Sunday , October 13 2024
Breaking News
Home / Politics / இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது தமிழ்நாடு – அரசு சார்பில் அறிக்கை..!

இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது தமிழ்நாடு – அரசு சார்பில் அறிக்கை..!

இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது தமிழ்நாடு - அரசு சார்பில் அறிக்கை..!

மக்களை முன்னேற்றிடும் வருவாய்த் துறை பணிகள்

வருவாய்த் துறை ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட துறை.

இந்தத் துறை ஒரு காலத்தில் நில வரி வசூல் செய்கின்ற பணியை மட்டுமே செய்து வந்தது. இந்தத் துறை தற்போது பொது நிர்வாகத் துறையாக, மக்களின் நலன் காக்கும் துறையாகச் செயல்பட்டு வருகிறது. பொது மக்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல், சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துதல், குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தி, பொது மக்களின் குறைகளை அறிந்து அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தல். பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பேரிடரின்போது பொது மக்களைப் பாதுகாத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், நில உரிமையாளர்களுக்குப் பட்டா வழங்குதல், அரசு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்திக் கொடுத்தல், அரசு நிலங்களைப் பாதுகாத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நிலச் சீர்திருத்தச் சட்டங்களை செயல்படுத்துதல், அரசு நிலத்தைத் தனியாருக்குக் குத்தகைக்கு வழங்குதல், பட்டா மாறுதல் செய்கின்ற நிலத்தின் எல்லைகளை அளந்து காட்டுதல் இதுபோன்ற செயல்களை மட்டுமல்லாமல், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கின்ற பணிகளையும், பொதுத் தேர்தல் நடத்துகின்ற பணிகளையும் வருவாய்த் துறை இன்றைக்குச் செய்து கொண்டிருக்கிறது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்

முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றதுமுதல் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு 6 இலட்சத்து 52 ஆயிரத்து 559 இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கியுள்ளார்கள்.

முதலமைச்சர் அவர்கள் உருவாக்கிய எங்கிருந்தும் எப்போதும் இணையம் வழி பட்டா மாறுதல் திட்டம்

பொதுமக்கள் இணைம் வாயிலாக எந்நேரமும் எங்கிருந்தும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பம் செய்வதற்கான சேவையை மாண்புமிகு முதலமைச்சர் திராவிட நாயகர் அவர்கள் 23.9.2022 அன்று தொடங்கி வைத்தார்கள். இரண்டு ஆண்டுகளில் 41 இலட்சத்து 81 ஆயிரத்து 723 பட்டா மாறுதல்கள் இணையம் வழி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளன.

இணையத்தில் நகரங்களின் புலப்படங்கள்

மாநிலத்தில் மொத்தம் உள்ள 186 நகரங்களில் 179 நகரங்களுக்கான புலப்படங்கள் கணினி படுத்தப்பட்டு இணையத்தில் ஏற்றப்பட்டுள்ளன. எஞ்சிய 7 நகரத்திற்கான புலப்படங்கள் கணினி படுத்தப்பட்டுள்ளன. இணையத்தில் ஏற்றும் பணி நடைபெறுகிறது.

புல எல்லைகளை அளந்திட இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் புதியமுறை

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நில உரிமையாளர்கள் தங்களது புல எல்லைகளை அளவை செய்து அத்துகாட்டுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் புதிய முறையை 20.11.2023 அன்று தொடங்கி வைத்து நில உரிமையாளர்களின் மனக்குறையைத் தீர்த்துள்ளார்கள்.

கையால் எழுதப்பட்ட பழைய ஆவணங்களை ஒளிபிம்ப நகல் எடுத்து பராமரித்தல் பணி

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி கையினால் தயாரிக்கப்பட்ட பழைமையான ஆவணங்களை ஒளி பிம்ப நகலெடுத்துப் பராமரிக்கும் பணி சென்னையில் உள்ள ஆவணக் காப்பகம் மற்றும் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாண்டுகளில் 9,40,725 தாள்கள் ஒளி பிம்ப நகலெடுத்துப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

சான்றிதழ் வழங்குதல்

முத்தமிழஞர் கலைஞர் அவர்கள்தான் 1999ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றைப் அவர்கள் படிக்கும் பள்ளிகளிலே வழங்க ஆணையிட்டார்கள். அந்த வகையிலே இன்றைக்கு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் இணையதளம் மூலமாக 26 வகையான சான்றிதழ்கள் வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டு, இந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 2 கோடியே 75 இலட்சம் சான்றிதழ்கள் வழங்கி மக்கள் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டுள்ளன.

