ரிஷப் பந்த் இந்திய அணியில் நீடிப்பது பற்றி பல கேள்விகள் பலதரப்பிலிருந்து எழுந்து வந்தாலும் கம்பீர், சேவாக், யுவராஜ் சிங், கபில்தேவ் ஆகியோர் ரிஷப் பந்த்தின் திறமையை மதித்து அவர் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி கூறியுள்ளனர்.
இந்நிலையில் விரேந்திர சேவாக், கூறும்போது, “அணி நிர்வாகத்திலிருந்து யாராவது ஒருவர் ரிஷப் பந்த்திடம் பேச வேண்டும். நான் தத்துவார்த்தமாகத்தான் எனக்கு இதே நிலை ஏற்பட்ட போது பார்த்தேன், ரிஷப் பந்த்தும் அப்படித்தான் பார்க்க வேண்டும். யார் வேண்டுமானாலும் சொதப்ப முடியும், ஆனால் பயிற்சியாளர், கேப்டனின் ஆதரவு அவருக்கு வேண்டும். ரிஷப் பந்த்தான் தன் ஆக்ரோஷ அணுகுமுறையை விட்டு விடாமல் ஆடுவதா அல்லது சீரான முறையில் அணிக்காக திறமையை நிரூபிக்கும் வழிமுறைக்குச் செல்வதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
நான் ஒரு 20 முறை சொதப்பியுள்ளேன், பிறகுதான் ஸ்கோர் செய்ய தொடங்கினேன். ஆனால் எனக்கு அணி நிர்வாகத்தின் ஆதரவு இருந்தது. அந்த ஆதரவினால்தான் என் பாணி ஆட்டத்தை மாற்றிக் கொள்ளாமல் நான் என் பார்மையும் மீட்டெடுக்க முடிந்தது.
இதே போல்தான் தோனி தன் இயல்பான ஆக்ரோஷ ஆட்டத்தை ஆடினார், ஆனால் அணி தோற்றது, இதனையடுத்து கேப்டன் ராகுல் திராவிட், தோனியிடம் சில வார்த்தைகள் பேசி அறிவுரை வழங்கினார், இது தோனியிடம் மாற்றத்தைக் கொண்டு வந்தது. ராகுல் திராவிட் எப்படி விரும்பினாரோ அந்த வகையில் தோனி மாற்றிக் கொள்ள முடிந்தது. ஆம், தன் இயல்பான ஆட்டத்தைக் குறைத்துக் கொண்டு பினிஷிங் செய்யும் கலையைக் கற்றார் தோனி.
அதே போல் ரிஷப் பந்த்தும் மாற வேண்டும், ஷாட் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். அவரிடம் பிரமிக்கத்தக்க திறமை உள்ளது, ஷாட் தேர்வில் மட்டும் தேர்ந்து விட்டார் என்றால் அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்திய அணியில் அவரை அசைக்க முடியாது” இவ்வாறு கூறினார் சேவாக்.