ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் பின்பற்றப்படும். அவை அவர்களின் வாழ்க்கை முறையில் பிரதிபலிக்கும். அவ்வகையில் குக் தீவு பணத்தாளில் சுறா மீன் மீது தேவதை அமர்ந்து கடலில் பயணம் செய்வது போல் படம் அச்சிடப்பட்டிருக்கும். அதன் கதை என்னவென்றால் தேவதையை கடல் அரசனுக்கு நிச்சயித்துள்ளார்கள். கடலில் மிதக்கும் தீவில் அரசன் உள்ளதால் தேவதை மிதக்கும் தீவிற்கு செல்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றார். கடல் ஜீவராசிகளிடம் கடல் அரசனிடம் செல்ல உதவுமாறு வேண்டுகோள் வைக்கின்றார். அப்பொழுது ஒரு சுறா மிதக்கும் தீவிற்கு செல்ல உதவுகிறது. தொலைதூரம் செல்வதால் தேவதை இளநீர்க்கான தேங்காயை எடுத்துக்கொண்டு சுறா மீது அமர்ந்து கடல் தீவு நோக்கி பயணம் செல்கிறார். தாகம் ஏற்படும் பொழுது இளம் தேங்காவினை சுறா செதில் மீது குத்தி இளநீரை அருந்துகிறார். மூன்று முறை இளநீர் அருந்தும் பொழுது சுறாவிற்கு வலி ஏற்படுவதால் கடலில் விட்டு விடுகிறது அப்பொழுது தேவதை உதவுமாறு கூக்குரலிட சுறாவின் தலைவர் மிதக்கும் தீவிற்கு கொண்டு சென்று கடல் அரசனிடம் சேர்க்க உதவுகிறார். இப் புராணக்கதையைப் பிரதிபலிக்கும் வகையில் பணத்தாளில் படம் அச்சிடப்பட்டிருக்கும் பின்புறம் படகும் மரபொம்மை அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இது தீவு மக்களின் நம்பிக்கையினை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. தற்பொழுது கலாச்சாரங்கள் முன்னேறி இருக்கும் காலகட்டத்தில் கடந்தகால நம்பிக்கையினை பணத்தாளிலும் நாணயங்களிலும் அச்சிட்டு உள்ளார்கள்.
மேலும் குக் தீவானது நியூஸிலாந்து நிர்வாகத்தில் தன்னாட்சியாக செயல்படும் தீவு ஆகும். நியூசிலாந்து குடியுரிமை பெற்றவர்கள் .இத்தீவில் வசிக்கின்றார்கள்.இவ்வாறு உள்ள சுவாரஸ்யமான தகவல்களை திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் பிரதி மாதம் நூலாக வெளியிட்டு வருகிறது அவ்வகையில் குக் தீவு பணத்தாளில் இனாவும் சுறாவும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூலின் கட்டுரையினை சேகரிப்பு கலைஞர் சந்திரசேகரன் எழுதியுள்ளார் நூலினை விஜயகுமார் தொகுத்துள்ளார். நூலினை மூத்த சேகரிப்பு கலைஞர் அசோக் காந்தி வெளியிட சங்க தலைவர் விஜயகுமார் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் மதுரை அஞ்சல்தலை சேகரிப்பாளர் காதர் ஹூசைன், யோகேஷ், இளங்கோவன், உள்ளிட்டோர் பங்கேற்றார்கள் முன்னதாக செயலர் குணசேகரன் வரவேற்க, சாமிநாதன் நன்றி கூறினார்.