முதியோர் உதவித் தொகை

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முதியோர் ஓய்வூதியம் 1,000 ரூபாய் என்பதை 1,200 ரூபாயாக உயர்த்தியுள்ளார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக உயர்த்தியதும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தான்.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 34 இலட்சத்து 5 ஆயிரம் பேருக்குத்தான் முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டது. இன்று திராவிட நாயகர் ஆட்சியில் மூன்றாண்டு காலத்தில் 85 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித் தொகை கூடுதலாக வழங்கப்பட்டு தற்போது மொத்தம் 34 இலட்சத்து 90 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகின்றது. மேலும், 80 ஆயிரம் பேருக்கு விரைவில் வழங்கப்படவுள்ளது.

நிதி ஒதுக்கீட்டை உயர்த்திய மாண்புமிகு முதலமைச்சர்

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலே மொத்தம் 4,000 கோடியே 87 இலட்சம் ரூபாய்தான் முதியோர் ஓய்வூதியத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டது. திராவிட நாயகர் ஆட்சிக் காலத்தில் 5,337 கோடி ரூபாய், அ.தி.மு.க. ஆட்சியைவிட 1,250 கோடி ரூபாய் அதிகப்படியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் ஒதுக்கப்பட்டு முதியோர் உதவித் தொகை தாராளமாக வழங்கப்படுகிறது.

மக்கள் தொடர்பு முகாம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமையன்று ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி ஒவ்வொரு மாதமும் 3-வது புதன்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் காலை 9-00 மணிக்கு தாசில்தாருடன் கிராமத்திற்குச் சென்று அந்தப் பகுதியில் காணப்படும் குறைகளை ஆய்வுசெய்கிறார். மக்களிடம் மனுக்களை பெறுகிறார். மறுநாள் காலை 9-00 மணி வரை அந்தப் பகுதியில் இருந்து, ஆய்வுசெய்கிறார். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் குறைகள் தீர்வு காணப்படுகின்றன.

இலவச வேட்டி, சேலை திட்டம்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1989 ஆம் ஆண்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாளில் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்கள். அத்திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றிவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆண்டுதோறும்ஏறத்தாழ 1 கோடியே 52 இலட்சம் ஆண்களுக்கு இலவச வேட்டிகளும், 1 கோடியே 60 இலட்சம் பெண்களுக்கு இலவச சேலைகளும் வழங்கி ஏழை மக்களின் வாழ்த்துகளைப் பெற்று வருகிறார்கள்.

பேரிடர் மேலாண்மை

முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில் கொரோனா தொற்று தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உயிர்ப் பலிகளை வாங்கி உலகையே வாட்டி வதைத்தது. தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகர் அவர்கள் உயிருக்கு அஞ்சாமல் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கே சென்று நேரில் சந்தித்து ஆறுதல்கூறி, துணிவு தந்து வேண்டிய உதவிகளெல்லாம் செய்து தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாத்தார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அப்போது காட்டிய தீரமும், மக்களுக்கு அளித்த உதவிகளும் மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக அமைந்தன. கொரோனா நோய் மட்டும் அல்லாமல், 3 ஆண்டுகளிலும் புயல்களும், பெரும்மழையும் வெள்ளமும் தமிழ்நாட்டைத் தாக்கின. 2021 ஆம் ஆண்டில் Tauktae புயல், Yaas புயல் என இரண்டு புயல்கள் வந்தன. 2022 ஆம் ஆண்டில் Mandous புயல் வந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கன மழை. காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு. சென்ற 2023 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் பருவம் தவறிய மழை பெய்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது.

2023 டிசம்பரில் மிக்ஜாம் புயல், சென்னைக்கு மிக அருகில் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடலோரப் பகுதிக்கு நகர்ந்து, நீண்ட நேரம் நிலைகொண்டிருந்ததன் காரணமாக, 3.12.2023 மற்றும் 4.12.2023 ஆகிய நாள்களில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் முன் எப்போதும் இல்லாத அளவில் கனமழை முதல் அதி கனமழை தொடர்ந்து பெய்ததால், பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 16.12.2023 முதல் 18.12.2023 வரை பரவலாகக் கனமழை முதல் அதிகன மழைப்பொழிவு ஏற்பட்டது. வழக்கத்திற்கு மாறான கனமழை மற்றும் அதனை தொடர்ந்த வெள்ளம் காரணமாக மனித உயிரிழப்புகள், கால்நடை இறப்பு ஆகியவை ஏற்பட்டதோடு, வீடுகள்/குடிசைகள், வேளாண் தோட்டக்கலை பயிர்கள், சாலைகள், பாலங்கள், மின்சாரம், குடிநீர் வழங்கல் போன்ற பொது உட்கட்டமைப்புகளுக்கும் பெருத்த சேதங்கள் ஏற்பட்டன.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாத்திட மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரு வெள்ளம் ஆகியவற்றிற்கு ரூ.2476.89 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கினார்கள். மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட 29,54,269 குடும்பங்களுக்கு, குடும்பம் ஒன்றிற்கு ரூ.6,000/- வீதம் வாழ்வாதார நிவாரணம் ரூ.14.86 கோடியும்; மிக்ஜாம் புயல் – நிவாரணம் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களுள் தகுதியான 2,68,869 குடும்பங்களுக்கு, குடும்பம் ஒன்றிற்கு ரூ.6000/- வீதம் ரூ.39.51 கோடி வாழ்வாதார நிவாரணமாகவும்; மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக எண்ணூர் பகுதியில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1.15கோடியும்; மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு ரூ.48.18 கோடியும் நிவாரணமாக உடனுக்குடன் வழங்கினார்கள்.

தென் மாவட்டங்களில் வெள்ள நிவாரணம்

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 6,63,760 குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றிற்கு ரூ.6000/- மிதமாக பாதிக்கப்பட்ட 14,31,164 குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றிற்கு ரூ.1,000/- வீதம் ரூ.541.37 கோடி வாழ்வாதார நிவாரணமாக வழங்கினார்கள். தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கான நிவாரணமாக ரூ.201.67 கோடியும்;

மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழையின் காரணமாக பல்வேறு துறைகளின் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்க ரூ.130 கோடியும்; மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழையின் காரணமாக மீன் பிடி படகுகள், வலைகள் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணமாக ரூ.28.10 கோடியும் வழங்கி பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை துடைப்பதில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெகுவேகமாக உடனுக்குடன் செயல்பட்டு அதிகாரிகளை அரவணைத்து களத்தில் தாமும் நின்று ஆற்றிய பணிகளை பாதிப்புக்காளான மக்களும் நடுநிலையாளர்களும் பத்திரிகையாளர்களும் வெகுவாகப் பாராட்டினர்.

நில அளவைத் துறை:

பதிவுத்துறையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டவுடன் அவற்றில் 2 ஏக்கர், 3 ஏக்கர் நிலங்கள் ஒருவருக்கே இருந்தால், அவருக்கு உடனடியாக பட்டா மாற்றிக் கொடுக்கப்படுகின்றன. உரிய முறையில் இணையத்திலும் பதிவு செய்து கொடுக்கப்படுகின்றன. ஒருவர் இரண்டு ஏக்கருக்கு மேல் நிலம் வாங்கி விற்பனைக்காக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் மனைகள் போட்டிருந்தால் விற்பனை செய்யப்படும் மனைகளைப் பதிவு செய்யும்போது மனை வாரியாகப் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. முன்பு ஒரு மனை வாங்கினால் துறை அதிகாரி அந்த இடத்திற்குச் சென்று அளந்து கொடுக்க வேண்டும். தற்போது அந்த நடைமுறை எளிமைப் படுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்று அனைத்துப் பணிகளையும் எந்தெந்த முறையில் எளிதாக்க இயலுமோ அந்தந்த முறைகளில் துறையை எளிமைப்படுத்தி மக்களுக்கு நன்மை செய்யும் துறையாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வருவாய்த் துறையை மேம்படுத்தியுள்ளார்கள் என்பது பெருமைக்குரிய சாதனைகளில் ஒன்றாகும். இப்படி, மாண்புமிகு முதலமைச்சர் திராவிட நாயகர் ஆட்சி ஏற்பட்ட மூன்று ஆண்டுகளில் வருவாய்த் துறை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உருவாக்கிய உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சரின் முகவரித் துறை, கள ஆய்வில் முதலமைச்சர், மக்களுடன் முதல்வர், நீங்கள் நலமா முதலான பல புதுமையான திட்டங்களால் மக்கள் குறைகள் மனு வழங்கிய 15 நாள்களில் தீர்க்கப்படுகின்றன. மக்கள், திராவிட மாடல் அரசைப் பாராட்டுகின்றனர். மற்ற மாநிலங்களுக்கும் திராவிட மாடல் அரசின் வருவாய்த் துறை சீரிய முறையில் வழிகாட்டுகிறது.

Bala Trust

About Admin

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES