Tuesday , July 29 2025
Breaking News
Home / Politics / ரயில்வே அமைச்சருக்கு ரூ.1,001 அனுப்பும் போராட்டம் தொடங்கியதாக செல்வப்பெருந்தகை அறிவிப்பு…
NKBB Technologies

ரயில்வே அமைச்சருக்கு ரூ.1,001 அனுப்பும் போராட்டம் தொடங்கியதாக செல்வப்பெருந்தகை அறிவிப்பு…

ரயில்வே அமைச்சருக்கு ரூ.1,001 அனுப்பும் போராட்டம் தொடங்கியதாக செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை: ‘தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.1,000 ஒதுக்கியுள்ளது. இதை கண்டிக்கும் வகையில் மக்களிடம் பெறப்பட்ட ரூ.1-ஐ சேர்த்து காசோலையாக ரயில்வே அமைச்சருக்கு ரூ.1,001 அனுப்பும் போராட்டம் இன்று (ஆக.28) முதல் தொடங்கியுள்ளது,’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை கூறியது: ‘தமிழக ரயில்வே திட்டத்த்துக்கு ரூ.1,000 நிதி ஒதுக்கியிருக்கும் மத்திய அரசை கண்டிக்கும் விதமாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மக்களிடம் கையேந்தி ரூ.1 சேர்த்து காசோலையாக ரூ.1,001-ஐ ரயில்வே துறைக்கு அனுப்பும் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். அதன்படி, ரயில்வே அமைச்சருக்கு ரூ.1,001-ஐ இன்று முதல் தவணையாக அனுப்புகிறோம். இதைத் தொடர்ந்து வட்டாரம், நகரம், பேரூர், கிராமங்களில் இருந்து ரூ.1,001 ரயில்வே துறைக்கு அனுப்பும் போராட்டம் தொடரும்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. ஏற்கெனவே பல்வேறு துறைகளுக்கு மத்திய அரசு நியாயமாக நிதி வழங்கவில்லை. இப்போது பள்ளிக் கல்வித் திட்டத்துக்கு நிதி வழங்காமல் தமிழக மக்களை மத்திய அரசு தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தேர்தல் வரை பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை உயர்த்தாத மத்திய அரசு, இப்போது எல்லா துறைகளிலும் விலையை உயர்த்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் 67 சுங்கச்சாவடிகளும், மாநில நெடுஞ்சாலையில் 7 சுங்கச்சாவடிகளும் உள்ளன. இவற்றில் 5 முதல் 7 சதவீதம் கட்டணம் உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான கோடி செலவில் மத்திய அரசு நிறுவிய சத்ரபதி சிவாஜி சிலையை 6 மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்த சிலை நொறுங்கி கீழே விழுந்துள்ளது. எல்லாவற்றிலும் ஊழல், மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவது, அதானி போன்றோருக்கு கடன் தள்ளுபடி, வரிச்சலுகை என்பன போன்ற செயல்கள்தான் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சியின்போதும், கருணாநிதி ஆட்சிக் காலத்திலும் ஏராளமான சிலைகள் நிறுவப்பட்டன. காந்தி சிலை, நேரு, ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி, தமிழன்னை, 133 அடி கொண்ட திருவள்ளுவர் சிலை, கடல் சீற்றம், சுனாமி உள்பட எந்த காலநிலை மாற்றத்தின்போதும் இந்தச் சிலைகளில் சேதம் ஏற்படவில்லை.

கங்கனா ரணாவத் எம்.பி. விவசாயிகளைப் பற்றி கொச்சைப்படுத்தி பேசியதற்கு உலகளவில் கண்டன குரல்கள் வலுத்துக் கொண்டிருக்கின்றன. அது அவரது தனிப்பட்ட உரை என்கிறது பாஜக. விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்திப் பேசியுள்ள அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

குஜராத் மாநில மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசு, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் கண்டுகொள்வதில்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இந்திரா காந்தி பேணிக் காத்தார். அதனை மெருகேற்றினார். தேசத்தின் முகமாக இந்திரா காந்தி இருந்தார். அவர் பற்றி பேச மோடிக்கே தகுதியில்லை. நேற்று முளைத்த காளான் போன்ற அண்ணாமலைக்கும் தகுதி கிடையாது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்திரா காந்தியை இந்த நாட்டின் துர்கா தேவி என பாராட்டினார். இந்திரா காந்தி பற்றி அரைவேக்காட்டுத்தனமாக பேசுவதை அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும்,’ என்று அவர் கூறினார்.

முன்னதாக, காங்கிரஸ் முன்னாள் எம்.பி-யான எச்.வசந்தகுமாரின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு செல்வபெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Bala Trust

About Admin

Check Also

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

மதுரை மாநகருக்கு வருகை தர உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து விளாங்குடி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES