சென்னை,செப்.19:-
பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நல அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறையின் இயக்குனர் ஆகியோர்களுக்கு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.
அந்தக் கோரிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:-
போலி ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் வேலைக்கு சென்று குடிவரவு அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட 4000 இந்தியர்கள் இந்திய தூதரக உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இதில் 2500 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மீதம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, உத்திர பிரதேஷ், மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 15 பேர் மட்டும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஏராளமானார் போலி ஏஜென்ட்களின் நயவஞ்சக வார்த்தைகளை நம்பி சுற்றுலா விசாவில் வேலைக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என்பது வருத்தமளிக்கிறது. இருப்பினும் மலேசியா குடி வரவு அதிகாரிகள் இவர்களை தஸ்தா வேஜ்கள் அடிப்படையில் கண்டறிந்து கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே Not To Land என்ற முத்திரையிட்டு வந்த விமானத்திலேயே தாயகம் திருப்பி அனுப்பி வைக்கின்ற சம்பவங்கள் தினசரி நடந்தேறிக் கொண்டிருக்கின்றது.
அதே நேரத்தில் மலேசியாவில் விசா இல்லாமல் இருக்கும் நபர்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தின் ஒப்புதலின்படி அவர்களை சிறையில் அடைக்கும் பணிகளையும் குடிவரவு அதிகாரிகள் சிறப்பாக செய்து வருகின்றனர். மலேசிய அரசாங்கம் பொது மன்னிப்பு வாய்ப்பை ஜூலை, 2022 மாதத்துடன் நிறுத்திக் கொண்டதால் விசா இல்லாமல் இருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப ரூபாய் 60 ஆயிரம் (3100 ரிங்கிட்) அபராதமாக செலுத்தி நாடு திரும்ப வேண்டும் என்ற சூழ்நிலை தற்பொழுது உள்ளது.
இதையெல்லாம் நன்கு அறிந்த போலி ஏஜெண்டுகள் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கிலும் மற்றவர்களின் வாழ்க்கையை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கிலும் நயவஞ்சகத்துடன் பணத்தைப் பெற்றுக் கொண்டு இந்தியாவில் இருந்து தாய்லாந்து நாட்டிற்கு விமான மார்க்கமாக அழைத்துச் சென்று பிறகு தாய்லாந்து நாட்டிலிருந்து மலேசியா நாட்டிற்கு சட்டவிரோதமாக ஊடுருவச் செய்யும் வேலைகளை செய்து வருவது வேடிக்கையாக உள்ளது. எல்லையை கடக்கும் பொழுது குடிவரவு அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக எல்லையை கடப்பவர்களுக்கு வாழ்நாள் சிறை என்ற ஆபத்தை உணராமல் செயல்படுவது வருத்தத்தை அளிக்கின்றது. சில நேரங்களில் சட்டவிரோதமாக எல்லையை கடக்கும் பொழுது அந்நிய சக்திகள் ஊடுருவல் என்று அந்நாட்டு ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தும் அபாயமும் உள்ளது.
அந்நிய நாட்டுச் சிறையில் இந்தியன் மற்றும் தமிழன் மண்டியிட்டு கிடக்க கூடாது. அதனால் இச்செயலை செய்யும் போலி ஏஜெண்டுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது பற்றி விரிவான விழிப்புணர்வுகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தனது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.