ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதே அரிதாகிப்போன காலத்தில், ஒரு ஊர் மட்டுமல்ல 16 ஊர்களடங்கிய ஊராட்சியில், வாய்ப்பு கிடைத்த இடங்களில் முடிந்த அளவு சொந்த நிதியின் மூலம் வேலைகளை மக்களுக்கு செய்துள்ளோம்
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கிராமத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.
ஒரு நாட்டுக்கு அடிப்படை கிராமம் தான். கிராமங்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும். எனவே கிராமத்தை முன்னேற்ற வேண்டும் முன் மாதிரியான கிராமத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சி இது. ஒரு கிராமத்தின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி தெருவிளக்கு வசதி என்பதனை மட்டுமல்லாமல் கிராம மக்களின் உடல் நலம், தொழில் வாய்ப்புகள், இளைஞர்களின் விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாடு, கல்வி என்று ஒரு ஒட்டுமொத்த வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக சொந்த நிதியில் முடிந்தளவு வேலைகளை செய்துள்ளோம்.
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு ஆனால் தேடிய செல்வத்தை மக்களுக்கும் கொடு என்று என்னைப் பணித்த எனது தந்தை அவரால் முடிந்த பணிகளை அங்கிருந்து செய்ததை பற்றிய பதிவு இது. இதனை விட இன்னும் அதிகமாக செய்து இருப்பவர்கள் ஏராளம் இருப்பார்கள். குறைந்த பொருளாதாரத்தில் புதுமாதிரியான மாற்றத்தை விளைவித்தவர்கள் நிறைய இருப்பார்கள்.
இச்செய்தியை படிக்கும் எவரேனும் அதுபோன்ற வித்தியாசமான கிராம மேம்பாட்டுக்கான முயற்சி கண்டிருந்தால் அதனை எங்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். எங்களது கிராமத்தில் இருந்து சாத்தியமா என்று பரீட்சித்து பார்க்க வேண்டும். அதை மக்களுக்கு கொண்டு சென்றடைய அதனால் எனது கிராமம் முன்மாதிரி கிராமமாக மிளிர முயற்சியினை எடுக்க வேண்டும். ஆதலால் செய்தியை பகிர்ந்து மேலும் இது போன்று பலர் செய்வதற்கு ஊக்கப்படுத்துங்கள்.
அயல்நாட்டில் பணிபுரிபவர்களால் நிச்சயமாக ஒரு மாற்றத்தினை உருவாக்க முடியும் என்பது அனுபவபூர்வமான ஆழமான நம்பிக்கை. அரசு பள்ளியில் பயின்று, குக் கிராமத்தில் பிறந்து அயல்நாடு வந்திருக்கும் எவரேனும் இது போன்ற சில கிராமங்களை தத்தெடுத்து அல்லது அவர் பிறந்த கிராமத்தினை முன்னேற்றுவதற்கு ஏதேனும் வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருந்தார் வாருங்கள் நாம் இணைந்து பல முன்மாதிரி கிராமங்களை உருவாக்குவோம்.
–
நரேந்திரன் கந்தசாமி
பசுமைக்குடி தன்னார்வ இயக்கம்.