55 வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு திருச்சி புத்தூர் கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம், வாசவி கிளப் எலைட் கப்பிள்ஸ் திருச்சி அமைப்புடன் இணைந்து நாணயங்கள் மூலம் பண்டைய வரலாறு
சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது. நூலகர் புகழேந்தி வரவேற்றார். வாசவி கிளப் எலைட் கப்புள்ஸ் திருச்சி தலைவர் தனபால், செயலர் திவ்யா வீரமணி உள்ளிட்டோ ர் முன்னிலை வகித்தனர். திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் துவக்கவுரையாற்றினார். நாணயங்கள், பணத்தாள்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன் பேசுகையில், தமிழ்க் குடிகளைப் பற்றி உயர்வாகக் கூறினாலும், நமது பண்டைய வரலாறு பெரிய அளவுக்கு பதிவு செய்யப்படவில்லை. தொல்லியல் ஆய்வாளர்கள் பெரிதும் முயன்று, நமது வாழ்வியலை வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். பொதுவாக, வரலாற்றைத் தெரிந்துகொள்ள கல்வெட்டுகள், செப்பேடுகள், நாணயங்கள் தான் பெரிதும் உதவுகின்றன. நாணயங்கள் மூலம் பல்வேறு தகவல்கலையும் தெரிந்துகொள்ள முடிகிறது. பண்டமாற்று முறை பிரதானமாக இருந்த காலகட்டத்தில், கி.மு. 5, 6-ம் நூற்றாண்டுகளில் லிடியா, பெர்ஷியா பகுதிகளில் நாணயங்களின் பயன்பாடு தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானத்தில்
சதமானா’ என்ற பெயரில் நாணயம் வெளியாகியுள்ளது. கி.மு. 3-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ம் நூற்றாண்டு வரை மகதப் பேரரசு, அசோகப் பேரரசு காலத்தில் முத்திரை நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வட இந்தியாவில் கி.பி. 1-ம் நூற்றாண்டுடன் முத்திரை நாணயப் பயன்பாடு நின்றுவிட்டாலும், தமிழகத்தில் கி.பி. 3, 4-ம் நூற்றாண்டுகள் வரை முத்திரை நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த முத்திரை நாணயங்களில் சூரியன், சந்திரன், மரம், நட்சத்திரம், ஆமை என இயற்கையைக் குறிக்கும் உருவங்கள் முத்திரையாக இருக்கும். ஒவ்வொரு முத்திரைக்கும் தனித்தனி அச்சுகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
சங்க காலத்தில் சதுர வடிவிலான நாணயங்களும் இருந்துள்ளன. சேர, சோழ, பாண்டியர்கள் நாணயத்தின் ஒருபுறத்தில் வில், அம்பு, புலி, மீன் போன்ற சின்னங்களையும், மறுபுறத்தில் யானையின் உருவத்தையும் பொறித்துள்ளனர். சில நாணயங்களில் கொல்லிப்புரை, குட்டுவன் கோரை, மாக்கோதை
என்றெல்லாம் பிராமி எழுத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலமாகவே பல்வேறு நாணயங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. சங்க காலத்தில் ரோமானியர்கள் தமிழகத்துடன் வணிகத் தொடர்பு வைத்து, மிளகு, சந்தனம், முத்து மற்றும் பல்வேறு வாசனைப் பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர். சங்க காலம் முடிந்த பின்னர் ஈயக் காசுகள் பயன்படுத்தப்பட்டன. பாண்டியர்கள் காலத்து நாணயங்களில் மீன் சின்னமும், சுந்தரபாண்டியன் போன்ற பெயர்களும் உள்ளன. சோழவள நாடு சோறுடைத்து
என்ற பெருமைக்குரிய சோழர் ஆட்சியில், ராஜராஜசோழன் கால நாணயங்களில் ஸ்ரீராஜராஜ' என்ற எழுத்தும், ராஜாவின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. தங்க, வெள்ளி நாணயங்கள் அரிதாகவே கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், செப்பு நாணயங்கள் அதிகம் கண்டறியப்பட்டுள்ளன. ராஜேந்திர சோழன் வெளியிட்ட வெள்ளி நாணயத்தில்,
கங்கை கொண்ட சோழன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று பேரரசுகளையும் அவர் வென்றதால், சேர, சோழ, பாண்டிய சின்னங்கள் அவரது நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம்கள் ஆட்சிக் காலத்தில்தான், முதல் முறையாக நாணயத்தை அச்சடித்த இடம், ஆண்டு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆட்சியாளர் பெயரும், ‘கலிமா’ வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. விஜயநகரப் பேரரசுக்கு முன்புவரை தமிழக நாணயங்களில் கடவுள்களின் உருவங்கள் அச்சிடப்படவில்லை. விஜயநகரப் பேரரசு காலத்தில்தான் கிருஷ்ணன், விஷ்ணு, சிவ-பார்வதி, அனுமான், கருடன், சங்குசக்கரம் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தங்கம், தாமிரக் காசுகள்தான் அப்போது புழக்கத்தில் இருந்துள்ளன. அவர்களது தலைநகரான ஹம்பியில் வைரங்களை காய்கறிகள்போல கூறுகட்டி விற்றுள்ளனர். மைசூர் உடையார் ஆட்சியிலும் ராஜாவின் படமும், சிவ-பார்வதி உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. திப்பு ஆட்சியில் பாரசிக எழுத்துகளில், `மௌலூதி’ ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
நாணயங்கள் அச்சிடும் உரிமையை இஸ்லாமிய, இந்து மன்னர்களிடமிருந்து பெற்ற பிரிட்டிஷ்காரர்கள், சென்னையில் நாணய சாலையை நடத்தியுள்ளனர். இதேபோல, ப்ரெஞ்சு, டச்சு, டேனிஷ்காரர்களும் தனித்தனியே நாணயங்களை அச்சடித்துள்ளனர். 1,700-களின் இறுதியில்தான் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்தன. பேங்க் ஆஃப் மெட்ராஸ் அச்சடித்த ரூபாய் நோட்டுகளில் தமிழ் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் காகிதத்தின் ஒரு பக்கம் மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. இரண்டரை ரூபாய் நோட்டுகூட அச்சடித்துள்ளனர். சிலர் பழங்கால நாணயங்களின் அருமை தெரியாமல், அவற்றை உருக்கி விடுகின்றனர். பழைய தங்க நாணயங்களைக் கொடுத்து, நகைகளை வாங்கிக் கொள்ளும் பழக்கம் இருந்துள்ளது. பழங்கால நாணயங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கண்காட்சி, கருத்தரங்குகளை நடத்துகிறோம் என்றார். நாணயங்கள் பணத்தாள்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், சந்திரசேகரன், குணசேகர் உட்பட பலர் நிகழ்ச்சியில்.