அதானியின் பங்குச் சந்தை மோசடி குறித்து அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆதாரத்துடன் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. இதில் செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி பூச்சும், அவரது கணவரும் சம்பந்தப்பட்டுள்ளது சமீபத்தில் ஆதாரங்களுடன் வெளி வந்திருக்கிறது. அரசாங்கத்தையே விலைக்கு வாங்கியுள்ள அதானிக்கு செபி தலைவரை விலைக்கு வாங்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
செபி தலைவரும், அவரது கணவரும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் ரகசியமாக முதலீடு செய்ததாக ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிதிகள் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, ரவுண்ட்-டிரிப்பிங் நிதிகள் மூலம் பங்குகளை உயர்த்த பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதானி குழுமத்தில் சந்தேகத்திற்குரிய பங்குகள் தொடர்பாக செபி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காமல் இருக்க செபி தலைவர் அதானியின் சகோதரருடன் தொழில் கூட்டாளியாக இருப்பது தான் காரணமாக உள்ளது. செபி தலைவரும், அவரது கணவரும் அதானி நிறுவனத்தின் வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பதன் காரணமாகவே அதானி தொடர்புடைய பங்கு மோசடிக்கு எதிராக செபி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியுள்ளது.
இந்திய பங்கு சந்தை என்பது ரூபாய் 25 லட்சம் கோடி முதல் ரூபாய் 30 லட்சம் கோடி வரை சந்தை மதிப்பு கொண்டது. முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு செபி அமைப்பிற்கு இருக்கிறது. அந்த அமைப்பே அதானி நிறுவனத்தோடு சேர்ந்து கொண்டு லாப நோக்கில் செயல்பட்டது குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டுமென எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். உச்சநீதிமன்றமும் இந்த குற்றச்சாட்டை தன்னிச்சையாக முன்வந்து சிறப்பு புலனாய்வுக் குழு மூலமாக விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சமூக நீதியை நோக்கமாகக் கொண்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று கடந்த மக்களவை தேர்தலின் போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. மேலும், இடஒதுக்கீட்டு வரம்பை 50 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமலும், 2021 இல் நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் மோடி அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதன்மூலம் சமூக நீதிக்கு எதிராக பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்கு எதிராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது.
அதானியின் பங்குச் சந்தை மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள செபியின் தலைவர் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டு இதுகுறித்து கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரிக்க வேண்டும், சாதி வாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் நாடு முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக நாளை (22.8.2024) வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகம் எதிரே எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று நாட்டையே உலுக்கி வருகிற பங்குச் சந்தை மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கவும், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்ப உள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று சாஸ்திரி பவனே திணறியது என்கிற வகையில் அமைய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.