8835 கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பு
Admin
September 10, 2019
இந்தியா, செய்திகள், தமிழகம்
439 Views
இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க் கிழமை அதிகாலை நாடு திரும்பினார். சுமார் 8800 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் விரைவில் இஸ்ரேல் செல்லவிருப்பதாகவும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு தமிழக முதலமைச்சர் கே.எடப்பாடி
ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்ட முதலமைச்சர் முதலில் லண்டன் நகருக்குச் சென்றார். அங்கே, அந்நாட்டில் செயல்படுத்தப்படும் அவசர ஆம்புலன்ஸ் சேவை, கொசுக்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஆகியவற்றைப் பார்வையிட்டதோடு, கிங்க்ஸ் கல்லூரி மருத்துவமனை தமிழ்நாட்டில் கிளைகளைத் திறப்பதற்கான ஒப்பந்தத்திலும் முதலமைச்சர் கையெழுத்திட்டார்.
மேலும் அங்குள்ள தொழிலதிபர்களையும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர் சந்தித்துப் பேசினார்.
செப்டம்பர் ஒன்றாம் தேதி இங்கிலாந்திலிருந்து நியூயார்க் நகருக்குச் சென்ற முதல்வர், அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அமெரிக்க தொழில்முனைவோர் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார். பிறகு, சான் ஃப்ரான்சிஸ்கோவில் ஃபாக்ஸ்கான், லிங்கன் எலெக்ரிக்ஸ் நிறுவன அதிகாரிகளையும் அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களையும் சந்தித்துப் பேசினார். பஃபல்லோ மற்றும் கலிஃபோர்னியாவில் உள்ள கால்நடைப் பண்ணைகளையும் பார்வையிட்டார்.
அங்கிருந்து நாடு திரும்பும் வழியில் துபாய் சென்று, அங்குள்ள துபாய் தொழில்முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் விருந்தினராகக் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமையன்று அதிகாலை மூன்று மணியளவில் சென்னை திரும்பினார்.
13 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய முதல்வர் பழனிசாமிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள், கட்சிப் பிரமுகர்கள், தொண்டர்கள் நேரில் சென்று அவரை வரவேற்றனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “இங்கிலாந்தில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. மருத்துவப் பணியாளர்களின் பணித் திறன் மேம்பட ஒரு ஒப்பந்தம், கிங்க்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் துவங்க ஒரு ஒப்பந்தம், டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த ஒப்பந்தம் ஆகியவை செய்யப்பட்டன. மேலும் அங்கிருப்பவர்களிடம் தொழில்முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பஃபல்லோவில் உள்ள கால்நடைப் பண்ணைகளைச் சென்று பார்வையிட்டோம். அது பயனுள்ளதாக இருந்தது. நியூயார்க் சென்று அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து, 2780 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. 17,760 நபர்களுக்கு இதன் மூலம் வேலை வாய்ப்புக் கிடைக்கும்.
பெட்ரோலியத் துறையில் நாஃப்தா, க்ராக்கர் யூனிட் அமைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 50,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். இதில் பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.
நியூயார்க் நகரில் யாதும் ஊரே திட்டத்தைத் துவங்கியிருக்கிறேன். இதன் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், தமிழர்கள் இங்கே தொழில் துவங்க முடியும். சான் பிரான்சிஸ்கோ நகரில் மின்சாரத்தில் இயங்கும் கார் தொழிற்சாலையை பார்த்தோம். அவர்களை இங்கே தொழில் துவங்க அழைத்துள்ளோம். அதேபோல ப்ளூம் எனர்ஜி மாசில்லா எரிசக்தி நிறுவனத்தை பார்வையிட்டோம்.
அதற்குப் பிறகு, துபாயில் தொழில் முனைவோர் கூட்டத்தில் முதலீட்டாளர்களைச் சந்தித்தோம். அங்கே 3780 கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்த்திருக்கிறோம். 6 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பத்தாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். பல தொழில்முனைவோரை இங்கே தொழில் துவங்க அழைத்திருக்கிறோம்.
மொத்தமாக 8835 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளோம். 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 35,520 பேருக்கு இதன் மூலம் வேலை வாய்ப்புக் கிடைக்கும்” என்று கூறினார்.
தமிழ்நாட்டில் தொழில் துவங்க முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளதாகவும் நீண்ட நாட்களாக தமிழ்நாட்டிலிருந்து எந்த முதலமைச்சரும் வெளிநாடு செல்லவில்லையென்ற குறைபாடு இருந்தது; அந்தக் குறைபாடு இப்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த நினைத்திருப்பதாகவும் அடுத்ததாக இஸ்ரேல் செல்லவிருப்பதாகவும் முதல்வர் கூறினார்.
“நாம் ஒரு ஏக்கருக்குப் பாய்ச்சும் தண்ணீரை ஏழு ஏக்கருக்குப் பயன்படுத்துகிறார்கள். கழிவு நீரை மறுசுழற்சி செய்து விவசாயத்தில் பயன்படுத்துகிறார்கள். அதைப் பார்க்க வேண்டும். நமது மாநிலத்தில் அவ்வப்போது பருவமழை பொய்த்துவிடுகிறது. ஆகவே நீரைச் சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து அறிய இஸ்ரேல் செல்கிறேன்” என்று தெரிவித்தார்.
Coursty Goes to VelliEthal.