Wednesday , September 18 2024
Breaking News
Home / Politics / தெற்கு ஆசியாவில் சிறந்த மாநிலம் தமிழகம்..அமெரிக்காவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உரை…

தெற்கு ஆசியாவில் சிறந்த மாநிலம் தமிழகம்..அமெரிக்காவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உரை…

தெற்கு ஆசியாவில் சிறந்த மாநிலம் தமிழகம்..அமெரிக்காவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது எனவும், இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் அதிகளவில் நகரமயமாக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழ்நாடு தான் என சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,”சான்பிரான்ஸிஸ்கோவின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதில் நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். உலகின் மிகப்பெரிய மதிப்புமிக்க பெருமை அமெரிக்காவிற்கு உண்டு என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிற உண்மை. அப்படிப்பட்ட அமெரிக்காவிற்கு நான் வந்திருப்பதை பெருமையாக கருதுகிறேன்.

இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்ற மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் நான். திராவிட முன்னேற்றக் கழகம் என்ற 75 ஆண்டுகள் பழமையான அரசியல் இயக்கத்தின் தலைவராக நான் இருக்கிறேன். இப்போது தமிழ்நாட்டை ஆறாவது முறையாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம். இந்திய நாட்டில் பலமுறை எங்கள் கூட்டணி பிரதமர்களை உருவாக்கி ஆட்சியில் இருந்திருக்கிறது.

எனது தந்தையைப் பற்றி உங்களில் பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார். இந்திய நாட்டில் பல பிரதமர்களை உருவாக்கியிருக்கிறார். அப்படிப்பட்ட புகழுக்குச் சொந்தக்காரர் அவர். 1971-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபோது, கலைஞர் அமெரிக்காவிற்கு வருகை தந்தார். இப்பொழுது நான் வருகை தந்திருக்கிறேன்.

புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்கள் பல இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றன. சென்னை பற்றி நீங்கள் அனைவரும் நன்றாக அறிந்திருப்பீர்கள். இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது. 48 விழுக்காடு நகரமயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் அதிகளவில் நகரமயமாக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழ்நாடு தான்.

நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் முதல் மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. சீரான மற்றும் பரவலான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சி மையங்கள் மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மனிதவளங்கள் மற்றும் திறன்களை முன்வைத்து வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது.

இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு தமிழ்நாட்டில் உள்ளது. இந்தியாவின் தேசிய சராசரியைவிட இருமடங்கு அதிகமாக உயர்கல்வியில் மாணவர்கள் சேரும் விகிதத்தை 48 சதவிகிதம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.

இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் சுமார் 45 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்கு ஆசியாவில் சுகாதார சுற்றுலாவில் முன்னணி மாநிலமாகமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. இத்தகைய வளர்ச்சி மிகுந்த மாநிலமான தமிழ்நாட்டிற்கு தொழில் துவங்க வருமாறு உங்களை எல்லாம் அழைப்பதற்காகதான் நான் இங்கே வருகை தந்திருக்கிறேன்.

தமிழ்நாட்டிற்கும், அமெரிக்காவிற்கும் தொழில் ரீதியான உறவு எப்போதுமே பலமாக இருந்து வந்துள்ளது. 300-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் திட்டத்தினை நிறுவியுள்ளனர். சேவைகள் மற்றும் சேவை மையங்கள், உலகளாவிய திறன் மையங்கள், உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உட்பட பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டில் மேற்கொண்டிருக்கிறார்கள். இதை தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கான ஒரு அங்கீகாரமாகவே நான் கருதுகிறேன்.

