Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 43)

செய்திகள்

All News

மார்ச் 22 முதல் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

மார்ச் 22 முதல் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

திருச்சியில் மார்ச் 22ஆம் தேதி முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜுன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக இறுதி செய்துள்ளது.

இதனிடையே வேட்பு மனுத்தாக்கல் முடிந்து மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் மார்ச் 30-ம் தேதி வெளியாக உள்ளது. அதன் பிறகு தேர்தலுக்கு 17 நாள்கள் மட்டுமே உள்ளன.மார்ச் 24 முதல் பிரசாரத்தை தொடங்குகிறார் இபிஎஸ்!

இதனை கருத்தில் கொண்டு மார்ச் 22 முதல், முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி அருகே சிறுகனூரில் நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து சொந்த ஊரான திருவாரூரில் 23-ம் தேதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேச உள்ளார்.

பின்னர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார்.

தளபதி நடிகர் விஜய்யின் கார் கண்ணாடி உடைப்பு..!

தளபதி நடிகர் விஜய்யின் கார் கண்ணாடி உடைப்பு..!

உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் படம் திரைப்படம் தான் ‘The G.O.A.T’

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதியின் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதால் ரசிகர்கள் ஏகபோக உற்சாகத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது இப்படம் குறித்த தாறுமாறு அப்டேட் வெளியாகி உள்ளது.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் கேரளாவின் திருவனந்தபுரத்தில் படமாக்கப்பட உள்ளது. இதனால், 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் கேரளா சென்றுள்ளார்.திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்த நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகிறது .

விஜய் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவரை சுற்றி வளைத்துள்ளனர். இதனால் கூட்ட நெரிசலில் அவர் இருந்த கார் சிக்கிக் கொண்டு நகர முடியாமல் தவித்துள்ளது. அதன் உள்ளே இருந்த விஜயும் இதனால் கொஞ்சம் தடுமாற்றம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் வந்த கார் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி நொறுங்கியுள்ளது. காரின் பின்பகுதி முன் பகுதி என பல இடங்களிலும் சேதம் அடைந்துள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மதுரை மாவட்டம் பரவையில்ஏ.பி.டி.மோட்டார்ஸ் சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் திறப்பு விழா..!

மதுரை மாவட்டம் பரவையில்
ஏ.பி.டி.மோட்டார்ஸ் சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் திறப்பு விழா நடைபெற்றது

மதுரை மார்ச்.18-

மதுரை பரவையில் ஏபிடி குழுமத்தின் இன்னொரு பரிணாம வளர்ச்சியாக அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் வாடிக்கையாளர்கள் பெறும் வகையில் உதிரி பாகங்கள் விற்பனை, சர்வீஸ் வசதிகளுடன் கூடிய புதிய ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் தனராஜ்
சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நிஜாத் ரஹ்மான், தலைவர், மதுரை லாரி உரிமைய்ளர்கள் சங்க தலைவர் சாத்தையா, மதுரை டூரிஸ்ட் கேப் உரிமையாளர்கள் சங்க தலைவர் ராமநாதன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஜெகதீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


திறப்பு விழா குறித்து ஏபிடி மோட்டார்ஸ் லிமிடெட் இயக்குநர் நடேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
சக்தி குழுமம் 100 ஆண்டுகள் பழமையான ஒரு மதிப்புமிக்க நிறுவனமாகும். அதன் பங்களிப்புடன் ஏ.பி.டி. நிறுவனம் கனரக வாகனங்கள் விற்பனை, சேவை, உதிரிபாகங்கள் போன்ற பல்வேறு வணிகங்களைக் கையாளும் மிகவும் பிரபலமான நிறுவனமாக உள்ளது.
இப்போது நாங்கள் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியிருக்கிறோம்.
ஏ.பி.டி. மோட்டார்ஸ் அனைத்து மல்டிபிராண்ட் வாகனங்களுக்கும் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டு மதுரை மாவட்டம் பரவையில் இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது.


அதன்படி அனைத்து மல்டிபிராண்ட் கனரக வாகனங்களுக்கான சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பி.எஸ்.6 வாகனங்களும் நன்கு பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவைப்படும் அனைத்து சென்சார்கள் மற்றும் சில்லுகளைப் புரிந்துகொள்ள சமீபத்திய மென்பொருளின் உதவியுடன் மட்டுமே முழுமையாக கண்டறியப்படுகின்றன.


எல்லா நேரங்களிலும் உதிரிபாகங்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அனைத்து உதிரி சப்ளையர்களுடனும் நாங்கள் கைகோர்த்துள்ளோம். பாடி பில்டிங், சேவைகள், உதிரிபாகங்கள், நிதி, காப்பீடு, எப்.சி.மற்றும் ஆர்.டி.ஓ. தொடர்பான பிற வேலைகளை பாஸ்ட் டேக்குகளில் சேர்த்துக் கொள்வதால் இச்சேவை கிடைக்கிறது. பேருந்து உரிமையாளர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பலர் இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டு எங்களுக்கு ஆதரவளித்துள்ளனர்.


வருங்காலத்தில் அனைத்து சாலையோரப் பணிமனைகள் மற்றும் மெக்கானிக்குகள் தங்கள் வணிகத்தை நடத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும், எனவே அவர்களுக்கு உதவுவதற்கும் ஆதரவளிப்பதற்கும், மேலும் ABT TN இன் மற்ற அனைத்து பகுதிகளுக்கும் இந்த சேவையை வழங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.


பேட்டியின் போது ஏபிடி இண்டஸ்ட்ரீஸ் பொது மேலாளர்
உதய சந்திரன், துணை பொது மேலாளர் வசந்த் குமார், மற்றும் சக்தி பைனான்ஸ் விவேக் கிருஷ்ணன் உடனிருந்தனர்.

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக சாதனையாளர்களை கவுரவிக்கும் விழா..!

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மதுரை அரசரடியில் உள்ள தனியார் அரங்கில் மாநில தலைவர் முனைவர் பிச்சைவேல் தலைமையிலும்,மாநில துணைத்தலைவர் ஆசிரியர் மாணிக்கராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.

மாநில பொதுச்செயலாளர் உமா மகேஸ்வரி, மகளிரணி பிரிவு மாவட்ட தலைவர் சங்கரேஸ்வரி, மகளிரணி பிரிவு மாவட்ட செயலாளர் விஜயா ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தொழிலதிபர் ராஜ்குமார், சாதனை படைத்தவர்களுக்கு கேடயம் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.

அரசு வழக்கறிஞர் கணேஷ்பாபு புதிய நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கி வாழ்த்தினார்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரும்,மாநில கண்காணிப்பாளருமான ஆர்.ராமன் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட தலைவர் முருகேசபாண்டியன் நன்றி கூறினார்.

தமிழ்நாட்டில் களமாட போகும் காங்கிரஸ் வேட்பாளர் யார்.? உத்தேச பட்டியல் இதோ.!!

தமிழ்நாட்டில் களமாட போகும் காங்கிரஸ் வேட்பாளர் யார்.? உத்தேச பட்டியல் இதோ.!!

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதி மற்றும் புதுச்சேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் கையெழுத்து உள்ளனர்.

இத்தகைய சூழலில் இந்த பத்து தொகுதிகளில் களமிறங்க போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இதற்கு காரணம் கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும் கடலூர், மயிலாடுதுறை, நெல்லை ஆகிய மூன்று தொகுதிகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளது.

மாறாக தேனி, திருச்சி, ஆரணி ஆகிய தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது. இருப்பினும் கடந்த முறை காங்கிரஸ் கட்சியில் களமிறக்கப்பட்ட அதை வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் காங்கிரஸ் கட்சி சில மாற்றங்களை கொண்டு வந்து புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திருவள்ளூர் தனி தொகுதியில் தேசிய காங்கிரஸ் கட்சியின் ஐ.டி பிரிவு ஆலோசகர் சசிகாந்த் செந்தில் அல்லது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.

அதேபோன்று கடலூர் தொகுதியில் கே‌.எஸ் அழகிரியும், சிவகங்கை தொகுதியில் கார்த்திக் சிதம்பரமும், கிருஷ்ணகிரி தொகுதியில் செல்வகுமாரும், கரூர் தொகுதியில் ஜோதி மணியும், விருதுநகரில் மாணிக்கத்தாகூரும், கன்னியாகுமரியில் விஜய் வசந்தம் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால் அந்த தொகுதியில் பிரவீன் சக்கரவர்த்தி திருநாவுக்கரசர் அல்லது சுரண்யா ஐயர் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் வைத்தியலிங்கம் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“பாஜக மேற்கொண்டது ஒயிட் காலர் ஊழல்..!” – ராகுல் யாத்திரை நிறைவு விழாவில் ஸ்டாலின்

``பாஜக மேற்கொண்டது ஒயிட் காலர் ஊழல்..!" - ராகுல் யாத்திரை நிறைவு விழாவில் ஸ்டாலின்

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் நடந்தது.

இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பரூக் அப்துல்லா, உத்தவ் தாக்கரே உட்பட தலைவர்கள் பேசினர்.

இதில் முதலில் பேசிய மு.க.ஸ்டாலின் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவர் தனது உரையில் ராகுல் காந்திரையை சகோதரர் என்று கூறி தனது உரையை தொடங்கினார். ராகுல் காந்தியின் நியாய யாத்திரைக்கு வாழ்த்து சொல்ல வந்திருப்பதாக தெரிவித்த மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை இப்போது மும்பையில் முடிந்து இருந்தாலும் அது விரைவில் டெல்லியை அடையும் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ”ராகுல் காந்தியின் நியாய யாத்திரைக்கு பா.ஜ.க அரசு பல இடையூறுகளை கொடுத்தது. குறிப்பாக சில சிறிய காரணங்களைக்கூறி அனுமதிகளை மறுத்தனர். அப்படி இருந்தும் அத்தடைகளை தாண்டி ராகுல் காந்தி திறமையுடன் தனது யாத்திரையை தொடர்ந்தார்.

ராகுல் காந்தியின் யாத்திரைக்கு கூடிய மக்கள் கூட்டத்தை பார்த்து பா.ஜ.க அரசுக்கு தூக்கம் போய்விட்டது. ராகுல் காந்தியின் எம்.பி.பதவியை பறித்தார்கள். ஆனால் சுப்ரீம் கோர்ட் மூலம் அதனை தோற்கடித்து பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி கர்ஜித்தார். அதனால் பிரதமர் மோடி அதிர்ச்சியடைந்துள்ளார். பா.ஜ.க அரசின் நாட்கள் எண்ணப்படுகிறது. விரைவில் பா.ஜ.க தூக்கி வீசப்படும். பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரண்டு ஆண்டில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வது மற்றும் போலி பிரசாரம் செய்வதை மட்டுமே தொழிலாக கொண்டிருந்தார்.

இந்தியா கூட்டணியை ஊழல் கூட்டணி என்று பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் பா.ஜ.க தான் ஊழல் கட்சி என்பது தேர்தல் பத்திரங்கள் மூலம் நிரூபணமாகி இருக்கிறது. பா.ஜ.க மேற்கொண்டது ஒயிட் காலர் ஊழல். மோடி இந்த ஊழலை மறைக்க எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகார் கூறி மக்களின் கவனத்தை திசை திருப்ப பார்க்கிறார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இனி நமது ஒரே குறிக்கோள் பா.ஜ.க வை தோற்கடிப்பதாகத்தான் இருக்கவேண்டும். பாரத் ஜோடோ நியாய யாத்திராவின் உண்மையான வெற்றி பா.ஜ.க வை மக்களவை தேர்தலில் தோற்கடிப்பதில்தான் இருக்கிறது. கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் பயணம் டெல்லியை பிடிப்பதில் முடிவடையவேண்டும்” என்று தெரிவித்தார்.

இதில் பேசிய உத்தவ் தாக்கரே, ”மகாத்மா காந்தி தனது வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை மும்பையில்தான் தொடங்கினார். ராகுல் காந்தி மும்பையில் தனது யாத்திரையை முடித்து இருப்பதற்கு நன்றி. பா.ஜ.க ஒரு பலூன். அந்த பலூனை ஊதிவிட்டோம் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. அவர்கள் 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று கூறுகிறார்கள். 400 நாற்காலிகள் கிடைக்க அவர்கள் என்ன பர்னீச்சர் கடையா வைத்து இருக்கிறார்கள். இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கூடிய போது எங்களை எதிர்ப்பாளர்கள் என்றார். ஆம் நாங்கள் எதிர்ப்பாளர்கள்தான். சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள். மோடி குடும்பம் என்பது அவரும் அவரது நாற்காலியும்தான். அவர்கள் என்ன காரணத்திற்காக 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறவேண்டும் சொல்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்து விட்டது.

நாங்கள் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாக்க இங்கு கூடியிருக்கிறோம். ரஷ்யாவில் தேர்தல் நடக்கிறது. அங்கு எதிர்க்கட்சிகள் கிடையாது. ஒரு சம்பிரதாயத்திற்கு தேர்தல் நடக்கிறது. எனவே இந்த முறை பா.ஜ.க வெளியேற்றப்படவேண்டும் என்ற கோஷத்தை முன்வைக்கிறேன். மும்பையில் நாம் எதாவது சொன்னால் அதனை ஒட்டுமொத்த இந்தியாவும் கேட்கும்” என்றார்.

சரத் பவார் பேசுகையில்,” விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், பட்டியலின மக்களுக்கு பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. ஆனால் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. தேர்தல் கமிஷன் அவர்களின் உத்தரவாதத்திற்கு தடை விதித்துவிட்டது. மகாத்மா காந்தி மும்பையில் இருந்துதான் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தொடங்கினார். அதே போன்று இது பா.ஜ.க வே வெளியேறு என்று சொல்லும் நேரம்” என்று தெரிவித்தார்.

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம். 2வது நாளாக சரிந்தது தங்கம் விலை ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம். 2வது நாளாக சரிந்தது தங்கம் விலை ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… 2வது நாளாக சரிந்தது தங்கம் விலை ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வருகிறது.

மார்ச் மாத தொடங்கியதில் இருந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. நேற்று ரூ.80 சரிந்து காணப்பட்ட நிலையில், இன்று கொஞ்சம் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து 48,920 ஆயிரத்துக்கும், கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 6,115க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.80.30க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து ரூ.80,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வரும் மக்களவை தேர்தலில் யாருக்கு வேனாலும் ஓட்டு போடுங்க மோடிக்கு மட்டும் போடாதீங்க

வரும் மக்களவை தேர்தலில் யாருக்கு வேனாலும் ஓட்டு போடுங்க மோடிக்கு மட்டும் போடாதீங்க

* புதிய பிரசாரத்தை தொடங்க உள்ளோம்

* விழுப்புரத்தில் அய்யாக்கண்ணு பேட்டி

விழுப்புரம் : வரும் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு ஓட்டு போடக்கூடாது என்பதை வலியுறுத்தி புதிய பிரசாரத்தை தொடங்க உள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் அய்யாக்கண்ணு தலைமையில் விழுப்புரம் ஆட்சியரிடம் பிரதமர் கிசான் நிதியுதவி திட்டத்தில் விடுபட்ட அனைவருக்கும் நிதிஉதவி வழங்கக்கோரி மனு அளித்தனர். தொடர்ந்த அவர் கூறுகையில், தேர்தல் வந்தால் மட்டும் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். முடிந்தவுடன் எங்களை அடிமைபோல் நடத்துகிறார்கள்.

