ஒட்டாவா
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து கனடாவில் இந்தியர்கள் பேரணி நடத்தினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் தூதரக உறவு ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனால் இருநாடுகளிடையே நல்லுறவு சீர்கெட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் கூடி விவாதித்தது. எனினும் பாகிஸ்தானின் கோரிக்கைக்கு சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்தது. ஆனால் மற்ற நாடுகள் அனைத்தும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டன. இந்நிலையில ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் கொண்டாடி வருகின்றனர்.
கனடாவில் ஒட்டாவா நகரில் இந்திய சுதந்திர தின விழா வார இறுதி நாளன நேற்று கொண்டாடப்பட்டது. மேலும் ஒட்டாவா நகரில் வசிக்கும் இந்தியர்கள் இந்திய தேசியக்கொடியை ஏற்றி ஊர்வலமாக சென்றனர்.
அப்போது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து பதாகைகளை ஏந்தி சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டாவா மேயர் ஜிம் வாட்ஸன், கனடா நாட்டு அமைச்சர் லிஸா மேக்லியோடு ஆகியோர் கலந்து கொண்டனர்.