விக்ரம் லேண்டர் உடையவில்லை; நிலவின் தரையில் உள்ளது: இஸ்ரோ !*விக்ரம் லேண்டர் ஒரே ஒரு கருவியாகவே, சாய்ந்த நிலையில், நிலவுப் பரப்பின் மேல் அப்படியே உள்ளது. அது மெதுவான தரையிறங்கலை மேற்கொள்ளாமல் வேகமாக நிலவுப் பரப்பில் மோதி நின்றிருக்கிறது.
லேண்டர் பல்வேறு துண்டுகளாக உடையவில்லை. அது ஒரே ஒரு முழுமையான கருவியாகவே உள்ளது. என்று கூறியுள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். இருப்பினும் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தி, அதனை இஸ்ரோவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
நிலவு குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), சந்திரயான்-2 என்ற விண்கலத்தை ராக்கெட் மூலம் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி விண்ணில் ஏவியது.
ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கியதுதான் சந்திரயான்-2 விண்கலம். விண்கலம் நிலவை நெருங்கியதை தொடர்ந்து ஆர்பிட்டரில் இருந்து, பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் கடந்த 2-ஆம் தேதி தனியாக பிரிந்தது. படிப்படியாக லேண்டரை நிலவின் மேற்பரப்பை நோக்கி இறக்கி வந்தது.
செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை 1.45 மணி அளவில், சந்திரனின் மேற்பரப்பில் இறங்குவதற்கு 12 நிமிடங்களுக்கு முன் , லேண்டர் பூமியுடனான தொடர்பை இழந்தது. இது அதன் பாதையிலிருந்து விலகி சந்திரனில் விழுந்ததாகக் கூறப் பட்டது.
இந்நிலையில், செப்டம்பர் 8 ஆம் தேதி சந்திரனில் லேண்டர் விக்ரம் எங்கே உள்ளது; லேண்டரின் நிலை என்ன என்பது குறித்த தெளிவான படம் எடுப்பதற்கான முயற்சியை மேற்கொண்டது இஸ்ரோ! நிலவில் விக்ரம் லேண்டர் இறக்க திட்டமிடப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் விழுந்துள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி சந்திர பூமத்திய ரேகைக்கு 70 டிகிரி தெற்கிலும் சந்திர தென் துருவத்திலிருந்து 600 கி.மீ தொலைவிலும் இருந்தது.
‘சந்திர மேற்பரப்பில் லேண்டர் விக்ரமின் இருப்பிடத்தை நாங்கள் கண்டறிந்துள்ளோம். சுற்றுப் பாதையில் உள்ள ஆர்பிட்டர், அதன் படத்தைக் கிளிக் செய்துள்ளது. அதனுடன் தொடர்பை மீண்டும் தொடர முயற்சிக்கிறோம்.. என்றார் சிவன்.
சுற்றுப்பாதையில் உள்ள சந்திரயான் விண்கலத்தில் 30செ.மீ தெளிவுத் திறன் கொண்டதாக, ஆர்பிட்டரில் உயர் தெளிவுத்திறன் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
Couresty Goes to Manithavidiyal