ஆகஸ்ட் 20 பாரத ரத்னா ராஜீவ்காந்தி அவர்களின் 80 ஆவது பிறந்தநாள் இந்தியாவை 21 ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்வேன் என்று உறுதிபூண்ட ராஜிவ்காந்தி உலகமே வியக்கும் வகையில் ஒப்பற்ற சாதனைகளை நிகழ்த்தினார். தமது 40 ஆவது வயதில் இந்திய நாட்டின் இளைய பிரதமராக பொறுப்பேற்று அவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் தான் இந்த நாட்டின் வறுமையை விரட்ட உதவும் என்று நம்பியவர். இன்று அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு அன்றே வித்திட்டவர். நாட்டை எதிர்நோக்கியிருந்த பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு திறந்த மனதுடன் பல முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டவர். பாரத ரத்னா ராஜிவ்காந்தி அவர்களின் 80 ஆவது பிறந்தநாளான ஆகஸ்ட் 20 ஆம் தேதி அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் அவரது திருவுருவப் படத்தை வாகனங்களில் அலங்கரித்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிநெடுக அவரது ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளின் துண்டு பிரசுரத்தை விநியோகிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்நிகழ்வை மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராமம் என அனைத்து நிலைகளிலும் நடத்தி மறக்க முடியாத மாபெரும் தலைவர் ராஜிவ்காந்தியின் நினைவை போற்றுவோம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிக்கை
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் சுரேஷ்கோபி, முல்லைப் பெரியாறு அணை குறித்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிற வகையில் விஷமத்தனமான கருத்துகளை கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் போது, ‘முல்லைப் பெரியாறு அணை தற்போது பாதுகாப்பானதாக இல்லை. எனவே, இந்த அணைக்கு பதிலாக அருகில் புதிய அணை கட்ட வேண்டும். முல்லைப் பெரியாறு அணை இடிந்தால் யார் பொறுப்பு ? நீதிமன்றம் பதில் சொல்லுமா ? அல்லது நீதிமன்றங்களில் இருந்து அத்தகைய முடிவுகளை பெறுபவர்கள் பொறுப்பேற்பார்களா ? இனியும் கேரளாவால் கண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது” என்ற வகையில் பேசி இடுக்கி மாவட்ட மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறார். இத்தகைய கூற்றின் மூலம் சுரேஷ் கோபி தனது அறியாமையைத் தான் வெளிப்படுத்தியிருக்கிறார். கடந்த கால முல்லைப் பெரியாறு அணை குறித்து ஏற்பட்ட பிரச்சினைகளும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும் படிக்காமல் ஏனோ தானோ என்று அரைவேக்காட்டுத்தனமாக ஆதாரமற்ற இத்தகைய கருத்துகளை கூறியிருக்கிறார். இந்த கூற்றின்படி நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
முல்லைப் பெரியாறு அணையை பொறுத்தவரையில் தமிழக நீர்பாசனத்திற்கு பயன்படுகிற அணையாகும். இந்த அணை கேரள மாநிலத்தில் இருந்தாலும், அதை பராமரிக்கிற பொறுப்பு தமிழக பொதுப்பணித்துறைக்கு தான் இருக்கிறது. இதுகுறித்து பிரச்சினைகள் ஏற்பட்ட போது, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியதால் 27.2.2006 இல் அதன் தீர்ப்பின்படி அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என ஆணையிட்டது. இந்த அணையின் வலிமை குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் ஐவர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையின்படி அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும், அதனால் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அறிக்கை கூறியது. இந்நிலையில் கேரள அரசு ஒரு சட்டத்தை இயற்றி தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்க முயற்சி செய்தது. ஆனால், இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் 07.05.2014 அன்று உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு கேரள அரசு இயற்றிய சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணை கட்ட முடியாது, வல்லுநர் குழு அறிக்கையின்படி நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம், புதிய அணை கட்ட வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்றும் தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ்நாட்டின் உரிமைக்கு பாதுகாப்பாக இருக்கும் போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் தமிழ்நாட்டின் நலன்களுக்கு விரோதமாக இத்தகைய கருத்துகளை கூறுவதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி கேரள மாநிலத்திற்கு மட்டும் அமைச்சரா அல்லது இந்தியா முழுமைக்குமான அமைச்சரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியின் பேச்சு குறித்து பிரதமர் மோடி தலையிட்டு ஒன்றிய அரசின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். இந்த கருத்து ஒன்றிய அமைச்சரின் கருத்தா அல்லது பிரதமர் மோடி அரசின் கருத்தா என்பதை அறிந்து கொள்ள தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.
ஏற்கனவே காவிரி பிரச்சினையில் அண்டை மாநிலமான கர்நாடகத்திடம் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிற நேரத்தில் இன்னொரு அண்டை மாநிலமான கேரள மாநிலத்துடன் போராடுகிற நிலைக்கு ஒன்றிய அமைச்சர் சுரேஷ்கோபி தள்ளியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. கூட்டாட்சி தத்துவத்தில் கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்களுக்கு நம்பிக்கை இருக்குமேயானால் இதுகுறித்து அவரது கருத்தை வெளியிட வேண்டும்.
எனவே, மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியின் முல்லைப் பெரியாறு அணை குறித்த கருத்தை பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான தீரர் எஸ். சத்தியமூர்த்தி அவர்களின் 137 வது பிறந்தநாள்….
இந்திய விடுதலை போராட்ட வீரரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான தீரர் எஸ். சத்தியமூர்த்தி அவர்களின் 137 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு முன்புறமாக அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு K Selvaperunthagai எம்.எல்.ஏ. அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மாண்புமிகு மேயர் திருமதி பிரியராஜன் திமுக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் திரு சொர்ண சேதுராமன், அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன், சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாரத ரத்னா ராஜிவ்காந்தி அவர்களின் 80 ஆவது பிறந்தநாள் ஆகஸ்ட் -20 ஆம் தேதி
இந்தியாவை 21 ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்வேன் என்று உறுதிபூண்ட ராஜிவ்காந்தி உலகமே வியக்கும் வகையில் ஒப்பற்ற சாதனைகளை நிகழ்த்தினார். தமது 40 ஆவது வயதில் இந்திய நாட்டின் இளைய பிரதமராக பொறுப்பேற்று அவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் தான் இந்த நாட்டின் வறுமையை விரட்ட உதவும் என்று நம்பியவர். இன்று அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு அன்றே வித்திட்டவர். நாட்டை எதிர்நோக்கியிருந்த பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு திறந்த மனதுடன் பல முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டவர்.
ஜனநாயகத்தில் அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிந்திருப்பதை தடுத்து நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் பஞ்சாயத்து ராஜ், நகர்பாலிகா என்கிற அமைப்புகளை உருவாக்கி மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தை அரசமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் உருவாக்குவதில் வெற்றி கண்டவர். இதன்மூலம் ஜனநாயகத்தை பரவலாக்கினார். இலங்கை தமிழர்களின் 40 ஆண்டுகால பிரச்சினையை தீர்க்க உடன்பாடு கண்டவர். இலங்கையில் தமிழர் ஆட்சியை உருவாக்கி, தமிழை அரியணையில் ஏற்றி, தமிழ் தாயகப் பகுதியை உருவாக்கியவர் ராஜிவ்காந்தி. இந்தியாவின் சிறந்த வல்லமைமிக்க பிரதமராக அவர் சுடர்விட்டார். இந்தியாவை பற்றி ராஜிவ்காந்திக்கு நிறைய கனவுகள் இருந்தது. இந்தியாவும், இந்தியர்களும் உலகில் முன்னணியில் இருக்க வேண்டுமென்று ராஜிவ்காந்தி கனவு கண்டார். அதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். இந்திய நாட்டின் பிரதமராக ஐந்தாண்டுகளில் தேசிய, சர்வதேச அரங்கில் உலகம் போற்றும் வகையிலே சாதனைகளை படைத்து இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற தலைவராக விளங்கினார்.
தமிழ்நாட்டு மக்களோடு ராஜிவ்காந்தி கொண்டிருந்த நெருக்கமும், அன்பும் அளவற்றவை. 1988 ஆம் ஆண்டில் 13 முறை தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிராமம் கிராமமாக அவரே வாகனத்தை ஓட்டிச் சென்று வழிநெடுக மக்களை சந்தித்து அவர்களோடு உரையாடி, அவர்களது பிரச்சினைகளை அறிந்து ஏழை, எளிய மக்கள் மீது அன்பை பொழிந்தவர். தமிழ் மக்களின் பாச வெள்ளத்தில் திளைத்தவர். எதிர்கால இந்தியாவுக்கு இன்னும் 50 ஆண்டுகளுக்கு மக்களின் ஆதரவோடு வழிநடத்தக் கூடிய ஆற்றல்படைத்த தலைவராக திகழ்ந்த ராஜிவ்காந்தி, 1991 தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது, தமிழ் மண்ணில் ஸ்ரீபெரும்புதூரில் பயங்கரவாத சக்திகளின் சதித் திட்டத்தினால் நயவஞ்சகமாக நம்மிடமிருந்து பறிக்கப்பட்டார். அவரது நினைவை தமிழக மக்களிடமிருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.
பாரத ரத்னா ராஜிவ்காந்தி அவர்களின் 80 ஆவது பிறந்தநாளான ஆகஸ்ட் 20 ஆம் தேதி அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் அவரது திருவுருவப் படத்தை வாகனங்களில் அலங்கரித்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிநெடுக அவரது ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளின் துண்டு பிரசுரத்தை விநியோகிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்நிகழ்வை மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராமம் என அனைத்து நிலைகளிலும் நடத்தி மறக்க முடியாத மாபெரும் தலைவர் ராஜிவ்காந்தியின் நினைவை போற்றுவோம்.
தலைவர் திரு. கு .செல்வப்பெருந்தகை
நரேந்திர மோடி அரசியலமைப்பை தாக்குகிறார்.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்குப் (UPSC) பதிலாக ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்’ (RSS) மூலம் அரசு ஊழியர்களை நியமிப்பதன் மூலம், நரேந்திர மோடி அரசியலமைப்பை தாக்குகிறார்.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள முக்கியமான பதவிகளில் லேட்டரல் என்ட்ரி மூலம் ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் SC, ST மற்றும் OBC பிரிவினரின் இடஒதுக்கீடு வெளிப்படையாகப் பறிக்கப்படுகிறது.
நாட்டின் உயர்மட்ட அதிகாரத்துவம் உட்பட அனைத்து உயர் பதவிகளிலும் தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதித்துவம் பெறவில்லை என்று நான் எப்போதும் கூறி வந்தேன்.
இதை சரி செய்வதற்கு பதிலாக, குறுக்குவழி மூலம் அவர்கள் உயர் பதவிகளில் இருந்து மேலும் வெளியே தள்ளப்படுகிறார்கள்.
இது UPSCக்குத் தயாராகும் திறமையான இளைஞர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகவும், தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதியின் மீதான தாக்குதலாகவும் உள்ளது.
ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரதிநிதிகள், முக்கிய அரசாங்கப் பதவிகளை ஆக்கிரமிப்பதன் மூலம் என்ன செய்வார்கள் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் SEBI. அங்கு முதல்முறையாக தனியார் துறையைச் சேர்ந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிர்வாக அமைப்பு மற்றும் சமூக நீதி இரண்டையும் புண்படுத்தும் இந்த தேச விரோத நடவடிக்கையை இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்க்கும்.
இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர, ‘ஐ ஏ எஸ்’ பணியை தனியார்மயமாக்குவதுதான் ‘மோடியின் உத்தரவாதம்’.
– மக்கள் தலைவர் திரு . ராகுல் காந்தி.
உலக மனிதாபிமான தினம்
உலக மனிதாபிமான தினம் என்பது, மனிதகுலத்திற்கான உலகளாவிய முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசு எடுத்த முயற்சிகள், வறுமை ஒழிப்பு, கிராமப்புற மேம்பாடு மற்றும் சமூக நீதி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த நாள் மனிதாபிமான காரணங்களை ஆதரிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறதோடு, வாழ்க்கை மற்றும் சமூகங்களை மேம்படுத்துவதற்கான பங்களிப்புகளை அங்கீகரிக்கிறது.
திண்டுக்கல்லில் இந்தியன் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தென் மண்டல மாநாடு…
இந்தியன் பத்திரிக்கையாளர்கள் சங்கம் தென் மண்டல மாநாடு திண்டுக்கல்லில் இன்று காலை 10 மணிக்கு பிச்சாண்டி பில்டிங் வருவாய் துறை அலுவலர் சங்கத்தில் திரு பி.பி நடராஜன் மாநில துணை அமைப்பாளர், ஐபிசி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் வரவேற்புரை திண்டுக்கல் மாவட்ட தலைவர் திரு. சந்திரன் மற்றும் திண்டுக்கல் மாவட்ட செயலாளர், பி.ஆர்.டி ராஜா அவர்கள் வரவேற்புடன் இனிதே நிகழ்ச்சி ஆரம்பித்தது.
முகமது மைதீன் மாநில செயலாளர் அவர்கள் சிறப்புரை மற்றும் பின்னர் விழா பேருரை ஐபிசி மாநில தலைவர் திரு. சாம் திவாகர் அவர்கள் ஆற்றினார்கள். திரு. பிரபு மாநில துணைத்தலைவர், திரு. செல்லப்பாண்டி மாநில துணைத்தலைவர், திரு. அன்பரசு மாநில அமைப்பாளர், திரு. துரைப்பாண்டி மாநில செயற்குழு உறுப்பினர், திரு. சந்திரசேகர பெருமாள் மாநில செயற்குழு உறுப்பினர், திரு. பாலமுருகன் ஐடி விங் மாநில செயலாளர், திரு. போஸ் மாநில செயற்குழு உறுப்பினர், திரு. அலெக்சாண்டர் மாநில செயற்குழு உறுப்பினர், திரு. ஜெயபிரகாஷ் மாநில செயற்குழு உறுப்பினர், திரு. மலர் சின்னத்தம்பி மாநில செயற்குழு உறுப்பினர், திரு. அருண்குமார் மாநில செயற்குழு உறுப்பினர், திரு. ஸ்டாலின் மேற்கு மாநில துணை செயலாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழா சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் ஐபிசி மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
திரு. காதர் சுல்தான் கரூர் மாவட்ட துணைத் தலைவராக இம்மாநாட்டில் ஐபிசி மாநில தலைவர் திரு. சாம் திவாகர் அவர்களால்அறிவிக்கப்பட்டார்.
டாக்டர் ஜி.சஞ்சீவ ரெட்டி Ex. MP அவர்களுக்கு பாராட்டு விழா காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார்…
இன்று (17.08.2024) தமிழ்நாடு தேசிய மின்சார தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழு, மாநில மாநாடு மற்றும் ஐ.என்.டி.யு.சி (INTUC) யின் அகில இந்திய தலைவர் டாக்டர் ஜி.சஞ்சீவ ரெட்டி Ex. MP அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் முப்பெரும் விழாவில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சசிகாந்த் செந்தில் (Retd. IAS) அவர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன்.
காமராஜர் அறக்கட்டளை மூலமாக மாணவர்களுக்கு ‘கல்வி உதவித் தொகை’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் வரும் (20.08.2024) செவ்வாய் கிழமை அன்று காமராஜர் அறக்கட்டளை மூலமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு ‘கல்வி உதவித் தொகை’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மேற்கண்ட நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து மூன்று மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் இன்று (17.08.2024) சென்னை, சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடைபெற்றது.
காமராஜர் அவர்களின் நினைவு இல்லத்தைப் பார்வையிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை
விருதுநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போது, தமிழகத்தில் கல்விப் புரட்சி, அதிகப்படியான அணைக்கட்டுகள், மக்களுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை வழங்கி மக்களின் நலனுக்காக மட்டுமே வாழ்ந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு இல்லத்தைப் பார்வையிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை அவர்கள்.