மயிலாடுதுறை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு! உடன் நடவடிக்கைகள் எடுக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் முறையாக உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என்பதே அரசின் முதன்மையான குறிக்கோள் ஆகும்.ஆனால்மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஏற்கனவே வழங்கப்படும் குறிப்பிட்ட அளவு கோதுமை வழங்கப்படுவதில்லை, மிகவும் குறைவாக வழங்கப்படுகிறது என்னும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் இலவசமாகவும் குறைந்த விலைக்கும் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் வறுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாகஒரு வேளைகூட உணவு இல்லாமல் இருப்போரே இல்லை என்னும் நிலையை உருவாக்கவே அரசு முயற்சிகள் செய்து வெற்றியும் பெற்றுள்ளது என்று கூறலாம்.அதனடிப்படையில் ரேஷன் பொருட்களைக் கொண்டு நூற்றுக்கணக்கான ஏழை,எளிய நடுத்தர குடும்ப மக்கள் தங்கள் உணவு தேவையை நிறைவேற்றி வருகிறார்கள். ரேஷன் கடைகளில் இருந்த குறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தனிக்கவனம் செலுத்தி சரிசெய்து தற்பொழுது தரமான அரிசி, பருப்பு. எண்ணெய் வகைகள் வழங்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்ற நிலையில், கோதுமை மட்டும் அனைத்து குடும்பஅட்டை தாரா்களுக்கும் தடையின்றி முறையாக கிடைப்பதில்லை என்னும் குற்றச்சாட்டு மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உள்ள 350-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் இருந்து வருகிறது. இத்தகைய சூழல் கடந்த மூன்று மாதங்களாக நீடித்து இருப்பதாகவும் உடனடியாக ரேஷனில் கோதுமையையும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோருகின்றனர். மேலும் மாநிலம் முழுவதும் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு காரணம் என்ன என்று கேட்டால் மத்திய அரசு வழங்க வேண்டிய கோதுமையின் அளவினை தமிழ்நாடு உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு வழக்கமாக வழங்குவதை விட பல மடங்கு குறைவாக அனுப்புவதாக அரசின் வழங்கல் அலுவலர்கள் தெரிவிக்கின்றார்கள். கோதுமை அளவை குறைக்காமல் தமிழ்நாட்டுக்கு பெற்று தருகின்ற பொறுப்பை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கவர்னர் ஆர்.என். ரவி போன்றோர் ஏற்க வேண்டும். தமிழகத்தின் நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் என்பது இதன்மூலம் நிரூபிக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட கோதுமையை வலியுறுத்தி பெற்றுத்தர வேண்டும் என்றும், அரிசியோடு நார்சத்து அதிகமுள்ள கோதுமையை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் கனிசமாக அதிகரித்து வருவதாலேயே அனைத்து ரேஷன் கடைகளிலும் கோதுமை தேவையும் ஏற்பட்டுள்ளது என்றும், ஆகவே இச்சூழலை உணர்ந்து மக்களின் நலன்கருதி கோதுமை தட்டுப்பாட்டை நீக்கி வழங்கிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.