Sunday , September 8 2024
Breaking News
Home / தமிழகம் / அய்யா – அண்ணா வழி, கலைஞரின் பயணம்;

அய்யா – அண்ணா வழி, கலைஞரின் பயணம்;

அய்யா – அண்ணா வழி, கலைஞரின் பயணம்;

தொடர்வோம் வாரீர்!

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே,
உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

திருவண்ணாமலை நம்மை, நா தித்திக்கத் தித்திக்க இனிமையாக அழைக்கிறது. ஆன்மிகத்தில் நம்பிக்கையுள்ள மக்கள் கிரிவலம் வந்து மலையழகு கண்டு, கார்த்திகைப் பெருநாளில் மகாதீபம் கண்டு பரவசம் பெறுகின்ற அந்தத் திருவண்ணாமலை, திராவிட அரசியல் பேரியக்கமாம் தி.மு.கழகத்தின் நெடும்பயணத்திலும் சிறப்பான தனி வரலாறு படைத்த திருநகரமாகும்.

திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாகத் தேர்தல் களம் கண்ட 1957 பொதுத் தேர்தலில் கழகம் வெற்றி பெற்று நாடாளு மன்றத்திற்குள் நுழைந்த கழகத்தின் எம்.பி.க்கள் என்ற பெருமை சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத்துக்கும் – திரு.தர்மலிங்கம் அவர்களுக்கும் உண்டு. அந்த தர்மலிங்கம் அவர்கள் வென்ற தொகுதிதான் இந்தத் திருவண்ணாமலை.

அதுபோலவே, நகர்மன்றத் தேர்தலில் கழகத்திற்குக் கிடைத்த முதல் வெற்றிக்களமும் திருவண்ணாமலைதான். தலைவர் கலைஞரின் ஆழ்ந்த நேசத்திற்குரிய நண்பர் ப.உ.சண்முகம் அவர்கள் அன்றைய படைபலம் – பணபலம் எல்லாவற்றையும் எதிர்கொண்டு, தடைகள் அனைத்தையும் தகர்த்து, மடை திறந்த வெள்ளமென வந்த தமிழ் மக்களின் பேராதரவினால் பெற்ற வெற்றி அது. தலைவர் கலைஞர் அவர்களின் 1989-91 ஆட்சிக்காலத்தில், தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட வரலாறும் திருவண்ணாமலைக்கு உண்டு.

பெருமைகள் மலைபோல் குவிந்திருக்கும் திருவண்ணாமலையில், ஏறுபோல் பீடுநடை போடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் “முப்பெரும் விழா” செப்டம்பர் 15ஆம் நாள் நடைபெறுகிறது. சொன்ன வேகத்தில் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற மாவட்ட கழகச் செயலாளர், எள் என்று சொல்லி முடிப்பதற்குள் எண்ணெயாகச் செயலாற்றும் செயல் வீரர் எ.வ.வேலு அவர்களும் அவருடன் இணைந்து செயலாற்றும் கழக நிர்வாகிகளும், தோழர்களும் விழா ஏற்பாடுகளை இரவு பகல் பாராது செவ்வனே மேற்கொண்டுள்ளனர். கலைஞரின் உடன்பிறப்புகள் கண் அயர்ந்தது உண்டோ! கால்கள்தான் ஓய்ந்தது உண்டோ! கழகத்தை உருவாக்கி அதனைக் கவின்மிகு மாளிகையாகக் கட்டிக் காத்து, ஆட்சிக்கட்டிலில் அமரச் செய்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15. அந்த அண்ணாவை அரசியலில் ஆளாக்கிய அகிலம் போற்றும் அய்யாவாம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17. பெரியாரிடமிருந்து பிரிந்தாலும் இரட்டைக் குழல் துப்பாக்கியாய், இன-மொழி எதிரிகள் எங்கும் தப்பி ஓடிவிட முடியாதபடி குறிவைக்கும் இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கியதும் செப்டம்பர் 17. அய்யா – அண்ணா – கழகம் இந்த மூன்றுக்கும் ஒரு சேர உற்சாகத்துடன் நாம் காண்கிற விழாதான், முத்தமிழறிஞராம் நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் வகுத்தளித்த முப்பெரும்விழா.

வெற்றிகள் – பதவிகள் கழகத்தை அலங்கரித்தாலும், நெருக்கடிகள் – சோதனைகள் சூழ்ந்து நின்றாலும், தென்றலாயினும் புயலாயினும், இரண்டையும் ஒன்றாகக் கருதி தமிழ்நாட்டு மக்களுக்கான அரசியல் – சமுதாய உரிமைகளுக்கு அயர்ந்திடாமல் பாடுபடும் இயக்கமான தி.மு.கழகத்தின் கொள்கை திக்கெட்டும் எதிரொலிக்கும் விழாதான் முப்பெரும்விழா. “உடன்பிறப்பே.. உன் துணை மயிலோடும் குழந்தைகளோடும் இருவண்ணக் கொடி ஏந்திப் புறப்பட்டு விட்டாயா?” என்று செப்டம்பர் மாதத் தொடக்கத்திலேயே கடிதம் எழுதி, சீர்மிகு விழாவுக்கு சிந்தை மகிழ உரிமையுடன் அழைத்திடுவார் நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் அவர்கள்.

அவரின் அன்பான அழைப்பை ஆணையாக ஏற்று, குடும்பம் குடும்பமாக அணி வகுத்துத் திரண்டு வரும் உடன்பிறப்புகளின் இலட்சோப லட்சம் முகங்களைக் கண்டு மலர்ந்திடுவார் – மகிழ்ந்திடுவார் தலைவர். குடும்பக் கட்சி என்று குதர்க்கம் பேசும் கொள்கையற்ற கொள்ளைக் கூட்டத்தாருக்கு, இத்தகைய உணர்வுகளின் வலிமையோ உன்னதமோ தெரியாது. நமக்கோ, அந்த அன்பு அழைப்பு விடுத்து கடிதம் எழுதும் தலைவர் இன்றில்லையே என்ற ஏக்க உணர்வு இதயத்தைக் கனக்கச் செய்கிறது. பொன்னுடல் மறைந்தாலும் சீரிளமைத் தமிழ் போன்ற புகழுடன் திகழ்கின்ற தலைவர் கலைஞரின் அழியா நினைவுகள் நம்மை இயக்கிக் கொண்டே இருக்கின்றன. அதனால்தான், அவர் வகுத்துத் தந்த வழியில் முப்பெரும் விழாவினை சிறப்பாக நடத்திட, அவரது அன்பு உடன்பிறப்புகளான கழகத் தொண்டர்களை உங்களில் ஒருவனான நான் ஆர்வத்துடன் அழைக்கிறேன்.

கூடிக்கலையும் கூட்டமல்ல முப்பெரும்விழா. தலைவர் கலைஞர் அவர்கள் வகுத்துத் தந்த வழியில், தங்கள் இன்னுயிராக எந்நாளும் கழகம் காக்கும் இயக்கத்தின் முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கும் நிகழ்வும் இம்முறையும் இடம்பெறுகிறது.

பெரியார் விருதினை கழகத்தின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் த.வேணுகோபால் பெறுகிறார். இளமை முதலே பகுத்தறிவு -சுயமரியாதைக் கொள்கைகளை ஏற்று, பேரறிஞர் அண்ணா – தலைவர் கலைஞர் ஆகியோர் தலைமையில் கழகம் வளர்க்கும் பணியில் அயராது பாடுபட்டவர். முப்பெரும் விழா நடைபெறுகின்ற திருவண்ணாமலை மாவட்ட மண்ணின் மைந்தர். திருப்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று, சாதி – மத பாகுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களின் அன்பைப் பெற்றவர். பொதுமக்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்தவர்.

2009-நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். இன்றளவும் மக்கள் பணியையும் இயக்கப் பணியையும் தொய்வின்றித் தொடர்பவர்.

அண்ணா விருது பெறுகிற சி.நந்தகோபால் அவர்கள் ஆந்திர மாநிலம், நகரியைச் சேர்ந்தவர். அம்மாநிலத்தில் கழகத்தை வளர்க்கும் பணியில் தன் இளம் வயது முதல் இன்று வரை அயராமல் பாடுபட்டு வருபவர். மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழகத்தின் வடக்கு எல்லையான திருத்தணிப் பகுதியைப் பாதுகாக்க, பேரறிஞர் அண்ணாவின் கட்டளைப்படி சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் போராட்டத்தில் பங்கேற்றுப் பாடுபட்டவர். ஆந்திர மாநில கழக அவைத் தலைவராக 10 ஆண்டுகளுக்கு மேல் அயராது உழைத்தவர். இன்றும் பேரறிஞர் அண்ணா – தலைவர் கலைஞர் வழியில் இளைய தலைமுறையினரை நெறிப்படுத்தி, கழகத்தைக் கட்டிக் காத்து வருபவர்.

கலைஞர் விருது பெறும் ஏ.கே.ஜெகதீசன் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட 1949ஆம் ஆண்டு முதலே உறுப்பினராக இருக்கின்ற மூத்த முன்னோடி ஆவார். வகுப்புவாரி உரிமை ரத்து செய்யப்பட்டபோது, சமூக நீதியின் போர்க்குரலாக சக மாணவர்களைத் திரட்டிப் போராடியவர். தடையை மீறி இராவண காவியம் நூலை மேடையிட்டுப் படித்துக் காட்டியவர். பேரறிஞர் அண்ணா தலைமையில், தலைவர் கலைஞர் முன்னிலையில் கலைஞரின் “நச்சுக்கோப்பை” நாடகத்தை நடத்தி அதில் பழனியப்பன் பாத்திரத்தில் நடித்தவர். மிசா காலத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் கடற்கரையில் அமர்ந்து கழக முன்னோடிகளுடன் உரையாடும் நேரங்களில் அவருக்கு உறுதுணையாக இருந்தார் என்பதற்காகவே போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டவர் ஜெகதீசன். தலைவர் கலைஞர் மும்முறை போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியில் அவரது வெற்றிக்கு உழைத்தவர். 1996ல் சென்னை மாநகராட்சி மேயராக நான் பொறுப்பேற்றுப் பணியாற்றியபோது மாமன்ற உறுப்பினராகத் திறம்பட செயலாற்றியவர். 2001ல் மாநகராட்சியின் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக செயல்பட்டவர். தலைவர் கலைஞரின் “நெஞ்சுக்கு நீதி”யில் பாராட்டப்பட்டுள்ள ஏ.கே.ஜெகதீசனுக்கு முப்பெரும் விழாவில் கலைஞர் விருது வழங்கப்படுவது எத்துணைப் பொருத்தம்!

பாவேந்தர் பாரதிதாசன் விருதினைப் பெறுகிற சித்திரமுகி சத்தியவாணிமுத்து என்கிற பெயரே கழகத் தொண்டர்களுக்கு அவரை யார் என அடையாளம் காட்டிவிடும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல்மிக்க பெண் ஆளுமையாகத் திகழ்ந்தவர் அம்மையார் டாக்டர் சத்தியவாணிமுத்து அவர்கள். கழகம் நடத்திய போராட்டங்களில் பங்கேற்றவர். தலைவர் கலைஞர் அவர்களின் “தூக்கு மேடை” நாடகத்தை இயக்கப் பரப்புரையாக மேடைகளில் அரங்கேற்றியவர். பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான கழகத்தின் முதல் அமைச்சரவையிலும் தலைவர் கலைஞர் தலைமையிலான அமைச்சரவையிலும் அமைச்சர் பொறுப்பு வகித்து திறம்படச் செயலாற்றியவர். அவரது புதல்வியான சித்திரமுகி, 12 வயது முதலே இயக்கப் பணிகளில் ஈடுபட்டு, தேர்தல் பரப்புரைகள் செய்தவர். 16 வயது நிறைந்த நிலையில், கழகத்தின் அடிப்படை உறுப்பினராகி, தன் பணியைத் தொடர்ந்த சித்திரமுகி அவர்கள் தலைமைக் கழகப் பேச்சாளராகவும், கழகத்தின் பிரச்சாரச் செயலாளராகவும் தமிழகம் முழுவதும் பயணித்து கொள்கை முழங்கியவர். முன்னோடிகளையும் அவர்தம் குடும்பத்தையும் கழகம் என்றும் மறக்காது என்பதற்கு அடையாளம் இந்த விருது.

வேர்களை மறந்து விடுமா விருட்சம்? பேராசிரியர் விருது பெறுகின்ற சி.இறைவன் அவர்கள் தஞ்சையிலே தலைவர் கலைஞர் அவர்கள் 1962ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டபோது, அந்தக் கடுமையான தேர்தல் களத்தில் தலைவரின் வெற்றியினை உறுதி செய்திடும் வகையில் களப்பணியாற்றியவர். சட்டஎரிப்பு போராட்டம், இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம், மிசா கொடுங்காலம் எனக் கழகத்தின் போராட்டக் களங்கள் அனைத்திலும் பங்கேற்று சிறை சென்றவர். மிசா நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்களைத் தஞ்சைக்கு அழைத்து விழா நடத்திய தீரத்திற்கு உரியவர். தஞ்சை நகரமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்கான திட்டங்களை வகுத்தளித்தவர். 60 ஆண்டுகளாக ஒரே இயக்கம் – ஒரே கொடி – ஒரே தலைமை எனச் செயலாற்றி வரும் கொள்கை உறுதி மிக்க முன்னோடியாவார்.

முன்னோடிகளுக்கு வழங்கப்படும் இந்த மகத்தான விருதுகள் மட்டுமின்றி, முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளை சார்பில், தமிழகத்தின் நான்கு மண்டலங்களில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் சிறப்பாகப் பணியாற்றியவர்களில் தலா ஒருவருக்கும், ஊராட்சி செயலாளர்களில் தலா ஒருவருக்கும் ‘கழக விருது’ முப்பெரும்விழாவில் முதன்முறையாக வழங்கப்படவிருக்கிறது. கடந்த ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற முப்பெரும்விழாவில் உங்களில் ஒருவனான நான் முன்மொழிந்த அறிவிப்பினைச் செயல்படுத்திடும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது போலவே, ‘இளம் சாதனையாளர் விருது’க்காக தமிழ்நாடு மாநில துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற துணைப் பேராசிரியர் எழிலரசி – மியான்மரில் நடைபெற்ற ஆசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கமும் மற்றும் பல்வேறு போட்டிகளில் பல பதக்கங்களைக் குவித்த கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பூந்தளிர் – 16 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள மல்லிக்குத்தம் கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கவின் சான்றோன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் சேவையாக தங்கள் அன்றாடப் பணியை மேற்கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள், பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் எனத் தமிழகத்தின் அனைத்துத் தரப்பினரையும் ஊக்கப்படுத்தி வரும் மக்கள் இயக்கமாகத் தி.மு.கழகம் எனும் பேரியக்கம் திகழ்கிறது. அறக்கட்டளைகள் வாயிலாக கல்வி – மருத்துவம் போன்ற உதவிகள் தொடர்ந்திடும் நிலையில், அரசியல் களத்தில் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த உரைவீச்சுகள் முப்பெரும் விழாவில் உடன்பிறப்புகளை ஊக்கப்படுத்தி, உறைவிட்டெழும் போர்வாளாக ஜனநாயகக் களம் காணச் செய்யும்.

