Sunday , September 8 2024
Breaking News
Home / Politics / பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: குமரியில் நாளை காங்கிரஸ் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: குமரியில் நாளை காங்கிரஸ் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: குமரியில் நாளை காங்கிரஸ் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

சென்னை: “தமிழக அரசு கேட்ட மழை, வெள்ள நிவாரணத் தொகை ரூ.37,000 கோடியில் ஒரு சல்லிக் காசு கூட தராத நிலையில், சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கன்னியாகுமரியில் நாளை கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2019 -ம் ஆண்டு டிசம்பர் 11 அன்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டது தான் குடியுரிமை திருத்தச் சட்டம். அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பிறகு துருபிடித்துப் போன பழைய அஸ்திரத்தை இன்றைக்கு பாஜக கையில் எடுத்து, மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்குத் தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாஜக அறிமுகப்படுத்தியிருக்கிறது.

பதவிக் காலம் முடியும் நேரத்தில் தேர்தல் பத்திர நன்கொடை வழக்கில் பட்டியலை வெளியிட வேண்டுமென்ற உச்சநீதின்றத் தீர்ப்பு பாஜகவுக்கு மரணஅடியாக விழுந்துள்ளது. அதிலிருந்து தப்பிக்கவும், மக்களை திசைதிருப்புவதற்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாஜக நிறைவேற்ற முயற்சி செய்கிறது. ஆனால், எத்தகைய முயற்சிகள் எடுத்தாலும் பாஜகவின் வீழ்ச்சியை தடுக்க முடியாது.

சிறுபான்மையின மக்களான இஸ்லாமியர்களையும், இலங்கை தமிழர்களையும் கைவிடும் சட்டம் தான் பாஜகவின் குடியுரிமை திருத்தச் சட்டம். இந்த சட்டம் இஸ்லாமியர் மீதான வெறுப்பை விதைக்கிறது. மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்கிறது அரசமைப்புச் சட்டம். ஆனால், மத சிறுபான்மையின மக்களை புறக்கணிக்கிற ஒரு சட்டத்தை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடுவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் இதை அமல்படுத்த முயல்வதை விட ஒரு ஜனநாயக விரோதச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் வரலாம் என்கிறார்கள். அனைவரும் வரலாம் என்று சொல்லவில்லை. அந்த நாட்டை சேர்ந்த இஸ்லாமியர்கள் நீங்கலாக மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள் வரலாம் என்கிறார்கள். இஸ்லாமியர்களை ஏன் புறக்கணிக்க வேண்டும்? சிறுபான்மையின மக்கள் மீதான வெறுப்பை விதைப்பதன் மூலமாக வாக்கு வங்கியை விரிவுபடுத்துவதே பிரதமர் மோடியின் நோக்கமாகும்.

மக்களை பிளவுபடுத்தி வாக்கு வங்கியை விரிவுபடுத்துவதன் மூலம் வருகிற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று பகல் கனவு காண்கிறார். அவரது கனவை தகர்க்கத் தான் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும், தற்போது மணிப்பூர் முதல் மும்பை வரையிலும் மாபெரும் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அவரது பயணம் பாஜக ஆட்சிக்கு முடிவுகட்டுகிற பயணமாகும்.

இந்நிலையில், 10 ஆண்டுகால மக்கள் விரோத பாஜக ஆட்சியினால் பொருளாதார பேரழிவு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மோடி ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது தமிழகம் வராத பிரதமர் மோடி, தமிழகத்துக்கு ஐந்தாவது முறையாக வர இருக்கிறார்.

தமிழக அரசு கேட்ட நிவாரணத் தொகை ரூபாய் 37,000 கோடியில் ஒரு சல்லிக் காசு கூட தராத நிலையில், சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் பிரதமர் மோடியை கண்டித்து கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் அருகே நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு அவர் வரும் போது எதிர்ப்பு தெரிவிக்கிற வகையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் தலைமையில்,மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பினுலால் சிங், கே.டி. உதயம், ஜெ. நவீன்குமார் ஆகியோர் முன்னிலையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இதில் மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் மற்றும் வட்டார, நகர, பேரூர், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மோடி அரசுக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள்’ என்று அவர் கூறியுள்ளார்.

Bala Trust

About Admin

Check Also

தந்தையை இழந்த கல்லூரி மாணவனுக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கிய சிங்கப்பூர் குரு சித்தம் பெருங்குடில் அமைப்பின் நிறுவனர்…!

சிவகங்கை மேலமங்கத்தில் வசித்து வரும் கனரக ஊர்தி ஓட்டுநரான ஜோர்ஜ் டோமினிக்(49)அவர்கள் கடந்த மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மூத்த …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES