அரசன் ராஜராஜனால் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த பின்னர் அன்றிரவு அரசன் பெரும்பணி முடிவடைந்த பெருமிதத்தில் உறக்கமின்றி இருந்த நேரத்தில்,
“உன் மறைவிலும் இடைச்சியின் நிழலிலும் பொன்மணித் தட்டார் இதயத்திலும் யாம் இருக்கின்றோம்” என்ற இறைவனின் அசரீரியாக உணர்ந்திட்ட மன்னன் மந்திரியை அழைத்து அதற்கு விளக்கம் கேட்க,
“உன் மறைவில் என்பது உங்களால் கட்டப்பட்ட கோயில்” என்பதாகும்.
இடைச்சியின் நிழல் என்பது “இடைச்சியின் வீட்டிலிருந்து எடுத்த கல்” கோபுரத்தின் மேல் இருப்பதாகும்.
“பொன்மணித்தட்டாரின் இதயத்தில் என்பது பொருள் விளங்கவில்லை மன்னா” என்று கூறினார்.
இந்த ஊரில் பொன்மணித் தட்டார் என்பவர் இருந்தால் அழைத்து வருமாறு அரண்மனை ஆட்களை ராசராசன் அனுப்பிவைக்க, அவர்களும் கடைவீதியில் பொன் வியாபாரியிடம் விசாரித்து பொன்மணித்தட்டாரை கண்டு வணங்கி அவரை அரசன் அழைத்துவர சொன்ன செய்தியைக் கூற அவர்,
“நானோ எளியவன். அரசரிடம் எனக்கு ஆகவேண்டியது எதுவும் இல்லை மேலும் அரசனுக்கு தேவையான ஆபரணங்களைச் செய்யும் ஆற்றலும் என்னிடம் இல்லை. என்னிடம் இருப்பதோ கோணி வஸ்திரம் மட்டுமே இதைத்தவிர வேறொன்றும் இல்லை. ஆகையால் நான் அங்கு வரவில்லை” என்று கூறிவிட்டார்.
அதை அறிந்த அரசன் பரிவாரங்களுடன் பொன்மணித்தட்டாரைப் பார்க்க வந்தார். பொன்மணித்தட்டாரை வணங்கித் தங்களின் இதயத்தில் இறைவன் எழுத்தருளி இருப்பதாகக்கேட்ட அசரீரி விடயத்தை எடுத்துக் கூறி சந்தேகம் போக்குமாறு கேட்டார்.
அதற்கு பொன்மணித்தட்டார் அரசனை நோக்கி ஆலயத்திற்கு நேரே வடக்கு திசையில் ஒரு குளம் வெட்டி அதன் நடுவில் சிறு கோயில் ஒன்று அமைத்து அங்கிருந்து பார்த்தல் கோபுரம் தெரிய வேண்டுமாறு அமைக்கச் சொன்னார். மேலும் அதனை அமைத்து எட்டாவது நாளில் இறைக்காட்சி கிடைக்குமென்றார்.
அவர் கூறியதற்கமைய சிவகங்கை தீர்த்தம் என்னும் திருக்குளத்தை அமைத்து பொன்மணித்தட்டார் மொழிந்தவாறு கட்டி முடித்த எட்டாம் நாள் மன்னர் அவர் வீட்டுக்குச்சென்று பொன்மணித்தட்டாரை அழைத்து வந்தனர்.
திருக்குளக்கோயிலுக்குச்செல்ல
அரசன் தெப்பம் உள்ளதெனக்கூற,
அவரோ தண்ணீரின் மேல் நடந்தே சென்று கோயிலினுள் அமர்ந்து
அவரின் இயத்தில் இறைகாட்சியை எல்லோருக்கும் நல்கி அக்காட்சியோடு ஒளியாக மாறி கோபுரத்தில் கலந்தார். அவரின் சமாதி சிவகங்கைக் குளக்கோயிலில் இருக்கின்றது. இதனைக்கண்ட அரசனும் மற்றவர்களும் வணங்கி இறைவனை காணும் பாக்கியத்தைப் பெற்றதை எண்ணி வியந்தனர்.
இன்றும் பொன்மணி தட்டாரின் சமாதிக்கு அபிஷேகம் செய்த பின்னரே தான் தஞ்சை பிரகதீஸ்வரர் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
இந்த மாபெரும் சம்பவத்தை, இந்த மாபெரும் கும்பாபிஷேகத்தை நடத்த வருகை தந்த திருப்பரங்குன்ற வேத வாத்தியார் ராஜா பட்டர் அவர்கள் நேற்றைய இரவு அனைவரும் உணவருந்தும் வேளையில், இந்த அழகிய சம்பவத்தை சொன்னார். அங்கிருந்த அனைவருக்கும் கண்ணீர் வந்து விட்டது.
இச்சிறப்பினை,
‘#விஸ்வகர்ம_பக்தோபாக்கியானம்’ என்ற பழைய நூலிலும். ‘#பொன்மணித்தட்டார்_சரித்திரம்’ என்னும் நூலிலும்,
‘#படைப்புக்கடவுளின்_பரம்பரையில்வந்தவர்கள்’ என்ற நூலிலும் காணலாம்.