பிரதமர் மோடி எல்லா விவசாயிகளுக்கும் மாதம் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த தொகையே குறைவு. ஆனால் அறிவித்த தொகையும் விவசாயிகள் அனைவருக்கும் கிடைக்கவில்லை. விவசாயிகளுக்கு எல்லா உதவியும் செய்யப்படும் என தெரிவித்தார்கள், லாபகரமான விலை கிடைக்கும் என கூறினார்கள். ஆனால் குறைந்தபட்ச ஆதார விலைகூட கிடைப்பதில்லை. டெல்லியில் போராட்டம் நடத்தலாம் என்றால் எங்களை போகவிடாமல் தடுக்கிறார்கள்.

டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசுகிறார்கள். இதில் ஒரு விவசாயி இறந்துள்ளார். பிரிவு 19 என்ன சொல்கிறது, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யார் வேண்டுமானாலும் செல்லலாம். தங்களின் உரிமைக்காக பேசலாம், போராடலாம் என்று தெரிவிக்கிறது. ஆனால் பிரதமர்மோடி இந்த சட்டத்தை மதிக்கவில்லை. சர்வாதிகார நாடுகளைபோல் விவசாயிகளை நடத்துகிறார்கள். தமிழகத்தில் விவசாயிகளை ஒடுக்கபார்க்கிறார்கள். எத்தனால், மீத்தேன், பெட்ரோல், டீசல் எடுப்பதற்காக விவசாயம் செய்யவிடாமல் தடுக்கின்றனர்.

இந்த தேர்தலில் மிஷினில் கோளாறு செய்து, பணம் கொடுத்து ஓட்டுவாங்கலாம் என்று பிரதமர் மோடி நினைத்து கொண்டிருக்கிறார். யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள், மோடிக்கு மட்டும் ஓட்டுபோடாதீர்கள் என்று நாடு முழுவதும் அந்தந்த மாநில விவசாய சங்கங்களை திரட்டி பிரச்சார இயக்கம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக 20சதவீத விவசாயிகள் மோடிக்கு வாக்களிக்காமல் இருந்தாலே போதும். இதற்காக டெல்லிக்கு சென்று விவசாய சங்க பிரதிநிதிகளை சந்திக்க உள்ளோம். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டதாக தெரிவித்தார். மாநில செயலாளர் அய்யனார், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மக்களவை தேர்தல் எப்போது? தேதி இன்று அறிவிப்பு!

தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக மக்களவைக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதேபோல ஆந்திரப்பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களின் சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ளது.இந்த சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், மக்களவை மற்றும் நான்கு மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சுமார் 97 கோடி பேர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். இதற்காக 12 லட்சத்திற்கும் அதிக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. நக்சலைட் அச்சுறுத்தல் உள்ள பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலை அமைதியான முறையில் நடத்தவும் அதிகப்படியான வாக்கு சதவீதத்தை எட்டவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.தேர்தல்

பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் கூடுதல் மத்திய பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட உள்ளனர். மேற்கு வங்கத்தில், வன்முறைகள் இல்லாத வகையில் தேர்தலை நடத்துவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட காவல்துறை மற்றும் ஆட்சியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மிகவும் சவால் நிறைந்ததாக கண்டறியப்பட்டுள்ள இந்த மாநிலங்களை தவிர ஜம்மு காஷ்மீரில், குறிப்பாக சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு முதல்முறை தேர்தல் நடைபெறுவதால் கவனம் பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக ஜம்மு காஷ்மீரில் தயார் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்ற இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலையும் மக்களவை தேர்தலுடன் ஒன்றாக நடத்த வேண்டும் என சில கட்சிகள் கோரிக்கை விடுத்தன.“ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமே” – உயர்மட்டக்குழு அறிக்கை!ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அதிகாரம் ரத்து

ஆனால் ஜம்மு காஷ்மீரில் இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெற வாய்ப்பில்லை என இந்த தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019 தேர்தலின்போது மார்ச் 10 ஆம்தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11 தொடங்கி ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23 ஆம் தேதி எண்ணப்பட்டன. இந்த மக்களவைத் தேர்தலை ஏழு கட்டமாக நடத்துவதற்கு ஒரு அட்டவணை தயாராக உள்ளதாகவும், தேவைக்கேற்ப அதிக கட்டங்களாகவோ அல்லது குறைந்த கட்டங்களாகவோ தேர்தல் நடத்த தயாராக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2024 மக்களவை தேர்தல் தேதி | தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட வாய்ப்பு

2024 மக்களவை தேர்தல் தேதி | தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட வாய்ப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், 2024 ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15) அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மாநில வாரியான கள ஆய்வை தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அண்மையில் ஜம்மு – காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் மற்றும் தேர்தல் பணிக்கு தேவையான துணை ராணுவப் படைகள் குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தியது. இதைத் தொடர்ந்து மார்ச் 11, 12, 13-ம் தேதிகளில் ஜம்மு – காஷ்மீர் செல்லும் இக்குழுவினர், மக்களவைத் தேர்தலுடன் ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் நடத்தலாமா என்பது குறித்து கள ஆய்வுகளை நடத்தினர். இதனையடுத்து இன்று மக்களாவை தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயகத் திருவிழா: ஒவ்வொரு ஐந்த ஆண்டும் 543 தொகுதிகள் கொண்ட மக்களவைத் தேர்தல் இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டால் அரசியல் களத்தில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் தொடங்கிவிடும்.

மக்களவைத் தேர்தலை ஒட்டி இப்போதே தேசியக் கட்சிகள் தத்தம் வேட்பாளர்களை அறிவிக்கத் தொடங்கிவிட்டன. பாஜக இதுவரை இரண்டு கட்டங்களாக 267 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற தேசியக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. மாநிலக் கட்சிகளும் கூட்டணி, வேட்பாளர் அறிவிப்பை தீவிரப் படுத்தியுள்ளன. மேற்குவங்கத்தில் மம்தா 42 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என அறிவித்து கவனம் ஈர்த்தார். இவ்வாறு தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது.

தேர்தல் ஆணையர்கள் நியமனம்: இதனிடையெ, புதிய தேர்தல் ஆணையர்களாக சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோர் நேற்று நியமனம் செய்யப்பட்டனர்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகிக்கிறார். தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் ஆணையர் அருண் கோயல் கடந்த 9-ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். இந்நிலையில் மக்களவைத் தேர்தலை தேசம் எதிர்நோக்கியுள்ளதால், சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டனர். சுக்வீர் சிங் சந்து, பஞ்சாப்பை சேர்ந்தவர். எம்பிபிஎஸ், சட்டம் பயின்றவர்.

ஞானேஷ் குமார், 370-வது சட்டப்பிரிவு நீக்கம், காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதில் முக்கிய பணியாற்றியவர். ஐஏஎஸ் அதிகாரிகளான இருவரும்பணி ஓய்வுக்கு பிறகு, தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய நியமனத்துக்கான அரசாணையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று இரவு வெளியிட்டார்.

தேர்தல் பத்திரங்கள் வெளியீடு: அதேபோல், உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, எஸ்பிஐ வங்கி 2019 ஏப்ரல் முதல் 204 பிப்ரவரி 15 வரையில் வழங்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இந்த விவரங்களை மார்ச் 15-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நேற்று தேர்தல்ஆணையம் தேர்தல் பத்திர விவரங்களை அதன் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

இத்தகைய சூழலில் இன்று (வெள்ளிக்கிழமை) 2024 மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவலகள் தெரிவிக்கின்றன.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES