புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், 2024 ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15) அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மாநில வாரியான கள ஆய்வை தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அண்மையில் ஜம்மு – காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் மற்றும் தேர்தல் பணிக்கு தேவையான துணை ராணுவப் படைகள் குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தியது. இதைத் தொடர்ந்து மார்ச் 11, 12, 13-ம் தேதிகளில் ஜம்மு – காஷ்மீர் செல்லும் இக்குழுவினர், மக்களவைத் தேர்தலுடன் ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் நடத்தலாமா என்பது குறித்து கள ஆய்வுகளை நடத்தினர். இதனையடுத்து இன்று மக்களாவை தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனநாயகத் திருவிழா: ஒவ்வொரு ஐந்த ஆண்டும் 543 தொகுதிகள் கொண்ட மக்களவைத் தேர்தல் இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டால் அரசியல் களத்தில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் தொடங்கிவிடும்.
மக்களவைத் தேர்தலை ஒட்டி இப்போதே தேசியக் கட்சிகள் தத்தம் வேட்பாளர்களை அறிவிக்கத் தொடங்கிவிட்டன. பாஜக இதுவரை இரண்டு கட்டங்களாக 267 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற தேசியக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. மாநிலக் கட்சிகளும் கூட்டணி, வேட்பாளர் அறிவிப்பை தீவிரப் படுத்தியுள்ளன. மேற்குவங்கத்தில் மம்தா 42 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என அறிவித்து கவனம் ஈர்த்தார். இவ்வாறு தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது.
தேர்தல் ஆணையர்கள் நியமனம்: இதனிடையெ, புதிய தேர்தல் ஆணையர்களாக சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோர் நேற்று நியமனம் செய்யப்பட்டனர்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகிக்கிறார். தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் ஆணையர் அருண் கோயல் கடந்த 9-ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். இந்நிலையில் மக்களவைத் தேர்தலை தேசம் எதிர்நோக்கியுள்ளதால், சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டனர். சுக்வீர் சிங் சந்து, பஞ்சாப்பை சேர்ந்தவர். எம்பிபிஎஸ், சட்டம் பயின்றவர்.
ஞானேஷ் குமார், 370-வது சட்டப்பிரிவு நீக்கம், காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதில் முக்கிய பணியாற்றியவர். ஐஏஎஸ் அதிகாரிகளான இருவரும்பணி ஓய்வுக்கு பிறகு, தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய நியமனத்துக்கான அரசாணையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று இரவு வெளியிட்டார்.
தேர்தல் பத்திரங்கள் வெளியீடு: அதேபோல், உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, எஸ்பிஐ வங்கி 2019 ஏப்ரல் முதல் 204 பிப்ரவரி 15 வரையில் வழங்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இந்த விவரங்களை மார்ச் 15-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நேற்று தேர்தல்ஆணையம் தேர்தல் பத்திர விவரங்களை அதன் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
இத்தகைய சூழலில் இன்று (வெள்ளிக்கிழமை) 2024 மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவலகள் தெரிவிக்கின்றன.