தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அரசு அலுவலகங்களில் மனு அளிக்க வரும் பொதுமக்களின் மனுக்களை மனுக்களாக பார்க்காமல், அவர்களது பிரச்சனைகளாக அரசு அதிகாரிகள் அணுக வேண்டும்.
மனு அளிக்க அரசு அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை, இருக்கை அளித்து அமர வைத்து அவரிடம் மனுக்களை பெற்று, மனுக்களை ஆராய்ந்து, அவர்கள் குறைகள் குறித்து கனிவுடன் கேட்டு, சட்டப்படி வாய்ப்பு உள்ள அனைத்து கடமைகளையும் நிறைவேற்றி தர வேண்டும் என தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்களை வரிசையாக இருக்கை அமைத்து, அதில் அவர்களை அமர வைத்து மனுக்களை பெற்று அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து அவர்களிடம் நேர்காணல் செய்து சட்டப்படி வாய்ப்பு உள்ளவர்களுக்கு அதனை நிறைவேற்றி தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் முதன்முதலாக இத்தகைய செயல்பாடு நடந்ததை கண்டு மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு, தங்களது குறைகள் விரைவில் தீர்க்கப்படும் என நம்பிக்கை தெரிவித்து மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.