கலாமின் கனவை, கலைஞரின் விருப்பத்தை
நிறைவேற்றுமா தமிழக அரசு ?
– விஞ்ஞானி டாக்டர்.ஏ.சி. காமராஜ், B.E.(Hons)
மத்திய அரசின் நதிகள் இணைப்பு உயர்மட்ட நிபுணர் குழுவின் முன்னாள் உறுப்பினர்
தலைவர் – நவீன நீர்வழிச்சாலை
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் A.P.J.அப்துல் கலாம் பிறந்த தினத்தையொட்டி பொறியாளர் விஞ்ஞானி டாக்டர் ஏ.சி. காமராஜ் அறிக்கை,
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் மக்கள் ஜனாதிபதியாக வாழ்ந்தார். இன்றளவும் மக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் கனவு காணுங்கள் என்றார். ஆனால் அவருடைய கனவு இன்னும் நிறைவேறாமல் உள்ளது.
டாக்டர். கலாம் அவருடைய “இளைஞர்கள் காலம்” எனும் புத்தகத்தில் “தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலை” தனது கனவுத் திட்டம் என எழுதியுள்ளார். அவருடைய பிறந்த நாளான இன்று அவருடய கனவை விரைவிலே நிஜமாக்க தொடர்ந்து பாடுபடுவோம்.
உலகம் போற்றும் நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை ஜனாதிபதியாக இருந்தபொழுது டாக்டர் அப்துல் கலாம் பெற்று பீகார், கேரளா, ஆந்திரா என பல மாநில சட்டசபைகளில் பேசி வலியுறுத்தியுள்ளார். இதில் பீகார் மாநில அரசு நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை தனது மாநிலத்தில் செயல்படுத்த ஏற்றுக்கொண்டது.
தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் டாக்டர் ஜெயலலிதா & டாக்டர் கலைஞர் இருவரிடமும் நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த டாக்டர். கலாம் வலியுறுத்தினார். அதன் பிறகு டாக்டர் ஜெயலலிதா இத்திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேர்த்தார்கள். டாக்டர் கலைஞர் அவர்களும் ” பொறியாளர் ஏ.சி.காமராஜ் அவர்களின் நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை அவரது ஆலோசனைகளைப் பெற்று செயல்படுத்திட வேண்டும்” என்று அறிக்கை வெளியிட்டார்.
ஒரு முறை அப்துல்கலாம் கேட்டார் ” நவீன நீர்வழிச்சாலை வந்தால் இராமநாதபுரத்திற்கு தண்ணீர் வருமா ?” என்று. நான் “நிச்சயம் வரும்” என்று கூறியதோடு, எப்படி வரும் என்றும் விளக்கினேன். இந்தியாவிற்கே ஜனாதிபதியாக இருந்தாலும் சொந்த ஊர்க்கு நன்மை சேரவேண்டும் என விரும்பிய உன்னத தமிழர் மாமனிதர் கலாம்.
இந்தாண்டு நல்ல மழை பெய்தும் இராமநாதபுரத்துக்கு தண்ணீர் போதுமானளவு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கலாமின் கனவுத் திட்டம் நவீன நீர்வழிச்சாலை செயல்பாட்டுக்கு வரும் பொழுது, இராமநாதபுரம் உள்ளிட்ட அனைத்து ஊர்களுக்கும் தண்ணீர் வழங்க முடியும்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் அனைத்து ஆறுகளிலிருந்தும் சுமார் 177 டி.எம்.சி. தண்ணீர் கடலுக்கு செல்கிறது. (விஜயராகவன் கமிட்டி அறிக்கை). இந்த தண்ணீரைக் கொண்டு வைகை அணையை 30 முறை நிரப்பலாம். இந்தாண்டு மட்டும் காவிரியில் இருந்து கடலுக்கு சென்ற தண்ணீரைக் கொண்டு வைகை அணையை 75 முறை நிரப்பலாம்.
இவ்வாறு வீணாகும் வெள்ளநீரைத் தேக்கி குடிநீர், பாசனம் போன்றவற்றுக்கு பயன்படுத்தவே நவீன நீர்வழிச்சாலைத்திட்டம் கொடுக்கப்பட்டது. மதுரைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு மட்டும் ரூ.1300 கோடி, சிவகங்கைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ரூ.1200 கோடி, இராமநாதபுரத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு பல கோடி என தமிழக அரசு பல்வேறு திட்டங்களுக்கு செலவு செய்கிறது.
ஆனால் நமது நவீன நீர்வழிச்சாலைத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் இந்த மாவட்டங்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குடிநீர் பிரச்சனையே தீரும். அதோடு ஏராளமான வேலைவாய்ப்புக்கள் உண்டாகும். இத்திட்டத்திற்கு அரசுக்கு ரூ.1000 கோடி கூட செலவு ஆகாது. மத்திய அரசு இதை தேசிய திட்டமாக அறிவித்து பணம் கொடுப்பார்கள். கூடவே தனியார் முதலீடும் கிடைக்கும்.
“முடியும்” என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர் சமுதாயம் தான் இந்த திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுக்க வேண்டும் என கூறியதை வேதவாக்காக கருதி ஏராளமான இளைஞர்கள் நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்திற்காக செயல்பட்டு வருகிறார்கள். சென்னையை சேர்ந்த இளைஞர், நவீன நீர்வழிச்சாலை திட்ட ஆர்வலர் திரு.சித்து ஜி.எஸ்.எம் NATIONAL SMART WATERWAYS MISSION & #dreamofdrkalam# என்கிற பதாகையை தயார் செய்து பிரபலங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணவு ஏற்படுத்தவுள்ளார். முதற்கட்டமாக, அந்த விழிப்புணர்வு பயணத்தை மதுரையிலிருந்து துவக்கி வைக்கும் விதமாக நீர்வழிச்சாலைத் திட்டத்தின் தந்தை விஞ்ஞானி ஏ.சி.காமராஜ் அவர்களிடம் டாக்டர். அப்துல் காலம் பிறந்தநாளான இன்று பதாகையை கொடுத்து ஆசி பெற்றுக்கொண்டார்.
இளைஞர்களின் இந்த முயற்சி வெற்றியடைய, தமிழக அரசு கலாமின் கனவையும், கலைஞரின் விருப்பத்தையும் நிறைவேற்றும் விதமாக உடனே இத்திட்டத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். .
இக்கூட்டத்தில் நவீன நீர்வழிச்சாலை பேரியக்க நிர்வாகிகள் திரு. ஆர். முருகப்பன் மற்றும் கே .ஆர். சுப்ரமணியன் கலந்துகொண்டனர்