Sunday , October 13 2024
Breaking News
Home / Politics / பொன்முடிக்கு இன்று மாலை பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார் ஆளுநர் ரவி?

பொன்முடிக்கு இன்று மாலை பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார் ஆளுநர் ரவி?

பொன்முடிக்கு இன்று மாலை பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார் ஆளுநர் ரவி?

சென்னை: பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் முடிவு எடுக்க ஆளுநருக்கு 24 மணி நேரம் கெடு விதித்திருந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் மீண்டும் அவருக்கு அவர் வகித்துவந்த உயர்கல்வித் துறையே ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அந்தத் துறை ராஜகண்ணப்பன் வசம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு, தண்டனை, தடை: தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, கடந்த 2006-11 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் கடந்த 2011-ம்ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுதலை செய்து விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்தவழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அமைச்சராக பதவி வகித்த பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து கடந்த டிச.19-ம் தேதி தீர்ப்பளித்தது. இதனால் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்தவழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தும், பொன்முடியை குற்றவாளி என அறிவித்த தீர்ப்புக்கு தடை விதித்தும் உத்தரவிட்டது.

முதல்வரின் பரிந்துரையும், ஆளுநரின் நிராகரிப்பும்: இதனையடுத்து எம்எல்ஏவாக பொன்முடி தொடர்ந்து நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க கோரி,அதற்கான பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார். ஆனால், ஆளுநர் அந்த பரிந்துரையை நிராகரித்தார்.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘ஆளுநரின் செயல் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ஜனநாயக முறைப்படி மனுதாரருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு முதல்வர் பரிந்துரை செய்துள்ளார். அதை ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும். முதல்வரின் தனிப்பட்ட அதிகாரத்தில் ஆளுநர் எப்படி தலையிட முடியும். இந்த விவகாரத்தில் ஆளுநர் தனது முடிவை 24 மணி நேரத்துக்குள் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், எங்களது நடவடிக்கை என்ன என்பதை இப்போது நாங்கள் கூறப்போவது இல்லை’ என்று கெடு விதித்தது. இந்நிலையில் இன்று மாலை பொன்முடிக்கு ஆளுநர் ரவி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Bala Trust

About Admin

Check Also

ரத்தன் டாடா எனும் சகாப்தம்…

பிறப்பு: டிசம்பர் 28, 1937 | இறப்பு: அக்டோபர் 9, 2024 ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார் , அவர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES