Monday , October 14 2024
Breaking News
Home / இந்தியா / இரு மாதங்களுக்கு ஈ.எம்.ஐ வேண்டாமே..! மத்திய அரசை எதிர்பார்க்கும் மக்கள்.

இரு மாதங்களுக்கு ஈ.எம்.ஐ வேண்டாமே..! மத்திய அரசை எதிர்பார்க்கும் மக்கள்.

இரு மாதங்களுக்கு ஈ.எம்.ஐ வேண்டாமே..! மத்திய அரசை எதிர்பார்க்கும் மக்கள்.

கொரோனா பரவலைத் தடுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களின் நலன் கருதி, வாகனக் கடன் மற்றும் இதர கடன்களுக்கான தவணைத் தொகை வசூலிப்பதில் இருந்து, அடுத்த இரு மாதங்களுக்கு வங்கிகள் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் மக்கள் தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துவிடக்கூடாது என்பதற்காக 21 நாட்கள் நாடு முழுவதும் முடக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதாவது ஏப்ரல் மாதம் 14 ந்தேதிவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்.

இதனை வரவேற்று அனைத்து மக்களும் வீடுகளுக்குள் முடங்கி இருக்க தயாரானாலும், பலர் தங்கள் குடும்ப நிதி நிலை மற்றும் வாழ்வாதாரத்தை எப்படி எதிர் கொள்ள போகிறோம் ? என்று கடுமையான மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வேலை இல்லை என்பதால், மக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து, தங்களிடம் உள்ள சேமிப்பை சாப்பாட்டிற்கு பயன்படுத்தி கொள்வார்கள் என்று அரசு கருதலாம். மாதச் சம்பளத்தையும், தினக்கூலியையும் மட்டுமே நம்பி வாழ்க்கையை நகர்த்தும் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் இந்த நெருக்கடி நிலையை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற பதை பதைப்பில் உள்ளனர்.

மாதச் சம்பளக்காரர்களுக்கோ, வங்கியில் பெற்றுள்ள தனி நபர் கடன், இரு சக்கர வாகனக் கடன், கார் கடன் , வீட்டுக்கடன் போன்றவற்றின் தவணைத் தொகைகள் மாதம் பிறந்ததும் கதவை தட்ட தயாராகி விடுமே என்ற அச்சம், ஏழை எளிய மக்களுக்கோ, வேலை இல்லாமல் அடுத்த 21 நாட்களை கடன் வாங்கியே கடக்க வேண்டிய கடுமையான நிலை..!

தமிழகத்தில் அரிசி வாங்கும் ரேசன்கார்டு தாரர்களுக்கு தலா 1000 ரூபாயும், இலவச அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவை ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும். அதே போல ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் 1,000 ரூபாய் சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டு விட்டது.

அதே நேரத்தில் மாதச் சம்பளத்தின் பெரும் பகுதியை தாங்கள் பெற்ற வங்கிக் கடன்களின் தவணைக்கு கொடுத்து விட்டு, கையை பிசைந்து கொண்டு பட்ஜெட் வாழ்க்கை வாழும் தங்களுக்கு அரசு என்ன செய்ய போகின்றது ? என்ற எதிர்பார்ப்பில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் நடுத்தர வர்க்கத்தினர்..!

அரசு, மாதச் சம்பளம் முழுமையாக வழங்க சொல்லி விட்டாலும் எத்தனை தனியார் நிறுவனங்கள் அரசு உத்தரவை செயல்படுத்தப் போகின்றன என்பது கேள்வி குறிதான். காரணம் தங்களுக்கும் பொருளாதார இழப்பு என்று காரணம் காட்டி தனியார் நிறுவனங்கள் சம்பளத்தை முழுமையாக வழங்காமல் இழுத்தடிக்க வாய்ப்பு உண்டு…!

அதே நேரத்தில் வங்கிக் கடன்களுக்கு அடுத்த இரு மாதங்களுக்கு தவணைத் தொகை செலுத்த தேவையில்லை என்று அறிவித்தால் மட்டுமே, மாதச் சம்பளத்தில் தவணைத்தொகை செலுத்தியே வாழ்க்கையை இழுத்துப் பிடித்து கொண்டிருப்பவர்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும். நெருக்கடி நிலை சீரடைந்த அடுத்தடுத்த மாதங்களில் அந்த இரு தவணைத் தொகையை பிரித்து செலுத்தும் வசதியை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதே முறையில் ஆட்டோ, சரக்கு வாகனம், வாடகை வேன், லாரி உள்ளிட்டவற்றை வங்கிக் கடனில் வாங்கி தொழில் செய்பவர்களுக்கும் வங்கிகள் செய்ய அவகாசம் அளிக்க முன்வந்தால் இந்த 21 நாட்கள் மட்டுமல்ல, கூடுதலாக 10 நாட்கள் கொடுத்தாலும் மன உறுதியுடன் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்க லட்சக்கணக்கான மக்கள் தயார் என்கின்றனர்..!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளுடன் ஆலோசனை நடத்தி, அடுத்த இரு மாத தவணைத் தொகையை, நிலைமை சீரடைந்த பின்னர் பிரித்து வசூலிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டுக்கணக்கில் தவணைத் தொகையை உரிய நேரத்தில் செலுத்துவோரிடம் இருந்து, இரு மாதங்களுக்கான தவணையை பின்னர் வசூலிப்பது வங்கிகளுக்கு சிரமமாக இருக்காது என்ற எதிர்பார்ப்பில் மத்திய அரசின் அறிவிப்பிற்காக மாத சம்பளதாரர்கள் காத்திருக்கின்றனர்..!

Bala Trust

About Admin

Check Also

ரத்தன் டாடா எனும் சகாப்தம்…

பிறப்பு: டிசம்பர் 28, 1937 | இறப்பு: அக்டோபர் 9, 2024 ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார் , அவர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES