டெல்லி: லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் பாரபட்சமின்றி நடத்தப்படுவது ஜனநாயகத்திற்கு அவசியமானது.
அதேபோல காங்கிரஸின் வங்கி கணக்கு திட்டமிட்டு முடக்கப்பட்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 2019ம் ஆண்டை போலவே, 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றாக வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. காங்கிரஸை பொறுத்த அளவில் இரண்டு கட்டங்களாக ஏற்கெனவே வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இன்று காலை டெல்லியில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதில், தேர்தல் ஜனநாயக முறையில் நடத்தப்படுவது அவசியம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார். பேட்டியின்போது அவர் பேசுகையில்,
“தேர்தல் பாரபட்சமின்றி நடத்தப்படுவது ஜனநாயகத்திற்கு அவசியமானது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுவதற்கு சமநிலையில் வாய்ப்பு இருக்க வேண்டும். தேர்தல் பத்திர முறைகேடு சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டது. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்படுகின்றன” என்று மத்திய அரசின் மீது விமர்சனங்களை அடுக்கினார்.
இவரை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “30 ஆண்டுகளுக்கு முந்தைய பிரச்னைக்காக தற்போது காங்கிரஸின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. ரூ.14 லட்சம் வருமான வரி பிரச்னைக்காக காங்கிரஸின் ஒட்டுமொத்த நிதியும் முடக்கம். தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்னர் வங்கி கணக்கு முடக்கம்; இது திட்டமிட்ட செயல். வங்கி கணக்கு முடக்கம் விவகாரத்தில் நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியாவின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் பாஜக அழித்துவிட்டது” என்று விமர்சித்திருந்தார்.
காங்கிரஸை பொறுத்த வரையில் இந்த தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எனவே, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளையும் இணைத்து இந்தியா கூட்டணி என்கிற பெயரில் தேர்தலை எதிர்கொள்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்திருக்கிறது. தென் மாநிலங்களில் ஓரளவு கோலோச்சினாலும், வட மாநிலங்களில் மீண்டும் கட்சி உயிர்த்தெழுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
இதற்கிடையில் இன்று தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாக இருக்கிறது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் களமிறங்குகிறது.
திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் கரூரில் ஜோதிமணிக்கும், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்திற்கும், விருதுநகரில் மாணிக்கம் தாகூருக்கும், குமரியில் விஜய் வசந்த்திற்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என கட்சியினர் எதிர்பார்த்திருக்கின்றனர்.