தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பாக ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் முருகானந்தம், மாநில பொதுச் செயலாளர் தாமோதரன், மாநில துணை பொதுச்செயலாளர்கள் மகுடீஸ்வரன், பஞ்சவர்ணம், கூட்டுறவு சங்கத் தலைவர் கண்ணன்,மதுரை மாநகராட்சி அனைத்து பணியாளர் சங்க செயலாளர் கே.டி.கே துரைக்கண்ணன், சி.ஐ.டி.யு மதுரை மாநகராட்சி அனைத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநகராட்சிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் தூய்மைப்பணி, தெருவிளக்கு பராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் உள்ளது. தற்போது வரி வசூல் பணி, தூய்மைப்பணி, தெருவிளக்கு பராமரிப்பு பணி, குடிநீர் வழங்கும் பணியை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்கும் நிலை ஏற்படுகிறது. இனிவரும் காலங்களிலும் இதுவே தொடரும் என அறிவிப்பு தமிழக அரசின் தனியார் மயப் போக்கினை ஆதரிக்கும் செயலாக உள்ளது .இதனால் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாத நிலை ஏற்படுவதுடன் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் அரசு வேலை என்பது மறுக்கப்படுவதுடன் மாநகராட்சி ஊழியர்களின் வாரிசுதாரர்களின் கருணை அடிப்படை பணி நியமன வாய்ப்புகளும் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழக முதல்வர் மாநகராட்சிக்களுக்காக வெளியிடப்பட்ட அரசாணை எண் (152) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை நாள் (20/10/2022) ஐ பரிசீலனை செய்து "டி"பிரிவு ஊழியர்களுக்கான பணியிடங்களை தோற்றுவிக்கவும், ஏற்கனவே பணிபுரியும் மாநகராட்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு பெறும் வகையில் புதிய அரசாணை வெளியிடுமாறு சங்கத்தின் சார்பாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.