Thursday , December 12 2024
Breaking News
Home / Politics / கு.செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அறிக்கை…
MyHoster

கு.செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அறிக்கை…

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் பரப்புரையில் நரேந்திர மோடி நிறைய வாக்குறுதிகளை கொடுத்து 2019 வரை அதை நிறைவேற்றாமல், மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி 2024 மக்களவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையில்லாத நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் சிறுபான்மை, பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சின் மூலம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டன. விவசாயிகளுக்கு எதிராக அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி வழங்க 2021 இல் நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் போது, சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டுமென்று மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். அதை நிறைவேற்றி பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கி, சமூகநீதி பெறுகிற வாய்ப்பை அளிக்க பிரதமர் மோடி தயாராக இல்லை.

பிரதமர் மோடி ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்கு பதிலாக பிரதமர் மோடி அலுவலகத்தில் அதிகார குவியல் ஏற்பட்டு ஜனநாயக விரோத செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரி போல பிரதமர் மோடி செயல்பட்டதற்கு கடிவாளம் போடுகிற வகையில் மக்களவை எண்ணிக்கையில் 60 சதவிகிதம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், 40 சதவிகிதம் இந்தியா கூட்டணிக்கும் மக்கள் வாக்களித்து ஜனநாயகத்தை செழுமைப்படுத்தியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணியின் சார்பாக எதிர்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல்காந்தியின் ஆணித்தரமான வாதங்களை எதிர்கொள்ள பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களால் முடியவில்லை.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து தாமஸ் பிக்கெட்டி அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன்படி, பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்ததை காட்டிலும் சமமின்மை அதிகம் உடையதாக பிரதமர் மோடி ஆட்சி செயல்படுகிறது. இந்தியாவில் உயர்நிலையில் உள்ள 1 சதவிகித நபர்கள் 70 சதவிகித சொத்துகளை குவித்து வருவதாக ஆதாரப்பூர்வமான புள்ளி விவரங்களை வெளியிட்டது. அதேநேரத்தில் ஏழை, எளிய மக்களுக்காக அன்னை சோனியா காந்தி கொண்டு வந்த உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி ஒவ்வொருவருக்கும் 5 கிலோ உணவு தானியம் 80 கோடி மக்களுக்கு 2008 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வந்தது. இந்தியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளில் ஐந்தாவது இடத்தில் உள்ள இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள நாடாக மாற்றி மூன்றாவது நிலைக்கு கொண்டு வருவேன் என்று கூறிவருபவர் நரேந்திர மோடி. ஆனால், அவரது ஆட்சியில் தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு 80 கோடி மக்களுக்கும் இலவச உணவு தானியம் வழங்குகிற நிலையில் தான் அவரது ஆட்சி நடைபெற்று வருகிறது. உலக பசி குறியீட்டில் இந்தியா 125 நாடுகளில் 111-வது இடத்தில் இருக்கிறது. 20 கோடி மக்களை வறுமையிலிருந்து விரட்டியதாக கூறிய மோடி ஆட்சியில் வறுமை ஒழிப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

பிரதமர் மோடி ஆட்சியில் தொடர்ந்து கோடீஸ்வரர்கள் மேலும் கோடீஸ்வரர்களாக ஆவதற்கு நாட்டின் வளங்களை சூறையாடி சொத்துகளை குவித்து வருகிறார்கள். கடந்த ஜூலை 2024 ஹ{ரூன் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் நம்பர் 1 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது. 2020 ஆம் ஆண்டில் நான்காவது இடத்தில் இருந்த கௌதம் அதானி, தற்போது நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டை விட அதானியின் சொத்து மதிப்பு 95 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் அதானியின் சொத்து மதிப்பு ரூபாய் 10 லட்சம் கோடிக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே கோடீஸ்வரர்களை உருவாக்கும் நாடாக இந்தியா மாறி வருகிறது. சீனாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 25 சதவிகிதம் சரிந்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் 29 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளிலும் ஒரு கோடீஸ்வரரை மோடி ஆட்சி உருவாக்கி சாதனை படைத்துள்ளது. 2023 இல் 259 கோடீஸ்வரர்கள் இருந்தனர். அது நடப்பாண்டில் 334 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 159 லட்சம் கோடியாக உயர்ந்து இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 50 சதவிகிதமாக உயர்ந்திருப்பதன் மூலம் மோடி ஆட்சி யாருக்காக நடக்கிறது ? அதானி, அம்பானி உள்ளிட்ட கோடீஸ்வரர்களை மேலும் கோடீஸ்வரர்களாக ஆக்கி அதன்மூலம் தேர்தல் பத்திர நன்கொடையை குவித்து தேர்தல் களத்தில் சமமின்மையை உருவாக்கி, அதன்மூலம் தேர்தலில் வெற்றி பெற்றவர் தான் பிரதமர் மோடி. மோடி ஆட்சி நடப்பது கோடீஸ்வரர்களுக்கான ஆட்சியே தவிர, நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கானதாக இல்லை என்பதையே கோடீஸ்வரர்களின் சொத்து குவிப்பு விவரம் உறுதிப்படுத்துகிறது.

எனவே, மோடி ஆட்சி என்பது அப்பட்டமான ஒரு மக்கள் விரோத ஆட்சி என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொண்டு உரிய பாடத்தை உரிய நேரத்தில் நிச்சயம் வழங்குவார்கள்.

Bala Trust

About Admin

Check Also

அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக கரூர் விஷன் 2030 நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்….

வணக்கம்..! அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக President செந்தில் விஷ்ணு ராம், CII அமைப்பு சார்ந்த சேர்மன், கோ சேர்மன், …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES