கடந்த 14-ந்தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகை விழாவில் பேசிய ரஜினி பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரஜினி மீது போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டு வருகிறது. திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் ரஜினியை கண்டித்து அறிக்கையும் வெளியிட்டனர். அரசியல் கட்சியினரும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெரியார் பற்றிய விமர்சனத்துக்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் நாளை மறுநாள் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்று கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்து இருந்தது.
இதையடுத்து ரஜினி வீட்டு முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை போயஸ் கார்டனில் தனது வீட்டு முன்பு திடீரென ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்து பெரியார் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கம் அளித்தார். ரஜினி அளித்த பேட்டி வருமாறு:-
துக்ளக் ஆண்டுவிழாவில் நான் பேசியது சர்ச்சையாகி உள்ளது. சேலத்தில் 1971-ம் ஆண்டு அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என்று சொல்லி வருகிறார்கள். அவுட்லுக் உள்ளிட்ட பத்திரிகைகளில் அந்த சம்பவம் செய்தியாக வெளியாகி உள்ளது. (இது தொடர்பான பத்திரிகை ஆதாரங்களை காண்பித்தார்)
சேலத்தில் நடந்த ஊர்வலத்தில் ராமன், சீதை, லெட்சுமணன் சிலைகள் உடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து எடுத்து செல்லப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.
இல்லாத ஒன்றையோ, நடக்காத ஒன்றையோ, கற்பனையாகவோ நான் சொல்லவில்லை. அப்போது தர்ணா செய்ததை லட்சுமணன் (பா.ஜனதா பிரமுகர்) ஊர்ஜிதப்படுத்தி உள்ளார். நான் நடக்காத ஒன்றை சொன்னதாக சர்ச்சையாகி வருகிறது. நான் கேள்விப்பட்டதையும், செய்தியாக வெளியானதையும் வைத்துதான் பேசினேன்.
இதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும், வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். சாரி. என்னால் மன்னிப்பு கேட்க முடியாது, வருத்தம் தெரிவிக்கவும் முடியாது என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்.
இவ்வாறு ரஜினி கூறினார்.