Sunday , November 3 2024
Breaking News
Home / தமிழகம் / கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து 100 பவுன் கொள்ளை – மனைவியை மடக்கிய போலீஸ்

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து 100 பவுன் கொள்ளை – மனைவியை மடக்கிய போலீஸ்

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து 100 பவுன் கொள்ளை – மனைவியை மடக்கிய போலீஸ்.

தூத்துக்குடியில் கணவருக்கு கொரோனா கசாயம் கொடுத்து மயங்க செய்து, வீட்டில் இருந்த 100 சவரன் நகைகளை கொள்ளையடித்த மாஃபியா மனைவி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் 58 வயதான வின்செண்ட். துறைமுக ஊழியரான இவரது மனைவி ஜான்சி ஏலச்சீட்டு நடத்தி வருகின்றார், வின்செண்ட் – ஜான்சி தம்பதிக்கு இரு மகள்கள், இருவரும் திருமணம் செய்து கொடுத்து விட்ட நிலையில் வீட்டில் கணவன் மனைவி மட்டும் வசித்து வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவால் இருவரும் வீட்டுக்குள் முடங்கி இருந்த நிலையில் உள்பக்கம் பூட்டப்பட்ட வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 100 சவரன் நகைகளை கொள்ளையன் அள்ளிச்சென்றுவிட்டதாக தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் வின்செண்ட் புகார் அளித்தார்.

காவல்துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வயதான காலத்தில் வங்கியில் வைக்காமல் 100 சவரன் நகைகளை வீட்டில் வைத்தது ஏன்? என்ற கோணத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் டுவிஸ்ட்டுக்கு மேல் டுவிஸ்டுகளால் இந்த கொள்ளை சம்பவத்தில் துப்பு துலங்கியது.

துறைமுக ஊழியரான வின்செண்ட் மிகவும் சிக்கனமாக இருந்து பணத்தை கொண்டு பழைய நகைகளை வாங்கி சேமித்து வந்துள்ளார். அந்தவகையில் சுமார் 93 சவரன் நகைகளை வங்கியில் உள்ள லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பாக வின்செண்ட் செல்போனுக்கு வங்கியில் இருந்து பேசுவதாக அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அதில் பேசிய பெண் ஒருவர், வங்கியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதால் தங்கள் மனைவியை அழைத்து வந்து நகையை எடுத்து சென்றுவிடுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து வங்கி லாக்கரில் இருந்து நகைகளை மொத்தமாக எடுத்து வந்து வீட்டு பீரோவில் வைத்திருந்த நேரத்தில் தான் இந்த கொள்ளை சம்பவம் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

வங்கியில் விசாரித்த போது வங்கியில் இருந்து வின்செண்டுக்கு யாரும் போன் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தினர். வீட்டில் இருவர் மட்டுமே இருக்கும் நிலையில் பூட்டப்பட்ட வீட்டுக்குள் யார் வந்திருப்பார்கள் ? என்று அவரது மனைவி ஜான்சியை அழைத்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரனாக பதில் அளித்து காவல்துறையினரிடம் வசமாகசிக்கிக் கொண்டார் ஜான்சி..!

ஏலசீட்டு நடத்திவந்த ஜான்சிக்கு பலர் ஏலத்தொகையை கட்டாமல் கம்பி நீட்டியதால் 10 லட்சம் ரூபாய் வரை கடன் இருந்துள்ளது. மாதம் வட்டி மட்டும் 35 ஆயிரம் ரூபாய் கட்டவேண்டிய நிலையில் கணவர் உலகமகா சிக்கன திலகமாக இருந்ததால் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார்.

வீட்டில் உள்ள பணத்தை நகையாக வாங்கி அத்தனை நகையையும் வங்கியில் கொண்டு வைத்து விடுவதால், பணத்தேவைக்கு என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிய ஜான்சியின் மூளை, மாஃபியா கும்பல் தலைவன் போல வேலை செய்துள்ளது.

அதன்படி வீட்டிற்கு வெளியே போய் வேறொரு போனில் இருந்து வங்கி லாக்கரில் உள்ள நகைகளுக்கு பாதுகாப்பில்லை என்றும் அதனை எடுத்து செல்ல அறிவுறுத்தி, தனது கணவரது செல்போனுக்கு குரலை மாற்றி பேசியுள்ளார் ஜான்சி. திட்டப்படியே வங்கி லாக்கரில் இருந்த நகைகள் வீட்டு பீரோவுக்கு வந்து விட்டது.

அங்கிருந்து நகையை மொத்தமாக எடுத்துச்செல்ல திட்டமிட்ட ஜான்சி , கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்ப கசாயம் தருவதாக ஏமாற்றி அதில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்ததால், அதனை குடித்த வின்செண்ட் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விட்டார்.

பின்னர் அவரது இடுப்பில் இருந்து சாவிக்கொத்தை எடுத்து பீரோவை திறந்து 93 சவரன் நகையை அள்ளிச்சென்று வீட்டுக்கு வெளியே புதைத்துள்ளார். பின்னர் வீட்டுக்குள் வந்து வீட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டு, பீரோவில் இருந்த துணிகளை கலைத்து போட்டுவிட்டு வீட்டு சாவியை பீரோவுக்கு பின்பக்கம் தூக்கி வீசிவிட்டதாக கூறப்படுகின்றது. ஜான்சி சுட்டிக்காட்டிய இடத்தில் இருந்து 93 சவரன் நகைகளை கைப்பற்றிய போலீசார். அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முன்னதாக காலையில் வின்செண்ட் தனது வீட்டில் கொள்ளை நடந்திருப்பதாக போலீசில் புகார் அளித்த போது கொள்ளை குறித்து அங்கலாய்த்து கொண்டே செய்தியாளர்களிடம் பேட்டி வேறு கொடுத்தார் மாஸ்டர் பிளான் மனைவி ஜான்சி..!

அதே போல போலீசார் ஊரடங்கு டென்சனில் இருந்த நிலையில் அங்கு கொண்டுவரப்பட்ட மோப்ப நாய் ஒன்று, அருகில் நின்ற கொள்ளைக்காரியான ஜான்சியை கவ்விப்பிடிக்காமலும் , நகை புதைக்கப்பட்ட இடத்திற்கு செல்லாமலும் , சம்பந்தமே இல்லாத நான்கு தெருக்களுக்கு இழுத்து சென்று போலீசாரை சுற்றலில் விட்டது ஒரு டுவிஸ்ட் என்றால் 93 சவரன் நகையை பறி கொடுத்துவிட்டு ரவுண்ட்டாக இருக்கட்டுமே என்று 100 சவரன் நகை களவு போனதாக போலீசில் புகார் அளித்தது தான் இந்த கொள்ளை சம்பவத்தின் உச்சகட்ட டுவிஸ்ட்..!

கொரோனா கசாயம்ன்னு யாராவது எதையாவது தந்தால் அதனை பருகும் முன்பு உஷாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றது காவல்துறை..!

Bala Trust

About Admin

Check Also

தொழுநோயாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் விழா…

01.11.2024 இன்று காலை 11.00 மணியளவில் குளித்தலை அரசு மருத்துவமணை வளாகத்தில் அன்னை தெரசா தொழுநோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலப்பணிச் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES