
ஒரு வருடத்தில் 10 லட்சம் பேருக்கு விலை இல்லா உணவு, குடிநீர், பழவகைகள் வழங்கிய நட்சத்திர நண்பர்கள் அமைப்பினருக்கு பாராட்டு குவிந்து வருகிறது
மதுரையில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. அதன் நிறுவனத்தலைவர் ஸ்டார் குருசாமி தலைமையில் தினமும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு வருடமாக ஆயிரம் பேருக்கு உணவு, குடிநீர், பழ வகைகள் வழங்கி வருகின்றனர்.
மேலும் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் 350-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமராக்களை நிறுவி வைகை ஆற்றில் குப்பைகள் போடாமலும் கண்காணித்து வருகின்றனர். மேலும் வைகை ஆற்றில் படர்ந்து கிடக்கும் ஆகாயத் தாமரைகளையும் ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர்.
சாலை ஓரத்தில் வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையான ராட்சத நிழற்குடையும் சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு போர்வை, கம்பளி முதலியவைகளும் வழங்கி வருகின்றனர். மற்றும் அரசு பள்ளிகளுக்கு நவீன கழிவறைகளை கட்டித் தந்து வருகின்றனர்.
வசதியற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு படிப்பு உதவி தொகையும் வழங்கி வருகின்றனர். மழை,புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் வெளி மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று வழங்கி வருகின்றனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான அத்தியாவசிய அடிப்படை பொருட்கள் மற்றும் மருத்துவ கருவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் ஒரு வருடம் நிறைவு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடும் வகையில் நிறுவனத் தலைவர் ஸ்டார் குருசாமி தலைமையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 5.000 பேருக்கு விலையில்லா உணவு குடிநீர், பழ வகைகள் வழங்கினார்கள்.
இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை மதுரை மாநகர போக்குவரத்து காவல் கூடுதல் துணை ஆணையாளர் திருமலைக்குமார் தொடங்கி வைத்தார். உயர்நீதிமன்ற குற்றவியல் அரசு வழக்கறிஞர் அன்புநிதி, மதுரை மாவட்ட குற்றவியல் துறை அரசு வழக்கறிஞர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நட்சத்திர நண்பர்கள் அமைப்பின் சட்ட ஆலோசகர் வக்கீல். முத்துக்குமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பஞ்சவர்ணம், தொழிலதிபர் டி.கே.எஸ்.ராஜபாண்டி, ஹார்விப்பட்டி குமார், வழக்கறிஞர் முத்துக்கருப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.