Friday , September 20 2024
Breaking News
Home / இந்தியா / 7 பேர் விடுதலைக்கு ஆளுநர் எதிர்ப்பு! தமிழக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

7 பேர் விடுதலைக்கு ஆளுநர் எதிர்ப்பு! தமிழக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

திரு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழர்கள் ஏழு பேரையும் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்துக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாகவும் தனது எதிர்ப்பை அவர் தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கூறி விட்டதாகவும் என்று தி இந்து ஆங்கில நாளேட்டில் செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

7 பேர் விடுதலை தொடர்பாகத் தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது ஓராண்டுக்கும் மேலாக தமிழக ஆளுநர் முடிவு எதையும் தெரிவிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் தமிழக அமைச்சரவையின் முடிவை ஏற்று ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருமதி அற்புதம் அம்மாள் அவர்களை டெல்லிக்கு அழைத்துச்சென்று இந்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவை சந்தித்து இது தொடர்பாக வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் அதில் இல்லை. இந்நிலையில்தான் தமிழக ஆளுநர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதை அவர் ஏற்கனவே தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்து விட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இது தமிழக மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆளுநர் தமிழக அமைச்சரவையின் முடிவை நிராகரித்தால் மீண்டும் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பலாம். அவ்வாறு அனுப்பினால் ஆளுநர் அதை நிராகரிக்க முடியாது. இந்த சட்ட நிர்ப்பந்தம் இருப்பதால்தான் தமிழக ஆளுநர் அதில் முடிவெடுக்காமல் வைத்துள்ளார். ஆனால் தனது முடிவை அவர் தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்து விட்டதாக இப்போது தெரியவந்துள்ளது. அவ்வாறு அவர் தெரிவித்திருந்தால் எழுத்துபூர்வமாக நிராகரித்து அனுப்பும்படி தமிழக அரசு வலியுறுத்தியிருக்க வேண்டும். அதைச் செய்யாததன் மூலம் ஆளும் அதிமுக அரசும் ஆளுநரும் சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு எதிராக நாடகம் ஆடுவதாகவே நாம் எண்ணத் தோன்றுகிறது.

தமிழக ஆளுநர் தம்மிடம் கூறியது உண்மையா இல்லையா என்பதைத் தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இது அவரது கடமையாகும். இல்லாவிட்டால் 7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது ஆளுநர் மட்டுமல்ல அதிமுக அரசும்தான் என்பதாகவே பொருள்படும்.

இவண்
தொல் திருமாவளவன்
நிறுவனர் – தலைவர்,
விசிக.

Bala Trust

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES