கரூர்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பை வெளியிடுவேன் என கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கரூரில் அவர் நேற்று பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் அண்ணாமலை நான் பெண் என்பதால் பிழைத்துக் கொண்டு போகட்டும் என அவர் விட்டு வைத்திருப்பதாக சொல்லியுள்ளார். இதை சொல்ல அண்ணாமலை யார் என நான் கேட்கிறேன்.
அண்ணாமலையால் என்னை என்ன செய்ய முடியும். அமலாக்கத் துறையை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வேண்டுமானால் என் வீட்டிற்கு அமலாக்கத் துறையை அனுப்பட்டும். என் வீட்டில் கஞ்சி போட்ட காட்டன் புடவைகளை தவிர வேறு எதுவுமே இல்லை.
மணல் மாபியாக்களிடம் பணம் வாங்கி அண்ணாமலை போல் ஆடம்பர வாழ்க்கையை நான் வாழவில்லை. வீட்டுக்கு ரூ 3.70 லட்சம் வாடகை குறித்த கேள்விக்கு அண்ணாமலை இதுவரை பதில் சொல்லவில்லை. அவரை மாதிரி நான் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் இல்லை. பெண்கள் மீது தனிப்பட்ட முறையில் கழிச்சடை அரசியல் நடத்தும் அரசியல்வாதி அண்ணாமலை.
கர்நாடகா மாநிலத்தில் காவல் துறையில் இருந்த கருப்பு ஆடு. 2018 ஆம் ஆண்டு கர்நாடகா தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் தனிப்பெரும் கட்சியாக இருந்த பாஜகவின் எடியூரப்பா மூன்று நாள் முதல்வராக இருந்தார். அப்போது சிக்மக்ளூரில் எஸ்பியாக இருந்தவர் அண்ணாமலை. அப்போது எடியூரப்பா அரசை காப்பாற்றவே அண்ணாமலை ராம்நகருக்கு மாற்றப்பட்டார்.
அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களை பணம் வாங்கிக் கொண்டு வளைத்து போடுவதற்காகவே அண்ணாமலை ராம்நகருக்கு அனுப்பப்பட்டார். அது தோல்வி அடைந்தது. இதனால் அண்ணாமலை மீண்டும் சிக்மக்ளூருக்கே சென்றுவிட்டார். அங்கிருந்தும் பெங்களூர் சென்றார். காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
அரசியல் அரிச்சுவடி கூட தெரியாத அண்ணாமலைக்கு தமிழக பாஜக தலைவர் பதவி கிடைத்தது, மணல் மாபியாக்களில் 60 லட்சம் ரூபாய் வாங்கியதாக சென்னை பாஜக அலுவலகத்தில் வேலை செய்தவர் வீட்டுக்கு அமலாக்கத் துறை சென்றது. ஆனால் சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்கவில்லை. இது ஏன் என கேட்டதற்கும் அமலாக்கத் துறை பதில் இல்லை.
அரசு பதவியில் இல்லாத அண்ணாமலைக்கு எதற்கு இசட் பிரிவு பாதுகாப்பு, இதனால் ஆண்டுக்கு ரூ 3 கோடி செலவாகிறது. எம்பி என்ற முறையில் நான் விமானத்தில் முதல் வகுப்பில் கூட பயணிப்பதில்லை. இப்படிப்பட்ட நிலையில் அவர் என்னை எப்படி கேள்வி கேட்கலாம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு அண்ணாமலையின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும்.
அந்த சமயத்தில் அண்ணாமலை எங்கிருக்க வேண்டுமோ அங்கிருப்பார். கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமாரிடம் நான் பணம் வாங்கியதற்கான ஆதாரம் இருந்தால் அண்ணாமலை தாராளமாக வெளியிடட்டும். அண்ணாமலையின் சொத்து மதிப்பு குறித்து நான் அவசியம் ஏற்பட்டால் வெளியிடுவேன் என ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார்.