மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் வேலையிழந்த 540 ஜொமோட்டோ ஊழியர்கள்
முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களில் ஜொமோட்டோவும் ஒன்று, கடந்த சில வருடங்களில் இந்த நிறுவனங்களில் வளர்ச்சி அபரிமிதமானது. நாடு முழுவதும் பெரும்பாலான பெரிய நகரங்களில் ஜொமோட்டோ சேவை உள்ளது. டெலிவரி, வாடிக்கையாளர் சேவை, பிற சேவைகள் என இந்த நிறுவனத்தில் மட்டும் பல லட்சம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஹரியானா மாநிலம் குருக்ராமில் உள்ள ஜொமோட்டோ நிறுவனத்தில் வேலை செய்து வந்த சுமார் 540 பணியாளர்களை திடீரென வேலையில் நீக்கியுள்ளது அந்நிறுவனம். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “குருக்ராமில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றிய 540 பேர் அதாவது 10% ஊழியர்களை நாங்கள் பணியிலிருந்து நீக்குகிறோம். அவர்களுக்கு அடுத்த 2 அல்லது 4 மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படும்.
ஜொமோட்டோ நிறுவனம் சமீப காலமாக தொழில்நுட்பம் சார்ந்த சில மாற்றங்களை முன்னெடுத்து வருகிறது. வணிகம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அதைக்கொண்டு வாடிக்கையாளர் சேவை தீர்மானத்தின் வேகத்தை நாங்கள் வியக்கத்தக்க முறையில் மேம்படுத்தியுள்ளோம். இதனால் தற்போது 7.5% ஆர்டர்களுக்கு மட்டுமே சேவை தேவைப்படுகிறது. இது கடந்த மார்ச் மாதத்தில்15% ஆக இருந்தது. இதன் விளைவாகவே ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு டெலிவரி அல்லாத எங்களின் அணிகளில் 1,200-க்கும் மேற்பட்டவர்களை பணியில் அமர்த்தியுள்ளோம். மேலும் பல ஆயிரக்கணக்கான டெலிவரி பாய்களையும் வேலையில் சேர்த்துள்ளோம். தொழில்நுட்பம், தரவு, தயாரிப்பு போன்ற பணிகளில் இன்னும் நாங்கள் பலரை பணியில் சேர்த்துக்கொண்டுதான் உள்ளோம் ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதமும் இதேபோல் ஜொமோட்டோவின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றிய 60 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி ; சிவா