கால்வாய் பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க தாக்கலான வழக்கில் வைகை அணையில் நீர்இருப்பு, மழையால் நீர்வரத்தை பொறுத்து இருபோக பாசனத்திற்கு நீர் வழங்குவது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்வர் என தமிழக அரசு தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மேலப்பட்டி சேவியர் மற்றும் மதுரை விராட்டிபத்தை சேர்ந்த அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபெல் மூர்த்தி அவர்களின் மனைவி திருமதி அருள் நவரத்தினம் தாக்கல் செய்த பொதுநல மனு :- பெரியாறு பிரதான கால்வாயின் ஒருபோக பாசனத்திற்கு 900 கன அடி, திருமங்கலம் கால்வாய் ஒருபோக பாசனத்திற்கு 230 கன அடி வீதம் தண்ணீர் இருப்பு, நீர்வரத்தை பொறுத்து குடிநீருக்காக வைகை அணையிலிருந்து நவ.,15 முதல் 10 நாட்களுக்கு திறந்து விட நவ., 14 ல் தமிழக அரசு உத்தரவிட்டது.
திருமங்கலம் பிரதான கால்வாயில் 230 கன அடி வீதம் ஆண்டு தோறும் செப்டம்பர் 15 முதல் மார்ச் 1 வரை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என 2010ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு முரணாக தற்போது வெளியிட்டது அறிவிப்பு சட்டவிரோதம். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். தற்போது வைகை அணையில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. விவசாயத்திற்கு 10 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறக்க தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். 2010 அரசாணைப்படி 2024 மார்ச் 1 வரை தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும்.
என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தனர்.
அப்போது தமிழக அரசு தரப்பு : இது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது. இருபோக பாசனத்திற்கு அணையில் போதிய தண்ணீர் இல்லை. ஒருபோக பாசனத்திற்கு முழுமையாக தண்ணீர் வினியோகிக்க இயலவில்லை. தற்போது அணையில் நீர் இருப்பு மற்றும் பருவமழையால் நீர்வரத்தை பொறுத்து இருபோக பாசனத்திற்கு நீர் வழங்குவது குறித்து தொழில்நுட்ப ரீதியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்வர் இவ்வாறு தெரிவித்தது. பின்னர் நீதிபதிகள் விசாரணையை அடுத்த வாரம் ஒத்தி வைத்தனர்.