Tuesday , July 29 2025
Breaking News
Home / தமிழகம் / வைகோ அறிக்கை*
NKBB Technologies

வைகோ அறிக்கை*

*இந்திய விஞ்ஞானிகளைப்பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன்!*

*வைகோ அறிக்கை*

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய, விண்வெளிப் பயணங்கள் மனிதகுலத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டு வந்திருக்கின்றது. இன்று எத்தனையோ ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்கள் விண்ணில் சுழன்று கொண்டு இருக்கின்றன; அதன் விளைவுகளை நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றோம். எடுத்துக்காட்டாக, தொலைக்காட்சிகள், நம் எல்லோரது கைகளிலும் நிலையாக இடம் பெற்றுவிட்ட அலைபேசிகள் எல்லாமே, செயற்கைக் கோள்களின் உதவியோடுதான் இயங்கிக் கொண்டு இருக்கின்றன என்பதை நாம் அறிவோம்.

அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவும் விண்வெளி ஆய்வுகளைத் தொடங்கி, வெற்றிகரமாக நடைபோட்டு வருகின்றது. எழுபதுகளில் ஆர்யபட்டா, பாஸ்கரா எனத் தொடங்கி, நூற்றுக்கணக்கான செயற்கைக் கோள்களை, விண்வெளியின் சுற்றுப்பாதையில் இந்திய விஞ்ஞானிகள் நிலை நிறுத்தி இருக்கின்றார்கள்.

ஒரு காலத்தில், தென் அமெரிக்காவின் கயானா, ரஷ்யா என பிற நாடுகளின் உதவியோடுதான் இந்திய செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. ஆனால், படிப்படியாக இந்தத் துறையில் இந்தியா தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டது. ஸ்ரீ ஹரிகோட்டாவில் ஒரு ஏவுதளத்தை உருவாக்கியது. ராக்கெட்டுகளை வடிவமைப்பதற்குத் தேவையான கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை, வளர்ந்த நாடுகள் தர மறுத்த நிலையில், இந்திய விண்வெளிப் பொறியியல் அறிஞர்களே, அந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கிச் சாதனை படைத்தனர். அதன்பிறகு, வரிசையாக எத்தனையோ நாடுகளின் செயற்கைக் கோள்களையும் இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்ணில் ஏவி, சாதனை படைத்துப் பெருமை சேர்த்துள்ளனர்.

அடுத்த கட்டமாக, நிலவில் ஒரு கலத்தை இறக்கி ஆய்வு செய்திடவும், அடுத்த கட்டமாக, விண்வெளி வீரர்களை அனுப்பவும் இந்திய விஞ்ஞானிகள் திட்டமிட்டுப் பணியாற்றி வருகின்றனர். அதன் தொடக்கமாக, சந்திரயான் விண்கலப் பயணங்கள் அமைகின்றன. கடந்த சில நாள்களாக, இந்தியா மட்டும் அல்ல, உலகின் அனைத்து நாடுகளுமே சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் கலத்தின் பயணத்தை உற்றுநோக்கிக் கவனித்து வந்தனர். கடந்த 23 நாள்களாக விண்வெளியில் வெற்றிகரமாகச் சுழன்று வருகின்ற நிலையில், நிலவைத் தொடுகின்ற வேளையில், தொடர்புகளை இழந்தது மிகப்பெரிய வேதனை ஆகும்.

இந்தப் பயணம், வெற்றி பெறவில்லை; என்றாலும் இது தோல்வி அல்ல. இப்போதைக்குத் ஒரு சிறிய தடை ஏற்பட்டு இருக்கின்றது. அவ்வளவுதான். இதற்காக மனம் தளர வேண்டியது இல்லை. யாரும் இந்த முயற்சியைக் குறை கூறவும் இல்லை. கூடிய விரைவில், இந்திய விஞ்ஞானிகள் சாதித்துக் காட்டுவார்கள். இஸ்ரோ தலைவர் தமிழகத்தைச் சேர்ந்த சிவன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழுவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறோம்

செய்தி : நா.யாசர் அரபாத்

 

 

Bala Trust

About Admin

Check Also

தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்…

உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES