Sunday , October 13 2024
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் இன்று அதிகாலை நின்றிருந்த சுற்றுலா ரயிலில் தீப்பற்றியதில் 9 பேர் பலி. 6 பேர் படுகாயம்

மதுரையில் இன்று அதிகாலை நின்றிருந்த சுற்றுலா ரயிலில் தீப்பற்றியதில் 9 பேர் பலி. 6 பேர் படுகாயம்

மதுரையில் இன்று அதிகாலை நின்றிருந்த சுற்றுலா ரயிலில் தீப்பற்றியதில் 9 பேர் பலி. 6 பேர் படுகாயமடைந்தனர்

மதுரை,ஆக.26-

மதுரை ரயில்வே நிலையம் அருகே இன்று அதிகாலை நின்றிருந்த சுற்றுலா ரயிலில் தீப்பற்றியதில் 9 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.

ரயிலில் பயணிகள் சட்டவிரோதமாக சமையல் எரிவாயு சிலிண்டரை கொண்டு சென்றதே விபத்துக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் உ.பி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 3 பேர் பெண்கள், 4 பேர் ஆண்கள் மற்றும் ஒருவரின் அடையாளம் தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன? கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மிகப் பயணமாக 60-க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர் தமிழகம் வந்தனர். இவர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனிதத்தலங்களுக்கும் சென்றுள்ளனர். கடைசியாக நேற்று நாகர்கோவிலில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை 3.45 மணியளவில் மதுரை வந்துள்ளனர். புனலூரில் இருந்து வந்த ரயில் மூலம் அவர்கள் மதுரை வந்தனர்.

அவர்கள் வந்த இரண்டு ரயில் பெட்டிகள் தனியாகப் பிரிக்கப்பட்ட மதுரை ரயில்வே சந்திப்பில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கனெக்டிங் ரயில் மூலமாக நாளை சென்னை செல்லவிருந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5.15 மணியளவில் ரயிலில் தீப்பிடித்துள்ளது. ரயிலில் இருந்த பயணிகள் சிலிண்டர் பயன்படுத்தி சமைத்துள்ளனர். அப்போது சிலிண்டர் வெடித்து தீ பிடித்துள்ளது. தீ மளமளவெனப் பரவ ரயில் பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறியுள்ளனர். 55 பேர் உயிர் தப்பியுள்ளனர். சமையல் செய்வதற்காக ரயில் பெட்டியின் ஒருபுறம் உள்ள கதவில் உள்புறம் தாழிடப்பட்டிருந்த நிலையில் பயணிகள் அனைவரும் ஒரே பக்கத்தில் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் தீயில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.

விபத்து நடந்த பகுதியில் அமைச்சர் மூர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, காவல் உயரதிகாரிகள், தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் விரைந்து சென்றனர். விபத்துப் பகுதியை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது “நிகழ்விடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சிலிண்டர் வெடித்ததே விபத்துக்குக் காரணம் என 9 பேர் பலியாகியுள்ளனர். 6 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.இதற்கிடையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் பயணிகள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை ரயில் நிலையத்துக்குள்ளும், ரயிலிலும் எடுத்துச் செல்லக் கூடாது என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES