கருப்பூரம் நாறுமோ?
நாற்றம் என்னும் நல்ல தமிழ்ச்சொல்லை அதற்கு உரிய பொருளில் நாம் பயன்படுத்துவது இல்லை. மாறாக, அதை முற்றிலும் எதிர்நிலைப் பொருளில் பயன்படுத்துகிறோம். “அழுகிய தக்காளி நாற்றம் அடிக்கும்” என்று பிழைபட எழுதுகிறோம். “எலி செத்துக் கிடக்கிறது. அதுதான் நாறுகிறது” என்று சொல்கிறோம். இப்படிச் சொல்வது தவறு என்பது நம்முள் எத்தனை பேருக்குத் தெரியும்?
நாற்றம் என்பது நல்ல மணத்தைக் குறிக்கும். “கற்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?” என்று மனமுருகிப் பாடுவார் ஆண்டாள் நாச்சியார். ‘நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா’ என்பார் கபிலர்.
‘முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல்’ என்று வள்ளுவர் மலர் மணத்தினைக் குறிக்கவே இச்சொல்லைப் பயன்படுத்துகிறார். ஆக நல்ல வாசனையைக் குறிக்கும் சொல்லே நாற்றம் என்பதாகும்.
இனி மனைவி வைக்கும் சாம்பாரைப் பாராட்ட விரும்பினால், “நீ வைத்த சாம்பார் நன்றாக நாறுகிறது!” என்று சொல்லுங்கள். (பின்னர் ஏற்படும் எதிர்வினைக்கு நான் பொறுப்பேற்கமாட்டேன்!)
யாராவது உங்களை நாறுவாயன் (நாறவாயன்) எனச் சொன்னால் அதைப் பாராட்டு மொழியாகக் கருதி நன்றி சொல்லுங்கள்.
கெட்ட வாடை வீசும்போது அதைத் தெரிவிக்க இனி நாற்றம் என்னும் சொல்லைத் தவிர்ப்போம்.
மாற்றுச்சொல் என்ன என்றுதானே கேட்கின்றீர்?
துர்நாற்றம் அடிக்கிறது, முடை நாற்றம் வீசுகிறது என்று சொல்லிப் பழகலாமே.
‘அருகாமை’ என்னும் அழகிய சொல்லையும் உரிய பொருளில் நாம் பயன்படுத்துவதில்லை. அருகில் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் அருகாமை. அண்மையைச் சுட்ட அருகில் என்னும் சொல்லையும், சேய்மையைச் சுட்ட அருகாமை என்னும் சொல்லையும் பயன்படுத்த வேண்டும். ஆனால் நடைமுறையில் ‘எங்கள் வீடு சிவன் கோவிலுக்கு அருகாமையில் உள்ளது’ என்று எழுதுகிறோம். ‘அருகில் உள்ளது’ என எழுதினால் சரியாக இருக்கும்.
முனைவர் அ.கோவிந்தராஜூ,
துச்சில்: கனடா.