காக்னிசன்ட், ஃபோர்டு, கேட்டர்பில்லர், ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், சான்மினா, விஸ்டியான், எச்.பி, அப்ளைடு மெட்டீரியல்ஸ், ஜெனரல் எலெக்ட்ரிக், யுபிஎஸ், ஃபைசர், ஹனிவெல், பேபால், குவால்காம் போன்ற பெரும் நிறுவனங்கள் தங்களது உற்பத்தித் திட்டங்களை தமிழ்நாட்டில் நிறுவியுள்ளன. இந்த வரிசையில் இன்னும் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வரவேண்டும். ஏற்கனவே, தொழில் துவங்கியுள்ள நிறுவனங்களும், தங்கள் தொழிலை இன்னும் விரிவுபடுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உங்களது ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு விதத்தில் சிறந்தது. எனவே உங்கள் ஒவ்வொருவரையும் மிக முக்கியமாக நான் கருதுகிறேன். சான்பிரான்ஸிஸ்கோ பே (Bay) மற்றும் கலிஃபோர்னியாவிலிருந்து எங்களது அழைப்பை ஏற்று மதித்து இங்கு திரளாக குழுமியிருக்கக்கூடிய முதலீட்டாளர்களை நான் அன்புடன் வரவேற்கவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

சான்பிரான்ஸிஸ்கோ பே பகுதி குறிப்பாக சிலிக்கான் வேலி தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சிக்கு பெயர் பெற்ற பகுதி என்பது உலகம் அறிந்த உண்மை. தமிழ்நாட்டின் முன்னேற்ற பயணத்தில் பதிலளிக்கக்கூடிய துறைகளை பற்றி விவாதிக்க அமெரிக்காவில் உள்ள பெருந்திட்டங்களின் தலைவர்களை ஒரு பொதுமேடையில் கொண்டு வருவதே இந்த மாநாட்டினுடைய முக்கிய குறிக்கோள்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விரைபடுத்துவதற்கான வழிகளை கண்டறியும் பயனுள்ள விவாதங்களுக்கு இந்த மாநாடு பெரும் உதவிகரமாக அமையும். ஆசியா நாடுகளின் நுழைவு வாயிலான சென்னையில் இருந்துதான் நான் வருகை தந்துள்ளேன். தமிழ்நாடு இன்று உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்று. 39,000-க்கும் மேலான தொழிற்சாலைகள், 2.6 மில்லியன் அளவிற்கு தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் என்ற அளவில், அகில இந்திய அளவில் முதலிடம் வகிக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு அதிக அளவில் உள்ளது. மின்னணுவியல், மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள், ஜவுளி மற்றும் ஆடைகள் ஆகிய பொருட்களின் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்குகிறது. ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டிலும் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. சேவைகள் ஏற்றுமதியில் இரண்டாமிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே சிறந்து விளங்கும் அறிவுசார் வளர்ச்சியை மேலும் மேம்படுத்தும் வகையில், சமீபத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு மையம் சமீபத்திலே சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் இத்துறையின் எதிர்கால வளர்ச்சி மேலும் மேம்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நவீன உள்கட்டமைப்பு, ஏராளமான வளங்கள் மற்றும் திறன்மிகு பணியாளர்களால் உலக முதலீட்டாளர்கள் வெகுவாக ஈர்க்கப்படுகிறார்கள். மக்களின் ஆற்றலை தமிழ்நாடு நன்கு பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் இளைஞர்கள் மற்றும் பணிபுரியும் வயதினர் ஆகியோரின் மக்கள் தொகை சற்றே அதிகம். இது எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு தனித்துவமான நன்மையை வழங்குகிறது. எனினும் அதற்கேற்றவாறு வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது எங்களுடைய இலக்கு. இதன்பொருட்டு, பல்வேறு முன் முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றவேண்டும் என்பது எங்களுடைய இலட்சிய இலக்கு. இதை அடைவதற்காக மூலதனம் அதிகம் உள்ள தொழில்களையும், வேலைவாய்ப்பினை அதிகப்படுத்தும் தொழில்களை ஈர்ப்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறான இருமுனை முயற்சி தற்போது சாதகமான பலன்களை அளித்து வருகிறது.

இவ்வாறான முன் முயற்சியின் ஒரு அங்கமாகதான் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-யை மிக வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம். 35-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள், பன்னாட்டு பிரதிநிதிகள் மற்றும் புகழ்மிக்க தொழில் நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

அமெரிக்க பிரதிநிதித்துவம் இந்த மாநாட்டில் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்தது. அந்த மாநாடுகள் மூலமாக நாங்கள் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 631. ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் மதிப்பு 80 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதன் மூலமாக, 1.4 மில்லியன் நபர்களுக்கு நேரடியாகவும், 1.2 மில்லியன் நபர்களுக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

இந்த பிரம்மாண்டமான நிகழ்வின் மூலம், உலக முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டின் மேல் உள்ள நம்பிக்கையை உலகத்திற்கு நாங்கள் எடுத்துக்காட்டினோம். மொத்தமாக சொல்லவேண்டுமென்றால், கடந்த 3 ஆண்டுகளில் 3.1 மில்லியன் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் கிட்டத்தட்ட 120.48 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளை ஈர்த்து இருக்கிறோம்.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே வேலைவாய்ப்புக்கள் பெருமளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் சமமான அளவில், உறுதியாக சமூக பொருளாதார வளர்ச்சிப் பெற்று வருகிறது. இவ்வாறு ஈர்க்கப்பட்ட முதலீடுகளில், அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளும் பெருமளவில் உள்ளது என்பதையும் நான் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகள் சமீபகாலங்களில் மிகப்பெரும் எழுச்சி கண்டுள்ளது. இந்திய சந்தைக்குள் நுழையும் அமெரிக்க நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தெற்காசியாவிலேயே முதலீடுகளை ஈர்த்திட உகந்த மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டில் எண்ணற்ற அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை நிறுவியுள்ளார்கள். இன்னும் பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான பல்வேறு தொழில் கொள்கைகளையும், சிறப்பு ஊக்குவிப்புத் திட்டங்களையும் நாங்கள் வெளியிட்டிருக்கிறோம்.

மின்னணுவியல் கொள்கை, நிதிநுட்ப கொள்கை, ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை ஒவ்வொரு திட்டத்திற்கும் தேவைப்படும் அனுமதிகளை விரைவாகவும், எளிதாகவும் பெற்றிடும் வகையில், ஒற்றைச்சாளர இணையத்தளத்தை ஏற்படுத்தியிருக்கிறோம். இதன்மூலம், முதலீட்டாளர்கள் தங்கள் திட்டத்திற்கு தேவையான அனுமதிகளை ஆன்லைனிலேயே பெற்றுக்கொள்ள முடியும்.

வணிகம் புரிதலை எளிதாக்குவதற்காக நாங்கள் மேற்கொண்ட சிறப்பு முயற்சிகளின் காரணமாக, வணிகம் புரிதலை எளிதாக்கும் தரவரிசையில் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலம் என்று தமிழ்நாடு வரையறுக்கப்பட்டுள்ளது.

மின்னணுவியல் (செமிகண்டக்டர்கள்) ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, அறைகலன்கள், மேம்பட்ட உற்பத்தி போன்ற துறைகளில் உங்களின் மேலான முதலீடுகளை நாங்கள் வரவேற்கிறோம். ஒருவொருக்கொருவர் பரிமாறும் நட்பின் அடிப்படையிலான நல்லுறவின் மூலமாகதான் நாம் வளரமுடியும். இந்தியாவில் உள்ள அந்த நல்லுறவை குறிப்பாக தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்திட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

உயர்ந்த மனித வாழ்வியல் நெறியைக் கொண்ட நாடு அமெரிக்கா. அந்த அடிப்படையோடு, தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு நீங்கள் பங்களிக்க முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து தமிழ்நாடும் உங்களை வரவேற்க காத்திருக்கிறது” என பேசினார்.

Bala Trust

About Admin

Check Also

தந்தையை இழந்த கல்லூரி மாணவனுக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கிய சிங்கப்பூர் குரு சித்தம் பெருங்குடில் அமைப்பின் நிறுவனர்…!

சிவகங்கை மேலமங்கத்தில் வசித்து வரும் கனரக ஊர்தி ஓட்டுநரான ஜோர்ஜ் டோமினிக்(49)அவர்கள் கடந்த மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மூத்த …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES