் ஏதாவது உதவி கேட்கலாம்னு வந்திருக்கேன் என்றார். சரி உட்காருங்க எம்.ஜி.ஆர் வெளிய வந்ததும் கேளுங்க..செய்வார் என்றேன்.
சிறிது நேரம் கழித்து எம்.ஜி.ஆர் வெளியே வந்தார். தூரத்தில் நின்று அந்த நாடக நடிகரைப் பார்த்து, எப்படி வந்தே என்று சைகயால் கேட்டுவிட்டு இருந்து சாப்பிட்டுவிட்டுத் தான் போகணும் என்று சொல்லிவிட்டு,காரில் ஏறிச் சென்றுவிட்டார். அந்த நடிகரோ ஒன்றும் புரியாமல் தவிப்புடன் நின்றார்.
இருந்து சாப்பிட்டுவிட்டு போகச் சொன்னாருல்ல,மதியம் சாப்டுட்டு போங்க என்றேன். நான் எப்படிச் சாப்பிடுவது..என் குடும்பமே பட்டினியா இருக்கும் போது? என்றார் அவர். நான் ஒரு ஐநூறு ரூபா தருகிறேன், அத வச்சு சமாளியுங்கள் என்றேன். சந்தோஷப்பட்டார். மதியம் அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எம்.ஜி.ஆர் கோட்டையிலிருந்து வந்து விட்டார். அந்த நடிகரிடம்,மதியம் திரும்ப எம்.ஜி.ஆர் வெளியே புறப்படும்போது அவரைப் பார்த்து சொல்லிவிட்டுப் போங்க..என்றேன். சரி..என்றார். வெளியே வந்த எம்.ஜி.ஆர் அவரைப் பார்த்து ” சாப்பிட்டுவிட்டாயா ” என்று கேட்டு விட்டு காரில் ஏறிவிட்டார்.அந்த நடிகருக்கோ ஒரே பதற்றம். புறப்பட்ட கார் மீண்டும் நின்றது.எம்.ஜி.ஆர் சைகையால் அந்த நடிகரை அழைத்தார். அவர் காருக்கு அருகில் சென்று சற்று தள்ளி நிற்க…நெருக்கமாக அழைத்தார். அவரும் காருக்கு மிக அருகில் போய் நிற்க, சட்டென்று அவருடைய பாக்கட்டில் ஒரு கவரை யாருக்கும் தெரியாமல் எம்.ஜி.ஆர் வைத்துவிட்டார். கார் புறப்பட்டுச் சென்றுவிட்டது. அவர் என்னருகே வந்து கவரைப் பிரித்தார். அதில் பத்தாயிரம் ரூபாய் இருந்தது. அவர் கண்கள் கலங்கிப் போய் விட்டது.அவருடைய ஆனந்தக் கண்ணீரைக் கண்டு அவரைவிட எனக்குத் தான் அதிக சந்தோஷம். மறுநாள், திரும்ப தோட்டத்திற்கு சென்றிருந்த போது எம்.ஜி.ஆரிடம்
கேட்டேன்…” கஷ்டத்துல வந்த அந்த நடிகரை சாப்பிடச் சொன்னீங்க,ஆனா அவரப் பத்தி எதுவுமே அவர்கிட்ட கேட்காம போயிட்டீங்க.திரும்ப மதியம் வந்து அப்பவும் காருல ஏறிட்டீங்க. அந்த
நடிகர் ரொம்பவும் பதறிப் போயிட்டாரு. இவ்வளவுக்கும் பிறகு அவரைக் கூப்பிட்டு பாக்கட்டுல பத்தாயிரம் ரூபா வச்சு அனுப்புறீங்க. ஏன் அண்ணே அப்படிச் செஞ்சீங்க என்று கேட்டேன்.
சில கணங்கள் என்னை அமைதியாகப் பார்த்துவிட்டு அவர் சொன்னார். எப்பவும் கஷ்டப்பட்டு வர்றவங்களை அவங்க வாயால் பணம் கேட்க வைக்கக் கூடாது. அதுவும் அவர் கொஞ்சம் கூச்ச
சுபாவம் உள்ளவர். கேட்க சங்கடப் படுவார்.அவரா கேட்டா கம்மியாத் தான் கேட்டிருப்பார்.அதனால் தான் நம்மளா கொடுத்திடனும் என்றார். எனக்குத் தான் இப்ப கண் கலங்குச்சு. அவருடைய கொடை உள்ளம் பற்றியும் அவரது ரத்தத்தில் கலந்திருந்த அந்த ஈகை இயல்பு பற்றியும் இருவேறு கருத்துக்கு எப்பொழுதுமே இடமில்லை. அதனால் தான் அவர் இறந்தும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
Coursty to Jaffer (FB)