உலக கண்ணொளி தினத்தை முன்னிட்டு கண்தானத்திற்காக அழைப்பிதழ் அச்சிட்டு அசத்திய திருச்சி தம்பதியினர்….
உலக சுகாதார அமைப்பின் 2002 அறிக்கையின் படி, உலகில் உள்ள 45 மில்லியன் கண் பார்வையற்றோரில் 80 விழுக்காட்டினர் 50 வயதிற்கும் அதிகமானோர் ஆவர். கண் பார்வையற்றோரில் 90 சதவீதமானோர் வறிய நாடுகளில் வாழ்கின்றனர். மேலும், கண் பார்வையின்மைக்கு முக்கியமான காரணிகளான கண் புரை நோய், கண் அழுத்த நோய் போன்றவற்றுக்கு இலகுவாகவும், மலிவாகவும் சிகிச்சை அளிக்க முடியும். பன்னாட்டு அரிமா சங்கங்கள் கண் பார்வையின்மையைத் தவிர்க்க உதவும் சில பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து முதன் முதலாக 1998, அக்டோபர் 8 ஆம் நாள் உலக கண்ணொளி நாளைக் கடைப்பிடித்தது. இந்த நிகழ்வு பின்னர் உலக சுகாதார அமைப்பின் விசன் 2020 என்ற பன்னாட்டுத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதங்களில் இரண்டாவது வியாழக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
உலக கண்ணொளி தினத்தை முன்னிட்டு திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் மற்றும் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் நூதன முறையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்
மண்ணுக்குள் புதைப்பதை மனிதனுள் விதைப்போம் என அழைப்பிதழ் அச்சடித்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்கள். அழைப்பிதழில் எண்ணற்ற உடன்பிறவா சகோதர சகோதரிகள் கண் தானத்திற்காக காத்திருக்கிறார்கள். ஒருவர் தன் வாழ்நாளிற்குப் பிறகு தனது கண்ணை தானமாக அளிப்பதன் மூலம் எண்ணற்ற பார்வையிழந்த சகோதர சகோதரிகள் யாருக்கேனும் இருவர் வாழ்வில் பார்வை அளிக்க முடியும். தன் வாழ்நாளிற்குப் பிறகு எரிக்கவோ, புதைக்கவோ போகிற உடலிலிருந்து கண்களை எடுத்து பார்வையற்றோருக்கு பொருத்தும் போது உயிர் பிரிந்தாலும் உலகை பார்க்க தன் விழி பயன்படும் வகையில் அமையும். ஒரு வயதிற்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கண் தானம் வழங்கலாம். விழி வெண்படல பாதிப்பினால் பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை வழங்க கண் தானம் உதவும் . தானம் ஒன்றாக இருந்தாலும் இரண்டு நபர்களுக்கு பார்வை வழங்க இயலும். அவர்களுக்கு மனித சமுதாயத்திற்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் கண் தானம் செய்வோர் என்கிற வரணும் கார்னியா எனப்படும் விழி வெண்படலத்தில் பாதிப்பால் பார்வை இழப்பிற்கு ஆளான கண் தேவைப்படுவோர் என்கிற வரனும் இணைந்து பார்வையற்றோருக்கு பார்வை வழங்க இருக்கின்றனர். கண் தானம் வழங்க விரும்பும் நாட்டின் நலன் காக்கும் நல்லோர்களும், அறிஞர்களும், பொதுமக்களும், மகளிர்களும், இளைஞர்களும், திருநங்கையர்களும், கல்லூரி தோழர்களும், தோழியரும் மற்றும் சுற்றமும் நட்பும் தன் சுய விருப்பப்படி தன் வாழ்நாளிற்கு பிறகு பார்வையற்ற சகோதர சகோதரிகளுக்கு யாருக்கேனும் தனது விழிகளை தானமாக வழங்க ஒப்புதல் அளித்து தனது உறுதிமொழியை நிறைவேற்ற தன்னுடைய குடும்பத்தினரை நியமிப்போம். இறந்தவுடன் கண் வங்கி மருத்துவருக்கு தகவல் தெரிவித்தால் இருப்பிடத்திற்கு வந்து கண்களை தானமாக பெற்றுக் கொள்வார்கள். தானமாகப் பெறப்பட்ட கண்களை பெற்ற கண் வங்கிகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கண்கள் முழுமையாகவோ அல்லது கருவிழியை மட்டும் பிரித்து குளிர்சாதன பெட்டியில் 4 டிகிரி செல்சியஸில் பாதுகாக்கப்பட்டு தானமாக பெறப்பட்ட கண்களை அதிகபட்சமாக 48 முதல் 72 மணி நேரம் வரை பாதுகாத்து பார்வைக்காக காத்திருப்போருக்கு தகவல் தெரிவித்து 24 மணி நேரத்தில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்து விடுவார்கள். எச்ஐவி /எய்ட்ஸ் வெறிநாய்க்கடி, கல்லீரல் ஒவ்வாமை, தொற்றுநோய், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் கண்களை தானமாக வழங்க இயலாது என்று அழைப்பிதழ் அச்சடித்து உள்ளார்கள் அவ்வண்ணமே கோரும் விஜயகுமார் தங்கள் அன்புள்ள வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் என அழைப்பிதழ் அச்சிட்டு பொதுமக்களுக்கு வழங்கி வருவது நூதனமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.