Thursday , September 12 2024
Breaking News
Home / Politics / “பாஜக மேற்கொண்டது ஒயிட் காலர் ஊழல்..!” – ராகுல் யாத்திரை நிறைவு விழாவில் ஸ்டாலின்

“பாஜக மேற்கொண்டது ஒயிட் காலர் ஊழல்..!” – ராகுல் யாத்திரை நிறைவு விழாவில் ஸ்டாலின்

``பாஜக மேற்கொண்டது ஒயிட் காலர் ஊழல்..!" - ராகுல் யாத்திரை நிறைவு விழாவில் ஸ்டாலின்

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் நடந்தது.

இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பரூக் அப்துல்லா, உத்தவ் தாக்கரே உட்பட தலைவர்கள் பேசினர்.

இதில் முதலில் பேசிய மு.க.ஸ்டாலின் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவர் தனது உரையில் ராகுல் காந்திரையை சகோதரர் என்று கூறி தனது உரையை தொடங்கினார். ராகுல் காந்தியின் நியாய யாத்திரைக்கு வாழ்த்து சொல்ல வந்திருப்பதாக தெரிவித்த மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை இப்போது மும்பையில் முடிந்து இருந்தாலும் அது விரைவில் டெல்லியை அடையும் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ”ராகுல் காந்தியின் நியாய யாத்திரைக்கு பா.ஜ.க அரசு பல இடையூறுகளை கொடுத்தது. குறிப்பாக சில சிறிய காரணங்களைக்கூறி அனுமதிகளை மறுத்தனர். அப்படி இருந்தும் அத்தடைகளை தாண்டி ராகுல் காந்தி திறமையுடன் தனது யாத்திரையை தொடர்ந்தார்.

ராகுல் காந்தியின் யாத்திரைக்கு கூடிய மக்கள் கூட்டத்தை பார்த்து பா.ஜ.க அரசுக்கு தூக்கம் போய்விட்டது. ராகுல் காந்தியின் எம்.பி.பதவியை பறித்தார்கள். ஆனால் சுப்ரீம் கோர்ட் மூலம் அதனை தோற்கடித்து பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி கர்ஜித்தார். அதனால் பிரதமர் மோடி அதிர்ச்சியடைந்துள்ளார். பா.ஜ.க அரசின் நாட்கள் எண்ணப்படுகிறது. விரைவில் பா.ஜ.க தூக்கி வீசப்படும். பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரண்டு ஆண்டில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வது மற்றும் போலி பிரசாரம் செய்வதை மட்டுமே தொழிலாக கொண்டிருந்தார்.

இந்தியா கூட்டணியை ஊழல் கூட்டணி என்று பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் பா.ஜ.க தான் ஊழல் கட்சி என்பது தேர்தல் பத்திரங்கள் மூலம் நிரூபணமாகி இருக்கிறது. பா.ஜ.க மேற்கொண்டது ஒயிட் காலர் ஊழல். மோடி இந்த ஊழலை மறைக்க எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகார் கூறி மக்களின் கவனத்தை திசை திருப்ப பார்க்கிறார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இனி நமது ஒரே குறிக்கோள் பா.ஜ.க வை தோற்கடிப்பதாகத்தான் இருக்கவேண்டும். பாரத் ஜோடோ நியாய யாத்திராவின் உண்மையான வெற்றி பா.ஜ.க வை மக்களவை தேர்தலில் தோற்கடிப்பதில்தான் இருக்கிறது. கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் பயணம் டெல்லியை பிடிப்பதில் முடிவடையவேண்டும்” என்று தெரிவித்தார்.

இதில் பேசிய உத்தவ் தாக்கரே, ”மகாத்மா காந்தி தனது வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை மும்பையில்தான் தொடங்கினார். ராகுல் காந்தி மும்பையில் தனது யாத்திரையை முடித்து இருப்பதற்கு நன்றி. பா.ஜ.க ஒரு பலூன். அந்த பலூனை ஊதிவிட்டோம் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. அவர்கள் 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று கூறுகிறார்கள். 400 நாற்காலிகள் கிடைக்க அவர்கள் என்ன பர்னீச்சர் கடையா வைத்து இருக்கிறார்கள். இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கூடிய போது எங்களை எதிர்ப்பாளர்கள் என்றார். ஆம் நாங்கள் எதிர்ப்பாளர்கள்தான். சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள். மோடி குடும்பம் என்பது அவரும் அவரது நாற்காலியும்தான். அவர்கள் என்ன காரணத்திற்காக 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறவேண்டும் சொல்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்து விட்டது.

நாங்கள் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாக்க இங்கு கூடியிருக்கிறோம். ரஷ்யாவில் தேர்தல் நடக்கிறது. அங்கு எதிர்க்கட்சிகள் கிடையாது. ஒரு சம்பிரதாயத்திற்கு தேர்தல் நடக்கிறது. எனவே இந்த முறை பா.ஜ.க வெளியேற்றப்படவேண்டும் என்ற கோஷத்தை முன்வைக்கிறேன். மும்பையில் நாம் எதாவது சொன்னால் அதனை ஒட்டுமொத்த இந்தியாவும் கேட்கும்” என்றார்.

சரத் பவார் பேசுகையில்,” விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், பட்டியலின மக்களுக்கு பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. ஆனால் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. தேர்தல் கமிஷன் அவர்களின் உத்தரவாதத்திற்கு தடை விதித்துவிட்டது. மகாத்மா காந்தி மும்பையில் இருந்துதான் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தொடங்கினார். அதே போன்று இது பா.ஜ.க வே வெளியேறு என்று சொல்லும் நேரம்” என்று தெரிவித்தார்.

Bala Trust

About Admin

Check Also

தந்தையை இழந்த கல்லூரி மாணவனுக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கிய சிங்கப்பூர் குரு சித்தம் பெருங்குடில் அமைப்பின் நிறுவனர்…!

சிவகங்கை மேலமங்கத்தில் வசித்து வரும் கனரக ஊர்தி ஓட்டுநரான ஜோர்ஜ் டோமினிக்(49)அவர்கள் கடந்த மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மூத்த …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES