பொதுமக்களை திரட்டி சாலை மறியல் செய்ய போகிறேன் மதுரை மாநகராட்சி 27 வது வார்டு கவுன்சிலர் மாயத்தேவன் அறிவிப்பு
மதுரை,செப்.04-
மதுரை மாநகராட்சி 27 வது வார்டு 60 அடி ரோடு மெயின் ரோட்டில் சேரும் சகதியாக வயல்வெளி போல் இருப்பதால் பொதுமக்கள் தினமும் நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோர் சாகசம் செய்வது போல் அந்த ரோட்டில் தினமும் சென்று வருகின்றனர். மந்த நிலையில் வேலை நட்ப்பதால் அந்த பகுதியில் செல்லும் பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்றனர்.
இதுகுறித்து 27-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆ.மாயத்தேவன் நம்மிடம் கூறுகையில்,
செல்லூர் 60 அடி ரோட்டில் சேரும் சகதியாக உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். நடந்து செல்வோர் வாகனங்களில் செல்வோர் விழுந்து செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் கடந்து செல்லும் இந்த ரோட்டில் உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும். பலமுறை இது குறித்து மாமன்ற கூட்டங்களில் எடுத்துரைத்தும் ஆணையாளரிடம் மனு வழங்கியும் பணிகள் நடைபெறவில்லை. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரியிடம் சொல்லியும் அவரும் எதுவும் செய்து கொடுப்பதில்லை.
நான் கவுன்சிலராக பொறுப்பேற்ற போது செல்லூர் 60 அடி ரோட்டில் பாதாள சாக்கடை பணிகள் தொடங்கியது.15 மாதங்கள் ஆகியும் இன்னும் பாதாள சாக்கடை பணிகள் நிறைவடையவில்லை.
மேலும் குப்பை அள்ளும் பேட்டரி வண்டிகள் ரிப்பேர் ஆகி உள்ளதால் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க முடியவில்லை. மேலும் குப்பைத்தொட்டியை எடுத்துச் செல்லும் குப்பை லாரிகளும் சரிவர இந்த வார்டுக்கு வருவதில்லை. எனது வார்டு அதிமுக வார்டு என்பதால் மாநகராட்சி அதிகாரிகள் இந்த வார்டை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.
பாதாள சாக்கடை கழிவு நீர் தெருக்களில் தேங்கி இருக்கும் போது கழிவுநீர் உறிஞ்சும் வாகனத்தை அனுப்பச் சொன்னால் அனுப்புவதில்லை. மேலும் இந்த வார்டில் நாய் தொல்லைகள் அதிகமாக உள்ளது. சமீபத்தில் ஒரு வெறி நாய் எட்டு பேருக்கும் மேல் கடித்தது. உடனடியாக அதிகாரிகளுக்கு இதைச் சொல்லியும் நாய் பிடிக்கும் வண்டியை அனுப்பி நாய்களை பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்ல முடியவில்லை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல பயன்படுகின்றனர்.
மேலும் இந்த வார்டுக்கு உட்பட்ட பல தெருக்களில் சாலை வசதிகள் இல்லாமல் உள்ளதால் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மழை நீர் தேங்கி கொசுத்தொல்லை அதிகமாகி வருகிறது. எனவே உடனடியாக அனைத்து தெருக்களிலும் தார் சாலைகளை அமைப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் இது பற்றி கூறினால் எதுவும் கண்டு கொள்வதில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபட போகிறேன் என கூறினார்.