சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும், உள்ளாட்சித் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளை, அக்., 15க்குள் இடமாற்றம் செய்ய, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை, மாநில தேர்தல் கமிஷன், எடுத்து வருகிறது. அடுத்த மாதம், 4ம் தேதி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான, வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
3 ஆண்டுகளுக்கு மேல்அடுத்த கட்டமாக, சொந்த மாவட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அதிகாரிகள், ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் அதிகாரிகள் ஆகியோரை இடமாற்றம் செய்ய, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, மாநிலத் தேர்தல் கமிஷனர் பழனிசாமி, மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை:
இடமாற்ற உத்தரவு, உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு மட்டுமின்றி, காவல் துறையில், எஸ்.ஐ., முதல், ஐ.ஜி., அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் வரை பொருந்தும்.
காவல் துறையில், தனிப்பிரிவு, பயிற்சி, கம்ப்யூட்டர் பிரிவில் பணிபுரிவோருக்கு, இவ்விதி பொருந்தாது. மாநில அளவிலான அதிகாரிகளுக்கு, இடமாற்றம் பொருந்தாது.
தேர்தல் பணியின்போது, தண்டனைக்குள்ளானோரை, தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.
அனுமதி பெற வேண்டும்
**********************************
ஆறு மாதங்களுக்குள், ஓய்வு பெற உள்ள அதிகாரிகளை, இடமாற்றம் செய்ய வேண்டியதில்லை.
தேர்தல் பணிக்கு அவசியம் என, கருதப்படும் அலுவலர்கள், மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணிபுரிந்திருந்தால், அவர்கள் அப்பணியில் தொடர, மாநில தேர்தல் ஆணையத்தில், அனுமதி பெற வேண்டும்.
இடமாற்றம் பணிகளை, அக்., 15க்குள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.