Wednesday , October 16 2024
Breaking News
Home / Politics / உடனடியாக மக்கள் தொகை மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ்…

உடனடியாக மக்கள் தொகை மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ்…

கடந்த 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதி வாரி கணக்கெடுப்பும் எடுக்கப்பட்டது. இதன்மூலம் சமூக, பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அதன் அறிக்கை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு அந்த கணக்கெடுப்பு மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் 2021 இல் ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 2011 இல் எடுத்த சாதி வாரி கணக்கெடுப்பை வெளியிட முடியாததற்கு சால்ஜாப்பு காரணங்களைக் கூறி வெளியிட மறுத்து விட்டது. இந்நிலையில் 2021 இல் எடுக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடத்தாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் மக்கள் நலத் திட்டங்களுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் தேவையான ஆதாரப்பூர்வமான புள்ளி விவரங்கள் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் 1951 இல் தொடங்கி ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆறு முறை நடத்தப்பட்டு பட்டியலின மக்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அவர்களது உரிமைகளை பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பில், பட்டியலின மக்களுக்கான கணக்கெடுப்போடு, பிற்படுத்தப்பட்டோருக்கான சாதி வாரி கணக்கெடுப்பும் நடத்துவதில் எவ்வித சிரமமும் இருக்க முடியாது. ஆனால், அதை செய்வதற்கு ஒன்றிய அரசு முன்வரவில்லை.

ஒன்றிய காங்கிரஸ் கூட்டணி அரசு நிறைவேற்றிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி பயனாளிகளின் எண்ணிக்கைக்கு உரிய புள்ளி விவரங்கள் இல்லாததால் அதனுடைய பலன் மக்களுக்கு முழுமையாக போய்ச் சேரவில்லை. 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்திருந்தால் 10 முதல் 12 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் கூடுதலாக பெறக் கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், அந்த வாய்ப்பு தற்போது மறுக்கப்பட்டிருக்கிது.

கடந்த மக்களவைத் தேர்தலின் போது, காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் போது சாதி வாரி கணக்கெடுப்பும் இணைத்து நடத்த வேண்டும், உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டுக்கு விதித்த 50 சதவிகித வரம்பை உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதுபோல, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களும் இக்கோரிக்கையை வலியுறுத்தி பேசி வருகிறார். ஆனால், நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிட பிரதமர் மோடி அரசு தயாராக இல்லை. இதன்மூலம் மக்கள் தொகை மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மறுத்து வருகிற தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். இதன்மூலம் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்கும், உரிமைகளுக்கும் எதிராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை அடைவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து போராடும். தமிழகத்தில் அதற்கான முயற்சிகளை முதலமைச்சர் தீவிரமாக எடுத்து வருகிறார்.

அரசமைப்புச் சட்டப்படி ஒன்றிய பட்டியலில் உறுப்பு 246 இல் ஏழாவது பட்டியலில் 69-வது எண் வரிசையில் உள்ளபடி சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துகிற முழு உரிமையும் ஒன்றிய அரசுக்குத் தான் இருக்கிறது. இந்திய கணக்கெடுப்பு சட்டம் 1948-ன்படி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டியது ஒன்றிய அரசே தவிர, மாநில அரசு அல்ல. அந்த பொறுப்பை தட்டிக் கழிக்கிற வகையில் மாநில அரசு நடத்த வேண்டுமென்று பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கோருவது அப்பட்டமான அரசியல் சந்தர்ப்பவாத செயலாகும். பா.ஜ.க.வை காப்பாற்றுகிற முயற்சியாகும். மாநில அரசுகள் புள்ளி விவரங்களைத் தான் சேகரிக்க முடியுமே தவிர, கணக்கெடுப்பு நடத்த முடியாது. ஒன்றிய அரசு நடத்துகிற கணக்கெடுப்பின் மூலம் தான் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும்.

எனவே, ஒன்றிய பா.ஜ.க. அரசு 2021 இல் நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் மூன்றாண்டுகள் காலம் தாழ்த்தி வருகிற நிலையில் உடனடியாக மக்கள் தொகை மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மோடி அரசை வலியுறுத்துகிறேன்.

Bala Trust

About Admin

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES