Sunday , November 3 2024
Breaking News
Home / தமிழகம் / சினிமாவை மிஞ்சும் நகைக்கடை கொள்ளை..! சிக்கியது எப்படி?

சினிமாவை மிஞ்சும் நகைக்கடை கொள்ளை..! சிக்கியது எப்படி?

சர்வசாதாரணமாக நகைகளை அள்ளி சென்றவர்கள் மொத்தம் 8 பேர் என்று தெரியவந்துள்ளது. மிக மிக சவாலான இந்த வழக்கை, 48 மணி நேரத்துக்குள் முதல் குற்றவாளியை போலீசார் ரவுண்டி கட்டி பிடித்துள்ளனர்.

கொள்ளையர்கள் யார் என்ற அங்க அடையாளம் இல்லை, தடயம் இல்லை, துப்பும் இல்லை, மோப்ப நாய் அர்ஜூன் வந்தும் பிரயோஜனம் இல்லை, கை ரேகை இல்லை.. இப்படி எதுவுமே கையில் கிடைக்காமல்தான் நம் போலீசார் இந்த வழக்கில் இறங்கினார்கள்.

ஆனால் ஆரம்பத்தில் இருந்தே இந்த கொள்ளையில் வெறும் 2 பேர் மட்டுமே ஈடுபட்டிருக்க முடியாது என்பதுதான் நம் போலீசாரின் சந்தேகமாக இருந்தது.

ஒத்த ஸ்குரூ டிரைவரை வைத்து கொண்டே மொத்த கடையையும் ஆட்டைய போட்ட நபர்களை பிடிக்க முதல்நாள் போலீசார் ரொம்பவே திணறிவிட்டனர். எனினும் பொறுமையாகவும், கனகச்சிதமாகவும் காய் நகர்த்தி தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர்.

தனிப்படை 7 அமைக்கப்பட்ட அன்றே ஒரு வடமாநில கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். திருச்சியில் இருந்து பிற மாவட்டங்களுக்கும் தப்பி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில், திருவாரூர், புதுக்கோட்டையிலும் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.

நேத்து ராத்திரி 8.30 மணி இருக்கும். திருவாரூரில் 2 பேர் பைக்கில் வந்துள்ளனர். ஆனால் வாகன சோதனையில் போலீசார் இருந்ததை பார்த்ததுமே வண்டியை ஸ்பீடு எடுத்தனர். இங்குதான் சந்தேகம் அதிகமாகி, அவர்கள் பின்னாடியே நம் போலீசார் விரட்ட தொடங்கி உள்ளனர். கிட்டத்தட்ட 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு துரத்தி அவர்களை பிடித்தனர்.

வண்டியை ஓட்டியவன் பெயர் மணிகண்டன். பின்னாடி பைக்கில் உட்கார்ந்து இருந்தவன் பெயர் சுரேஷ். ஆனால் போலீசாரிடமிருந்து சுரேஷ் தப்பிவிட்டான். மணிகண்டன் மாட்டிக் கொண்டான்.

மணிகண்டனிடம் ஒரு பெட்டி இருந்திருக்கிறது. அதில்தான் 5 கிலோ தங்க நகைகள் இருந்தன. அதன் பார்கோட் சீட்டை சோதனை செய்ததில்தான் அது லலிதா ஜுவல்லரி கடை நகை என தெரியவந்தது.

தப்பி ஓடிய சுரேஷ்.. பிரபல கொள்ளையன் முருகனின் சொந்தக்காரனாம். அதாவது முருகனின் தம்பி என்கிறார்கள்.

இந்தியா முழுவதும் நடக்கும் பெரிய அளவிலான ஏடிஎம் கொள்ளையில் கைதேர்ந்தவன்தான் முருகன். அதனால் முருகனுக்கு இந்த விஷயத்திலும் சம்பந்தம் இருக்குமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

உடனே கைதான மணிகண்டனை திருவாரூர் ஸ்டேஷனில் கைது செய்து, அங்கிருந்து திருச்சிக்கு கொண்டு சென்றனர் போலீசார். அப்போது மணிமண்டனிடம் விடிய விடிய விசாரணை நடந்துள்ளது. மொத்தம் 8 பேர் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டு உள்ளனர். திருடிய நகைகளை ஆளுக்கு 5 கிலோ தங்கம் பிரித்து கொள்வது என்பதுதான் இவர்களின் பிளானாம்.

கையில் இருக்கும் 5 கிலோ தங்க நகைகள் தவிர மீதமுள்ள நகைகளை சீராதோப்பில் உள்ள தனது நண்பர்கள், உறவினர்களிடம் கொடுத்து வைத்திருப்பதாக மணிகண்டன் தெரிவித்துள்ளார். இதனால், 50க்கும் மேற்பட்ட போலீசார் சீராதோப்பில் முகாமிட்டுள்ளளனர்.

பிரபல கொள்ளையன் முருகனுக்கு சொந்த ஊர் திருவாரூர். அதனால் அங்கேயும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் 5 பேரை அங்கு போலீசார் பிடித்துள்ளார்களாம். அதனால் மணிகண்டன், மேலும் அந்த 5 பேர் என மொத்தம் 6 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இவ்வளவு விஷயம்தான் வெளியே இதுவரை கசிந்துள்ளது. சுவரில் ஓட்டையை போட்டது யார், அதற்கு உதவியது யார், இந்த குறிப்பிட்ட இடத்தில் ஓட்டையை போட்டால், சரியாக கீழ்த்தளத்தில் உள்ள நகை இருக்கும் இடத்துக்கு சென்றுவிடலாம் என்று ஐடியா தந்தது யார் என்ற கேள்விகளை எல்லாம் போலீசார் கேட்டு வருகிறார்கள்.

எந்த ஒரு க்ளூவும் இல்லாமல், கொள்ளை நடந்த 48 மணி நேரத்தில் முதல் கொள்ளையனை நம் போலீசார் தூக்கி உள்ளது உண்மையிலேயே பாராட்டுக்குரிய விஷயம்!

 

Bala Trust

About Admin

Check Also

தொழுநோயாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் விழா…

01.11.2024 இன்று காலை 11.00 மணியளவில் குளித்தலை அரசு மருத்துவமணை வளாகத்தில் அன்னை தெரசா தொழுநோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலப்பணிச் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES