தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பாக நாளை 12ஆம் தேதி நடைபெற இருந்த சிறை நிரப்பும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெற்றதோடு இன்று முதல் அனைவரும் பணிக்கு செல்ல உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க டாக்பியா
மாநில கௌரவ செயலாளர் சி.குப்புசாமி,மாநில பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன் மற்றும் செய்தி தொடர்பு செயலாளர் ஆ.ம.ஆசிரியதேவன் ஆகியோர் கூறுகையில்:-
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் நட்டம் ஏற்படும் என்று தெரிந்தே கரும்பு வெட்டும் இயந்திரம்,கதிர் அறுக்கும் இயந்திரம்,லாரி, பவர் டில்லர் போன்ற கனரக வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் கடனுக்கு வாங்க வேண்டும் என அரசு கட்டாயப்படுத்துவது கூடாது, அவைகள் எங்கு தேவையோ அங்கு மட்டும் கொள்முதல் செய்ய உரிய அனுமதி வேண்டும்,
பணியாளர்கள் புதிய ஊதியம் உடன் அறிவிக்க வேண்டும்,
நகைக்கடன் நகைகள் ஏலத்தில் ஏற்பட்ட நட்டத் தொகை வியாபார நட்டம் என்பதால் அதனை நட்ட கணக்கிற்கு கொணடு செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 03.10.2023 முதல் தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் பணியாளர்கள் தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக கடந்த 09.10.2023 தமிழக்தில் ஏழு மண்டலங்களில் மாபெரும் கண்டன கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி மதுரை மண்டலம் சார்பில் மதுரையில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சார்ந்த 3000 பணியாளர்களுக்கு மேல் கலந்து கொண்ட மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் எதிரொலியாக டாக்பியா சங்க நிர்வாகிகளுடன் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருடன் நேற்று செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் கனரக வாகனங்கள், இயந்திரங்கள் வாங்குவது உறுதியாக கட்டாயப்படுத்த மாட்டாது,
ஊதிய உயர்வு விரைந்து அறிவிக்கப்படும் என்பது உள்ளிட்ட எட்டு கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது,
போராட்டத்தில் உறுதியுடன் இறுதி வரை போராடிய அனைத்து நிலை பணியாளர்கள் மற்றும் போராட்டம் தொடர்பான அன்றாட செய்திகளை உடனுக்குடன் உள்ளது உள்ளபடியே பொதுமக்களுக்கும், அரசு அறியும் வகையில் செய்திகள் பிரசுரித்த ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்கள் மற்றும் போராட்டம் தொடர்பான உண்மை செய்திகளை களத்தில் இருந்து நிலைமைகளை அன்றாடம் உண்மையான அறிக்கைகளாகவும், நிகழ்வுகளாகவும் அரசுக்கு அளித்தும் போராட்ட களங்களில் பாதுகாப்பும், ஒத்துழைப்பும் அளித்த காவல் துறையினருக்கும்,
பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொண்ட பதிவாளர் அவர்களுக்கும், பேச்சுவார்த்தைக்கு உரிய அனுமதி வழங்கிய மாண்புமிகு கூட்டுறவு துறை அமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.என கூறினர்.