தெலங்கானா: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து, மணிப்பூர் விவகாரத்தில் அரசாங்கம் சரணடைந்த அதே வேளையில், நேரில் சென்று அமைதிப்படுத்துவது தமது பொறுப்பு என்பதை பிரதமர் மோடி உணராமல் இருப்பது எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் குறித்தும் விமர்சித்தார். இதுகுறித்து அவர் பேசியது பின்வருமாறு :
“இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாட்டிலுள்ள அனைத்து கலாச்சாரங்கள், மதங்கள், வரலாறுகள் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் கைப்பற்ற வேண்டும் என்று பாஜக துடிக்கிறது. நாட்டின் அடித்தளத்தை அமைக்க காங்கிரஸ் பாடுபட்டது.
மக்களுக்கு அதிகாரம் வழங்குவதே காங்கிரஸின் தொலைநோக்கு பார்வையாக இருக்கிறது. ஆனால், பாஜக – ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் வேறாக இருக்கிறது. நாட்டின் ஒத்துமொத்த அதிகாரத்தையும் கைப்பற்ற முயற்சிக்கிறது. டெல்லியில் அதிகாரத்தை மையப்படுத்தி அனைத்து முடிவுகளையும் எடுக்க நினைக்கிறது. நாங்கள் இந்தியா என்ற எண்ணத்தை பாதுகாப்போம்.
5 மாநில சட்டப்பேரவை தேர்தலிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும். பிரதேசத்தில் ஊழல் நிறைந்த பாஜக அரசை அகற்றுவோம். தெலுங்கானாவில் மகத்தான வெற்றியை எங்கள் 6 தேர்தல் வாக்குறுதிகள் உறுதி செய்யும். நமது பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை என்று இன்னும் புரியவில்லை. ஒரு மாநிலம் 4 மாதங்களுக்கும் மேலாக எரிகிறது. ஆனால் அதன் மீது அரசுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அரசாங்கம் சரணடைந்த அதே வேளையில், நேரில் சென்று அமைதிப்படுத்துவது தமது பொறுப்பு என்பதை பிரதமர் உணராமல் இருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
எனது எம்.பி பதவி பா.ஜ.க.வால் பறிக்கப்பட்டபோது, எனக்காக மிசோரம் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். வயதானவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை அதிகரித்தல், சிலிண்டர் விலை குறைத்தல் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளோம். மக்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.” என்றார்.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாக பா.ஜ.கவின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ராகுல், “அமித்ஷா மகன் என்ன செய்கிறார். சரியாக சொல்லுங்கள் பார்ப்போம். அவர்தான் இந்திய கிரிக்கெட்டை நடத்துகிறார். ராஜ்நாத் சிங் மகன் என்ன செய்கிறார்? அனுராக் தாக்கூர் எப்படி முக்கியத்துவம் பெற்றார். இதனை நீங்கள் பாஜக தலைவர்களை நோக்கி கேளுங்கள்.” என்றார்.