Tuesday , July 1 2025
Breaking News
Home / செய்திகள் (page 5)

செய்திகள்

All News

தென்காசியில் பருவமழை தீவிரம்: குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை…

தென்காசியில் பருவமழை தீவிரம்: குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், குற்றாலத்தின் பிரதான அருவி, ஐந்தருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழை பெய்யும். மலைப் பகுதியில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். குளிர்ந்த தென்றல் காற்றுடன் அடிக்கடி பெய்யும் சாரல் மழை, ஆர்ப்பரிக்கும் அருவிகள் சுற்றுலாப் பயணிகளை குதூகலப்படுத்தும். இதனால் சாரல் சீசன் காலத்தில் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இந்த ஆண்டில் ஜூன், ஜூலை மாதங்களில் சில நாட்கள் சாரல் மழையும், சில நாட்கள் வறண்ட வானிலையும் காணப்பட்டது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து சாரல் மழையின் தீவிரம் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்தது. ஒரு சில நாட்கள் மட்டுமே லேசான சாரல் மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து குறைந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் அடிக்கடி சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை வரை 24 மணி நேரத்தில் குண்டாறு அணைப் பகுதியில் 32.80 மி.மீ., செங்கோட்டையில் 19 மி.மீ., அடவிநயினார் அணையில் 16 மி.மீ., கருப்பாநதி அணையில் 1.50 மி.மீ. மழை பதிவானது. இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது மழையும் பெய்துவருகிறது.

மலைப் பகுதியில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. எனினும் பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவியில் சுற்றலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மீண்டும் சாரல் சீசன் களைகட்ட தொடங்கியுள்ளதால் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

காஷ்மீர் முதல் குமரி வரை ‘பாரத தற்காப்பு கலை பயிற்சி யாத்திரை’… ராகுல்காந்தி அறிவிப்பு!

காஷ்மீர் முதல் குமரி வரை 'பாரத தற்காப்பு கலை பயிற்சி யாத்திரை'... ராகுல்காந்தி அறிவிப்பு!

நாடு முழுவதும் விரைவில் ‘பாரத தற்காப்பு கலை பயிற்சி யாத்திரை’ தொடங்கும் என்று வீடியோ வெளியிட்டு ராகுல்காந்தி கூறியுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, கடந்த 2022-ம் ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்வரை பாரத ஒற்றுமை யாத்திரை நடத்தினார். இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மணிப்பூரில் இருந்து மும்பைவரை பாரத ஒற்றுமை நியாய யாத்திரை (ஜோடோ யாத்ரா) நடத்தினார்.

இந்நிலையில், ராகுல்காந்தி தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், கடந்த பாரத ஒற்றுமை நியாய யாத்திரையின் போது அவர் சிறுவர்களுடன் இணைந்து செய்த தற்காப்பு கலை பயிற்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.அவர்களிடம், தான் ஜப்பானிய தற்காப்பு கலையான அய்கிடோவில் ‘பிளாக் பெல்ட்’ வாங்கியவன் என்றும், ‘ஜியு-ஜிட்சு’ தற்காப்பு கலையில் ‘ப்ளு பெல்ட்’ வாங்கியவன் என்றும் ராகுல்காந்தி கூறுவது வீடியோவில் உள்ளது. தற்காப்பு கலையில் உள்ள தந்திரங்களை அவர் கற்றுக்கொடுத்தார்.

மேலும், ‘பாரத் ஜோடோ’ யாத்திரை போல், விரைவில் ‘பாரத் டோஜோ’ யாத்திரை தொடங்கும் என்று ராகுல்காந்தி அறிவித்துள்ளார். டோஜோ என்பது தற்காப்பு கலை பயிற்சி கூடம் அல்லது பள்ளியை குறிக்கும்.

அந்த பதிவில் ராகுல்காந்தி, “பாரத ஒற்றுமை நியாய யாத்திரையின்போது, தினந்தோறும் மாலை நேரங்களில் தங்கியிருந்த இடங்களில் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபட்டோம். யாத்திரையில் பங்கேற்றவர்களும், அந்தந்த ஊர் இளம் தற்காப்பு கலை பயிற்சியாளர்களும் அதில் பங்கேற்றனர்.உடலை உறுதியாக வைத்துக்கொள்ள எளிதான வழிமுறையாக தொடங்கிய தற்காப்பு கலை பயிற்சி, விரைவிலேயே சமுதாய செயல்பாடாக மாறியது. அந்தந்த ஊர் இளம் பயிற்சியாளர்களும் சேர்ந்து கொண்டனர்.அந்த இளம் வயதினருக்கு தியானம், ஜியு-ஜிட்சு, அய்கிடோ ஆகியவை அடங்கிய கலையை அறிமுகப்படுத்துவதே எங்களது நோக்கமாக இருந்தது.

வன்முறையை மென்மையாக மாற்றுவதன் பெருமையையும், இரக்கமுள்ள, பாதுகாப்பான சமுதாயத்தை கட்டமைப்பதையும் நோக்கமாக கொண்டிருந்தோம். இந்த தேசிய விளையாட்டு தினத்தில், மக்களுடன் எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர்களில் சிலர் இந்த பயிற்சியை மேற்கொள்ள உத்வேகம் பெறுவார்கள் என்று நம்புகிறேன். பாரத தற்காப்பு கலை பயிற்சி யாத்திரை விரைவில் தொடங்குகிறது’ என்று கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

தமிழகத்துக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கவும், படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மேலும் பல புதிய தொழில்களை தமிழகத்தில் உருவாக்கும் முயற்சியாகவும், முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

சென்னையில் இருந்து கடந்த 27-ம் தேதி இரவு விமானத்தில் புறப்பட்ட அவர், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்துக்கு நேற்று காலை சென்றடைந்தார். மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அமெரிக்கா வாழ் தமிழ் மக்கள் பெருந்திரளாக கூடி நின்று, முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சான் பிரான்சிஸ்கோவுக்கான இந்திய துணை தூதர் ஸ்ரீகர் ரெட்டி, தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் உள்ளிட்டோரும் முதல்வரை வரவேற்றனர்.

இந்நிலையில், 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்ப்பட்டுள்ளதாவது:-

1. நோக்கியா நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 450 கோடி ரூபாய் முதலீட்டில், 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், சிறுசேரி சிப்காட்டில் உலகின் மிகப்பெரிய நிலையான நெட்வொர்க் சோதனை வசதி கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

2. பேபால் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே சுமார் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவிற்கான மேம்பட்ட வளர்ச்சி மையம் (Advanced development center focussed on AI) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

3. அமெரிக்க நாட்டின், கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்ட் நகரத்தை தலைமையிடமாக கொண்டு ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்நிறுவனம் கோவையில் பொறியியல் மையத்தை நிறுவி செயல்பட்டு வருகிறது. முதல்வர் முன்னிலையில் ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 150 கோடி ரூபாய் முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கோயம்புத்தூர் சூலூரில் குறைக்கடத்தி உபகரணங்களுக்கான தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி வசதி (Product development and manufacturing facility for Semiconductor equipment) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

4. மைக்ரோசிப் நிறுவனம் 2012 முதல் சென்னையில் இயங்கி வருகிறது. சென்னை மையம் IC வடிவமைப்பு, கணினி உதவி வடிவமைப்பு (CAD), பயன்பாடு மற்றும் மென்பொருள் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. சென்னையிலுள்ள இந்நிறுவனத்தில் சுமார் 550 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

மைக்ரோசிப் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 250 கோடி ரூபாய் முதலீட்டில் 1500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் குறைக்கடத்தி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (R&D Center in Semiconductor Technology) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

5. இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம் கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்நிறுவனம் தொழில் தொடங்கிட கடந்த ஜூலை மாதம் மதுரையில் உள்ள எல்காட்டில் அலுவலக இடத்தை தேர்வு செய்துள்ளது. இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 50 கோடி ரூபாய் முதலீட்டில் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மதுரை எல்காட்டில் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய விநியோக மையம் (Technology and Global Delivery Center) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

6. தமிழ்நாட்டில் அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனம் விற்பனை, சேவை மற்றும் கள ஆதரவு வசதிகளை சென்னையிலும், சேவை மற்றும் கள ஆதரவு வசதிகளை கோயம்புத்தூரிலும் அமைத்துள்ளது. அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை, தரமணியில் செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் உபகரணங்களுக்கான மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் (Advanced artificial intelligence enabled technology development center for semiconductor manufacturing and equipment) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வாறாக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி அறிவிப்பு.. முழு விவரங்கள்..!

டி.என்.பி.எஸ்.சி. தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி அறிவிப்பு.. முழு விவரங்கள்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.105 பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நவம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்கள் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இந்த தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் தற்போது தொடங்கியுள்ளதாகவும் செப்டம்பர் 28ஆம் தேதி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இது குறித்த முழு விவரங்கள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் விண்ணப்பம் தொடர்பான விவரங்கள் விண்ணப்பம் செய்ய கடைசி தேதி மற்றும் அனைத்து விவரங்களும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடைபெற இருப்பதையொட்டி செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்!

சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடைபெற இருப்பதையொட்டி செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்!

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தய நிகழ்வான ‘சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்’ 30.08.2024 முதல் 01.09.2024 வரை சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சி 30.08.2024 முதல் 01.09.2024 வரை மதியம் 12.00 மணி முதல் 2200 மணி வரை நடைபெற இருப்பதால் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெற்கிலிருந்து வரும் வாகனங்கள் காமராஜர்சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, சென்ட்ரல் லைட் பாயின்ட் (மத்திய ரயில் நிலையம்), ஈவிஆர் சாலை வழியாக சென்றடையலாம்.

மவுண்ட் ரோட்டில் வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும். சிவானந்தசாலை மற்றும் கொடி மரச் சாலை முற்றிலும் மூடப்படும்.

வடக்கு பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்த வித போக்குவரத்து மாற்றமும் இல்லை. சென்ட்ரல் லைட்டில் இருந்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம். பல்லவன்சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதையானது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மரச்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அதற்குப் பதிலாக. பல்லவன் சாலை, ஈவிஆர் சாலை, சென்ட்ரல் இரயில்வே நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் வழியாக சென்று தங்கள் சேர வேண்டிய இலக்கை அடையலாம்

கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள். வாலாஜா சாலை. அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ.வி.ஆர். சாலை, ஆர்.ஏ. மன்றம், முத்துசாமி பாயின்ட், பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்கள் செல்ல நண்பகல் 12.00 மணி முதல் 22.00 மணி வரை
செல்ல தற்காலிக தடைசெய்யப்பட்டுள்ளன.

தேசிய விளையாட்டு தின நல்வாழ்த்துக்கள்- எதிர்க்கட்ச்சி தலைவர் திரு.ராகுல் காந்தி

எதிர்க்கட்ச்சி தலைவர் திரு.ராகுல் காந்தி : பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் போது ஜியு-ஜிட்சு பயிற்சி முகாமில் வழக்கத்தின் ஒரு பகுதியாக மாறியது.

இந்த தற்காப்பு கலையின் மூலம் இளைஞர்களின் கவனம், அகிம்சை, சுய பாதுகாப்பு மற்றும் அவர்களின் ஆற்றல் ஆகியவற்றை விளக்க முயற்சித்தனர். இளைஞர்களிடையே இருக்கும் இந்த மென்மையான கலைகள் எளிதில் உணர்வுள்ள மற்றும் பாதுகாப்பான சமூகத்திற்கான கருவியாக மாறிவிடும்.

இது தான் விளையாட்டின் அழகு – நீங்கள் எந்த விளையாட்டில் விளையாடினாலும், அது உங்களை உடல் மற்றும் மனரீதியாக வலுவாக்கும்.

அனைவருக்கும் தேசிய விளையாட்டு தின நல்வாழ்த்துக்கள்.

அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு : திரண்டு வந்த தமிழர்கள் !

அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு : திரண்டு வந்த தமிழர்கள் !

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்து அதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்படி அவர் அழைப்பு விடுத்தார்.அதன்படி தமிழ்நாட்டுக்கு ஏராளமான முதலீடுகள் கிடைத்தன.

இதனைத் தொடர்ந்து சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடும், முதலீட்டாளர்கள் சந்திப்புகளும் நடத்தப்பட்டு, 9 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதன் தொடர்ச்சியாக, உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களை சந்தித்து சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை கொண்டுவரும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அவருக்கு அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரின் விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் அமெரிக்காவின் திமுக அயலக அணியின் சார்பில் நியுயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் (Times Square)ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படம் திரையிடப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க மண்ணில் தரையிறங்கியபோது தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து நெகிழ்ச்சியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க மண்ணில் தரையிறங்கியபோது தாய்த்தமிழ் உறவுகள் அளித்த நெகிழ்ச்சியான வரவேற்பு அளித்தனர்”என வீடியோ வெளியிட்டிருந்தார்.

ரயில்வே அமைச்சருக்கு ரூ.1,001 அனுப்பும் போராட்டம் தொடங்கியதாக செல்வப்பெருந்தகை அறிவிப்பு…

ரயில்வே அமைச்சருக்கு ரூ.1,001 அனுப்பும் போராட்டம் தொடங்கியதாக செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை: ‘தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.1,000 ஒதுக்கியுள்ளது. இதை கண்டிக்கும் வகையில் மக்களிடம் பெறப்பட்ட ரூ.1-ஐ சேர்த்து காசோலையாக ரயில்வே அமைச்சருக்கு ரூ.1,001 அனுப்பும் போராட்டம் இன்று (ஆக.28) முதல் தொடங்கியுள்ளது,’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை கூறியது: ‘தமிழக ரயில்வே திட்டத்த்துக்கு ரூ.1,000 நிதி ஒதுக்கியிருக்கும் மத்திய அரசை கண்டிக்கும் விதமாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மக்களிடம் கையேந்தி ரூ.1 சேர்த்து காசோலையாக ரூ.1,001-ஐ ரயில்வே துறைக்கு அனுப்பும் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். அதன்படி, ரயில்வே அமைச்சருக்கு ரூ.1,001-ஐ இன்று முதல் தவணையாக அனுப்புகிறோம். இதைத் தொடர்ந்து வட்டாரம், நகரம், பேரூர், கிராமங்களில் இருந்து ரூ.1,001 ரயில்வே துறைக்கு அனுப்பும் போராட்டம் தொடரும்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. ஏற்கெனவே பல்வேறு துறைகளுக்கு மத்திய அரசு நியாயமாக நிதி வழங்கவில்லை. இப்போது பள்ளிக் கல்வித் திட்டத்துக்கு நிதி வழங்காமல் தமிழக மக்களை மத்திய அரசு தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தேர்தல் வரை பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை உயர்த்தாத மத்திய அரசு, இப்போது எல்லா துறைகளிலும் விலையை உயர்த்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் 67 சுங்கச்சாவடிகளும், மாநில நெடுஞ்சாலையில் 7 சுங்கச்சாவடிகளும் உள்ளன. இவற்றில் 5 முதல் 7 சதவீதம் கட்டணம் உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான கோடி செலவில் மத்திய அரசு நிறுவிய சத்ரபதி சிவாஜி சிலையை 6 மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்த சிலை நொறுங்கி கீழே விழுந்துள்ளது. எல்லாவற்றிலும் ஊழல், மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவது, அதானி போன்றோருக்கு கடன் தள்ளுபடி, வரிச்சலுகை என்பன போன்ற செயல்கள்தான் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சியின்போதும், கருணாநிதி ஆட்சிக் காலத்திலும் ஏராளமான சிலைகள் நிறுவப்பட்டன. காந்தி சிலை, நேரு, ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி, தமிழன்னை, 133 அடி கொண்ட திருவள்ளுவர் சிலை, கடல் சீற்றம், சுனாமி உள்பட எந்த காலநிலை மாற்றத்தின்போதும் இந்தச் சிலைகளில் சேதம் ஏற்படவில்லை.

கங்கனா ரணாவத் எம்.பி. விவசாயிகளைப் பற்றி கொச்சைப்படுத்தி பேசியதற்கு உலகளவில் கண்டன குரல்கள் வலுத்துக் கொண்டிருக்கின்றன. அது அவரது தனிப்பட்ட உரை என்கிறது பாஜக. விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்திப் பேசியுள்ள அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

குஜராத் மாநில மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசு, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் கண்டுகொள்வதில்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இந்திரா காந்தி பேணிக் காத்தார். அதனை மெருகேற்றினார். தேசத்தின் முகமாக இந்திரா காந்தி இருந்தார். அவர் பற்றி பேச மோடிக்கே தகுதியில்லை. நேற்று முளைத்த காளான் போன்ற அண்ணாமலைக்கும் தகுதி கிடையாது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்திரா காந்தியை இந்த நாட்டின் துர்கா தேவி என பாராட்டினார். இந்திரா காந்தி பற்றி அரைவேக்காட்டுத்தனமாக பேசுவதை அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும்,’ என்று அவர் கூறினார்.

முன்னதாக, காங்கிரஸ் முன்னாள் எம்.பி-யான எச்.வசந்தகுமாரின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு செல்வபெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அமரர் ஹெச். வசந்தகுமார் அவர்களின் 4’ஆம் ஆண்டு நினைவு தினம்…

May be an image of 8 people, wedding and dais

சென்னை சத்யமூர்த்தி பவனில் கன்னியாகுமாரி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் செயல் தலைவருமான அமரர் ஹெச். வசந்தகுமார் அவர்களின் 4’ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அலங்காரிக்கப்பட்ட அவரது உருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் கு.செல்வப்பெருந்தகை அவர்கள்.

“தமிழ்நாடு சிறக்க அயல்நாட்டுக்குச் சிறகு விரிக்கிறேன்” – முதல்வர் மு.க. ஸ்டாலின்!

முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27.08.2024) இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார்.அதாவது தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்க உள்ளார். அப்போது முதல்வரின் தலைமையில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், ‘கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில்தான்’ என்ற தலைப்பில் திமுக தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், ” அன்னை நிலம் பயன் பெறுவதற்கான பயணங்களில் ஒன்றாக, உங்களில் ஒருவனான நான் அமெரிக்காவுக்குப் பயணிக்கிறேன். ஆகஸ்ட் 29 சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்களுடன் சந்திப்பு. ஆகஸ்ட் 31 புலம்பெயர்ந்த தமிழர்களுடன் சந்திப்பு. செப்டம்பர் 2 சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ பயணம். 10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறேன்.’ஃபார்ச்சூன் 500′ நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளைச் சந்தித்து உரையாடவிருக்கிறேன். செப்டம்பர் 7ஆம் நாள் சிகாகோவில் தமிழர்களுடனான மாபெரும் சந்திப்பு. ஆகஸ்ட் 27 தொடங்கி செப்டம்பர் 14 வரையிலான இந்தப் பயண நாட்களின் நோக்கம், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி அடுத்து வரும் பல தலைமுறைகளுக்குப் பயன் தருவதாக இருக்கவேண்டும் என்பதுதான். முதலமைச்சர் அயல்நாடு சென்றிருந்தாலும், தமிழ்நாட்டில் எந்தவொரு பணியும் தடைப்படாமல் நடைபெறுகிறது என்று மக்கள் தரும் சான்றிதழே திராவிட மாடல் அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகும். அந்தச் சான்றிதழை அமைச்சர்களும், திமுக நிர்வாகிகளும் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்தான் பொறுப்பை உங்களிடம் பகிர்ந்து செல்கிறேன்.

ஆட்சிப் பணியும், கட்சிப் பணியும் தொய்வின்றித் தொடர்வதற்கு ஏற்ற வகையில் ஒருங்கிணைப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் ஒருங்கிணைந்து ஒவ்வொருவரும் தங்கள் கடமையினைக் கண்ணியத்துடன் நிறைவேற்ற வேண்டும். கட்டுப்பாடு காக்கின்ற வகையில், செயலில் வேகம் – சொற்களில் கவனம் என்பதை மனதில் நிறுத்திச் செயலாற்றுங்கள். கலைஞரின் தொண்டர்களான உங்கள் மீது உங்களில் ஒருவனான எனக்கு நிறைந்த நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை செயல்வடிவமாக மாறுவதை ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு விசாரிப்பேன். பணிகளைக் கண்காணிப்பேன். தமிழ்நாடு சிறக்க அயல்நாட்டுக்குச் சிறகு விரிக்கிறேன். உங்கள் வாழ்த்துகளுடன் பறக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES