மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில பாரத இந்து மகா சபா அமைப்பினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சனாதனம் குறித்து தவறாக பேசியதாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் சார்பாக அதன் தேசிய தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும், மாநில இளைஞரணி செயலாளர் எம்.டி ராஜா முன்னிலையிலும், மதுரை டி.எம் கோர்ட் சந்திப்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் உதயநிதி ஸ்டாலின் தனது வீட்டில் உள்ள சனாதன தர்மத்தை முதலில் ஒழிக்க வேண்டும். திமுகவில் உள்ள அனைத்து இந்துக்களையும் கட்சியை விட்டு வெளியேற்றி விட்டு சனாதனத்தை குறித்து பேசலாம்.உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவியை உடனடியாக பறிக்க வேண்டும். என்று தேசிய தலைவர் பாலசுப்பிரமணியன் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் செல்லத்துரை, சுபாஷ்,ராமநிரஞ்சன், பூசாரி தெய்வேந்திரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் தேசிய தலைவர் உட்பட 100 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்