எதிரிகளை நாம் தேடிச் செல்வதில்லை. இனத்திற்கும் மொழிக்கும் மக்கள் நலனுக்கும் எதிராக எவரெல்லாம் செயல்படுகிறார்களோ அவர்களையெல்லாம் எதிர்த்துப் போராடி வெல்கின்ற வலிமை தி.மு.கழகத்திற்கே உரியது. இன்றைய அரசியல் களத்தில் எதிரணியில் இருப்பவர்கள் நமக்கு மட்டும் எதிரிகளல்லர். நாட்டு நலத்திற்கும் வளத்திற்கும் எதிரிகளாக இருக்கிறார்கள்.

குதிரை குப்புறத் தள்ளியது மட்டுமல்லாமல் , குழியும் பறித்தது என்பதுபோல பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற நடவடிக்கைகளால் ஏழை – நடுத்தர மக்களின் தொழில்களையும் வேலைவாய்ப்புகளையும் சீரழித்து, அவர்களின் வாழ்வைக் கீழே தள்ளிய மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது பெருந்தொழில் நிறுவனங்களே ஒன்றன்பின் ஒன்றாக மூடப்படுகிற அளவிற்கு பொருளாதாரத்திற்குப் படுகுழி பறித்திருக்கிறது. விதை நெல்லை எடுத்து விருந்து சமைத்து களிப்பது போல, தன்னுடைய தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட பாதிப்பினை ரிசர்வ் வங்கியில் இருப்பிலிருந்த 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து சமாளித்து, எதிர்கால நிலைமையைக் கேள்விக்குறியாக்குகிறது. மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களால் ஜனநாயக உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன. மாநில உரிமைகள் நசுக்கப்படுகின்றன.

‘தவிடு தின்னும் ராஜாவுக்கு முறம் பிடிக்கும் மந்திரி’ போல, மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கெல்லாம் உடன்பட்டு, முழந்தாளிட்டு அவற்றை நிறைவேற்றுகிறது மாநிலத்தை ஆள்கின்ற அ.தி.மு.க. அரசு. ‘நீட்’ தேர்வு தொடங்கி, ரேஷன் கார்டு வரை தமிழ்நாட்டின் உரிமைகளையும் நலன்களையும் பறிகொடுத்துவிட்டு, பதவியை மட்டும் காப்பாற்றிக் கொண்டு, பகல்கொள்ளையில் பரவசம் கொண்டு, பல நாடுகளுக்கும் பவனி வந்து கொண்டிருக்கிறார்கள் இங்குள்ள அமைச்சர்கள். சுற்றுலாத் துறைக்கு ஓர் அமைச்சர் இருப்பது வழக்கம். இங்கே முதல்வரில் தொடங்கி ஒட்டுமொத்த அமைச்சரவையும் குத்தகை போல சுற்றுலா அமைச்சரவை ஆகியிருக்கிறது.

நாட்டு மக்களை நாளும் வஞ்சித்து வாட்டிக் கொண்டிருக்கும் மத்திய – மாநில அரசுகளுக்கு எதிரான ஜனநாயகப் போரினைத் தொடர்ந்து நடத்திடவும், அந்தக் களங்களில் நாம் பெறப்போகும் வெற்றிகளுக்குக் கட்டியம் கூறிடும் வகையில், நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும் திருவண்ணாமலையில் நடைபெறுகிறது முப்பெரும்விழா.

முத்தமிழறிஞரின் இனிய உடன்பிறப்புகளே.. முப்பெரும்விழாவில் கூடிடுவோம். பெரியார் – பேரறிஞர் கொள்கை வழி தி.மு.கழகம் எனும் பேரியக்கத்தைத் தலைவர் கலைஞர் வகுத்த வழியில் வாழ்நாளெல்லாம் கண்ணெனக் காத்திடுவோம்!

திருவள்ளுவர் ஆண்டு 2050, ஆவணி 21, அன்புடன்

07-09-2019. மு.க.ஸ்டாலின்

Bala Trust

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES