உலகையே வாட்டி வதைத்த கொரோனா கால தடுப்பு பணிகளைப் பாராட்டி தமிழக அரசானது காவல் துறையினருக்கு ரூ.58.50 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
இதன்மூலம் ஒவ்வொருவருக்கும் ரூ.5,000 என்ற அடிப்படையில் 1.17 லட்சம் கொரோனா தடுப்பு பணியாற்றிய காவல் துறையினருக்கு உதவித்தொகை வழங்கப்படுவதாக தமழ்நாடு அரசு கூறியுள்ளது.
இதையடுத்து போக்குவரத்து துறையினருக்கும் தமிழக அரசு ஒரு பொன்னான செய்தியைக் கூறியுள்ளது. லட்சக்கணக்கான போக்குவரத்து ஊழியர்கள் பயன் பெறும் விதமாக ரூ.38 கோடி மதிப்பில் பணப்பலனை தமிழக அரசு விடுவித்துள்ளது.
மேலும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது 9% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படியை கணக்கீடு செய்ய ஏஐசிபிஐ குறியீடு இதன் மூலகாரணமாக உள்ளது. அரசு ஊழியர்களுக்கான இந்த அகவிலைப்படி ஆண்டிற்கு இரு முறை உயர்த்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான அகவிலைப்படி கடந்த மாதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஓய்வூதியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே 46 சதவிகிதம் அகவிலைப்படி வழங்கப்பட்டுவரும் நிலையில் தற்போது 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புள்ளிகளின் சராசரியை வைத்து அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டுவரும் நிலையில் தற்போது அப்புள்ளிகள் வேகமாக உயர்ந்துகொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆதார் எண் இணைத்தல், ஓய்வூதிய ஆவணங்கள் மற்றும் இது தொடர்பான அறிக்கைகள், மருத்துவ காப்பீடு அட்டை பதிவு செய்தல், வாழ்நாள் சான்றிதழ் பெறுதல், வருமான வரி தாக்கல் செய்தல், படிவங்கள் பெறுதல்,இது தொடர்பான படிவங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் போன்ற இணையவழி சேவைகளை மின்வாரிய ஊழியர்கள் பெறுவதற்காக தமிழ்நாடு அரசு கைபேசி செயலி ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி விவகாரம் தற்போதைய தமிழக அரசியலில் முக்கிய விவாதங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
மக்களவைத் தேர்தல் வெற்றியை தொடர்ந்து உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வண்ணம் உள்ளது. ஆனால் அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருப்போம் என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார் உதயநிதி. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு பிறகு துணை முதல்வர் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியது மீண்டும் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது.
மற்ற அமைச்சர்களும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி பற்றி அடிக்கடி பேசி வருகிறார்கள். இந்த நிலையில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கூறுகையில், துணை முதல்வராக பதவி வகிக்க அவருக்கு அனைத்து விதமான தகுதியும் உள்ளது என்று கூறியுள்ளார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முன்பாக உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சென்னை: தமிழ்நாடு காவல்துறை சார்பில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து உறுதிமொழியை முதலமைச்சர் முன்னிலையில் மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்டனர். போதைப் பொருட்கள் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள், அலுவலர்களுக்கு முதல்வர் பதக்கம் வழங்கினார்
கோயம்புத்தூரில் அமைய உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) தயார் செய்ய மாநில அரசு டெண்டர் விடுத்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தின் மேம்பாட்டிற்கான டிபிஆர் தயாரிப்பதற்கும் வடிவமைப்பு ஆலோசகரை ஈடுபடுத்துவதற்கும் டெண்டர் முன்வைக்கப்பட்டுள்ளதாக உயர்நிலை விளையாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலேயே அமைய போகும் பெரிய கிரிக்கெட் மைதானமாக இது இருக்கும். இதன் மூலம் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இது இருக்கும். ஏலதாரர்கள் ஒரு மாதத்திற்குள் ஏலத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சேலத்தையும் கொச்சியையும் இணைக்கும் NH 544 இல் கோயம்புத்தூர் நகரத்திலிருந்து 16 கிமீ தொலைவில் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்காக ஒதுக்கப்பட்ட இடம் அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாநில சிறைத்துறையிடம் 200 ஏக்கர் நிலம் உள்ளது, அதில் 198 ஏக்கர் டிபிஆர் தயாரிப்பு முடிந்ததும் மைதானத்திற்காக கையகப்படுத்தப்படும்.
தமிழ்நாடு விளையாட்டுத் துறையானது நாட்டிலேயே மிகப்பெரிய பார்வையாளர்கள் அமரும் திறன் கொண்ட இந்த அரங்கத்தை நிர்மாணிக்க உள்ளது. அதாவது குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தை விட பெரிய மைதானமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 லட்சம் பேர் ஒரே நேரத்தில் அமரும் வகையில் இதை கட்ட உள்ளனர்.
உறுப்பினர்கள் இருக்க நவீன ஹோட்டல் அறைகள், விஐபி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அறைகள், அதிநவீன வீரர்களின் ஓய்வறை, ஊடகம் மற்றும் ஒளிபரப்பு ஆகியவற்றுக்கான ஐந்து நட்சத்திர வசதிகளைக் கொண்டிருக்கும் அறைகள், உணவு விடுதிகள் மற்றும் பொதுமக்களுக்கான உணவகங்கள், காட்சியகங்கள் மற்றும் கிரிக்கெட் அருங்காட்சியகம். உட்புற பயிற்சி அரங்கம், சிறப்பு உள்ளரங்க பீல்டிங் மண்டலம், பிட்ச் க்யூரேஷன் பயிற்சி, விரிவுரை அரங்குகள் மற்றும் உயர் செயல்திறன் மையம் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு உள்ளது.
வீரர்களின் வசதிக்காக தனியாக உணவகம், ஸ்பா, தங்குமிடங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் என்று அசத்தலான திட்டங்களை வழங்கும்படி யோசனைகளை தமிழ்நாடு அரசு வரவேற்று உள்ளது. சமீபத்தில் கோவை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றொரு முக்கியமான பணியையும் மேற்கொண்டுள்ளார். கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்வதற்கான முதற்கட்டப் பணிகளையும் தொடங்கினார்.
இங்கே அமைய உள்ள மைதானத்தில் கிளப்ஹவுஸ், ஸ்போர்ட்ஸ் பார் மற்றும் உணவகம் ஆகியவையும் கட்டுமான திட்டத்தில் உள்ளன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் தொகுதியில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தையும் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தையும் நேரடி கேஸ் ஸ்டடிகளாக சிபாரிசு செய்து அதைவிட பிரம்மாண்டமாக, லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியம் போல கலைநயத்தோடு கட்ட முடிவு செய்துள்ளனர்.
வீரர்கள், நடுவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை கூட்டங்களுக்கான இடங்களை உருவாக்குவது உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றன. உயர் தரமான இருக்கை வசதி தொடங்கி பல நவீன வசதிகள் இங்கே வர உள்ளன. தொழில்துறையில் சிறந்து விளங்கும் கோவை மாநகரம், விளையாட்டுத்துறையிலும் உலகமே உற்று நோக்குகிற வகையில் மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை சென்னையில் வரும் 17-ம் தேதி அதிகாரப்பூர்வமாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிடுகிறார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்து, கடந்த ஜூன் 4-ம் தேதி ரூ.100 மதிப்பிலான நாணயம் வெளியிடப்பட்டது.
இந்த நாணயத்தை அதிகாரப்பூர்வமாக வரும் 17-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில், தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார்.இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
சென்னை: ஆகஸ்ட் 19ம் தேதிக்கு பிறகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், உதயநிதி துணை முதல்வராவதற்கான காலம் கனிந்துவர வில்லை என்று கூறியிருந்தார்.
உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்று, மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் கோயம்புத்தூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், பொன்முடி, அன்பில் மகேஸ், கீதா ஜீவன், முத்துச்சாமி, எ.வ.வேலு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, கோவை எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .மாணவர்களுக்கான திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கு டெபிட் கார்டு அட்டையை வழங்கினார்.
இதனிடையே தமிழ்ப் புதல்வன் திட்ட விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், “துணை முதல்வர்… சாரி… அமைச்சர் உதயநிதி.. ஆக. 19-ம் தேதிக்குப் பிறகுதான் உதயநிதியை துணை முதல்வர் எனக் கூற வேண்டும்.” என்று உடனடியாக மாற்றிக்கூறினார்.
ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவது குறித்து கோரிக்கை வலுத்திருக்கிறது, ஆனால் பழுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதை பார்க்கும் போது, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகப்போவது உறுதி என்பது தெரிகிறது. இம்மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார். அப்போது பொறுப்புகள் அனைத்தும் யாரிடமாவது ஒப்படைக்கப்படும். அந்த வகையில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை அறிவித்தால், அவர் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என்று பல அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
மீனவ குழுவுக்கு நாடாளுமன்ற வளாகத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியே வந்து அவர்களை சந்தித்து பேசினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22ஆம் தேதி முதல் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. மத்திய நிதியமைச்சர் மக்களவையில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இடையே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க மீனவப் பிரதிநிதிகள் குழு வந்தது.
ஆனால், அவர்களுக்கு நாடாளுமன்ற வளாகத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கான அனுமதிச் சீட்டு அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனை அறிந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்து, வரவேற்புப் பகுதிக்குச் சென்று மீனவ குழுவை சந்தித்துப் பேசினார்.
ராகுல் காந்தி மீனவ குழுவை சந்திக்க வெளியே வந்தபோது செய்தியாளர்களுடன் பேசிய அவர் கூறியதாவது:
‘நாங்கள் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். இது எங்கள் உரிமை. ஆனால் மீனவர் குழுவை அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. விவசாயிகள் பற்றி நான் அவையில் பேசியிருந்தேன். மீனவர்களைத் தடுக்கவில்லை என்று அவைத் தலைவர் கூறினார். ஆனால், இப்போது அவர்கள் மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். நான் தொடர்ந்து மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய வேலையைச் செய்ய விடுங்கள். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
சென்னை : சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுக்கு ஆறுமுறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, குடியரசு தினம் (ஜன. 26), உலக தண்ணீா் தினம் (மாா்ச் 22 ), தொழிலாளா் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக. 15), மகாத்மா காந்தி பிறந்த தினம் (அக். 2), உள்ளாட்சிகள் தினம் (நவ. 1) ஆகிய தினங்களில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்களில் ஊராட்சிகளின் வளா்ச்சிப் பணிகள், எதிா்காலத் திட்டங்கள் ஆகியன குறித்து விவாதிக்கப்படும். இந்நிலையில், மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் மே தினமான 1ம் தேதி தமிழகத்தில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை.
இதைத் தொடர்ந்து, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் பொன்னையா சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையில், “ஆகஸ்ட் 15ம் தேதி காலை 11 மணி அளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இடம், நேரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்புகள் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தூய்மையான குடிநீர் விநியோகம், இணைய வழி வரி செலுத்தும் சேவை, இணைய வழி மனை பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல் உள்ளிட்ட குறித்து ஆலோசிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மகாத்மா தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22ஆம் தேதி முதல் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. மத்திய நிதியமைச்சர் மக்களவையில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்யும் முக்கிய மசோதா இன்று தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெங்காயம் மற்றும் இதர காய்கறிகளின் விலை உயர்வுக்கு எதிராக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் வெங்காய மாலை அணிந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை பாஜக உறுதி செய்ய வேண்டும். மகாராஷ்டிரா விவசாயிகள் மீதான ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும், போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளுக்கு நீதி வழங்குவதே எங்களது நோக்கம் என கோஷமிட்டனர்.
சென்னை: தமிழக அரசின் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் நாளை (ஆக.9) முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.
இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘அரசுப் பள்ளிகளில் பயின்ற, ஏழை, எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசுப் பள்ளி மாணவரின் உயர்கல்விச் சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ்ப் புதல்வன் எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்’ என இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை நாளை (9.8.2024 அன்று) கோவை மாநகரில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் ஏறத்தாழ 3 லட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்றுப் பயன் அடைவார்கள்.
இந்த திட்டத்திற்காக தமிழக அரசு 360 கோடி ரூபாயை இந்த ஆண்டிற்கு அனுமதித்துள்ளது. பொருளாதார வசதிக் குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் பள்ளிப் படிப்புக்குப் பின் உயர் கல்வியைத் தொடர முடியாத நிலையில் இருந்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர உதவுகிறது.
கல்லூரி செல்லும் மாணவர்களின் உள்ளங்களில் தன்னம்பிக்கையை வளர்க்கிறது, கற்கும் ஆர்வத்தைப் பெருக்குகிறது. பெற்றோரின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கிறது. குடும்பங்களின் வளத்தை மேம்படுத்துகிறது. உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது. தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை இந்திய அளவில் மேலும் உயர்த்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் புதுமைப் பெண் திட்டம் குறித்து, ‘அரசுப் பள்ளிகளில் படித்துக் கல்லூரிகளில் சேரும் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் 3 லட்சம் மகளிருக்கு மேல் பயன்பெற்றுள்ளனர். அதேபோல, பள்ளிக் கல்வி முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்திட, அவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் வாயிலாக ஆண்டுதோறும் சராசரியாக 7,72,000 மாணவர்கள் மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்கிறார்கள்.
இவர்களில் கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் தமிழகத்தில் மிக அதிகமாகும். உயர்கல்வி சேர்க்கையில் இந்தியா முதலிடம் என்னும் மிகப் பெரிய சாதனையை தமிழகம் படைத்துள்ளது.
கல்வியே உயர்ந்த செல்வம். இந்தக் கல்விச் செல்வத்தை ஏழை, பணக்காரர், சாதி, மத வேறுபாடுகள் எதுவும் இன்றி எல்லோருக்கும் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழகத்தில் உயர்கல்வியை வளர்க்கும் நோக்கில் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து தொடர்ந்து படிக்கவேண்டும் என்பதற்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை சென்னை அரசு பாரதியார் மகளிர் கல்லூரியில் 5.9.2022 அன்று தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் வழக்கமாகக் கல்லூரிகளில் சேரும் மாணவிகளைவிடக் கடந்த ஆண்டில் கூடுதலாகக் கல்லூரிகளில் சேர்ந்து மகளிர் பயன் பெறுகின்றனர்.
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் நிதியாண்டில் 2,09,365 மாணவியர்கள் பயனடைந்து வந்த நிலையில், 2023-2024-ஆம் நிதியாண்டில் சுமார் 64,231 மாணவிகள் கூடுதலாக இணைந்து 2,73,596 மாணவியர்கள் பயனடைந்துள்ளனர் என்பதே இத்திட்டத்தின் வெற்றிக்கு அடையாளமாகும். புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை சுமார் 3,28,280 மாணவியர்கள் பயனடைந்துள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ், 2022-2023 ஆம் நிதியாண்டில் ரூ.100.11 கோடியும், 2023-2024 ஆம் நிதியாண்டில் ரூ.271.66 கோடியும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் வீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. புதுமைப் பெண் திட்டத்திற்கென 2024-2025 ஆம் நிதியாண்டிற்கு ரூ.370.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2024 முதல் ஜுலை 2024 வரை ரூ.95.61 கோடி செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சிறப்பு வாய்ந்த திட்டமானது 2024-2025 ஆம் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.’ என்று கூறப்பட்டுள்ளது.