மதுரை அப்போலோ மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.இந்த சந்திப்பில் மருத்துவ புற்றுநோயியல் நிபுணர்கள் டாக்டர் முத்துக்குமாரசுவாமி, தேவானந்த், தீனதயாளன், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள் சர்பராஜன், பாலுமகேந்திரா மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் சதீஷ்சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் கலந்துரையாடல் நடந்தது.புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் முத்துக்குமாரசுவாமி கூறுகையில், பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதன்மையானது. பெண்களிடையே புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் மார்பகப் புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் கணிசமானவை. காரணம், பெண்களின் தயக்கம். அந்தரங்கப் பிரச்சினைகளை வெளியே சொல்வதில் பெண்களுக்கு எப்போதும் தயக்கம் இருக்கும். அதனால்தான் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக அக்டோபர் மாதத்தை மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வு மாதமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த மாதத்தை ‘பிங்க் மாதம்’ என்றும் அழைக்கிறார்கள்.மார்பகப் புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், அதிலிருந்து முழுமையாக மீண்டு விடலாம். மார்பகப் புற்றுநோயைச் சுயபரிசோதனை மூலம் நாமே எளிதில் கண்டறியலாம். 18 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்கள் மாதம் ஒரு முறையாவது மார்பக சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம். முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பக சுயபரிசோதனையுடன், தேவை எற்பட்டால் மருத்துவமனைக்குச் சென்று முறையான பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றார்.இதுகுறித்து புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் தேவானந்த் தெரிவிக்கையில், புற்றுநோய் பாதிப்பால் இறக்கும் விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தே வருகிறது.மார்பகப்புற்று நோயை போக்குவதில் மருத்துவதுறை பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய்க்கு சிறந்த அறுவை சிகிச்சைகள் வழங்கப்படுகிறன்றன. குறிப்பாக மார்பகப் பாதுகாப்பு அறுவைசிகிச்சை முதல் ஆன்கோபிளாஸ்டிக் மார்பக அறுவைசிகிச்சை வரை வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், மார்பக அறுவை சிகிச்சையின் துறையானது, இம்யூனோ தெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை வாயிலாக முன்கூட்டியே கண்டறியப்பட்டு நோய் தீவிரத்தை குறைக்க முடியும் என்றார்.இதில் சீஓஓ நீலகண்ணன் மதுரைமண்டலம், நிகில் திவாரி- ஜிஎம் - ஆபரேஷன், மணிகண்டன் - ஜிஎம் - மார்க்கெட்டிங், டாக்டர் பிரவீன் ராஜன் - ஜேடிஎம்எஸ் ஆகியோர் பங்கேற்றனர்.